"துருப்பிடித்துப் போன ஈரல்" கண் கலங்கவைத்த பதிவு...


நான் எனது மருத்துவ மேற்படிப்புக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலையில் கடமையை மேற்கொள்ளும் போது நடந்த சம்பவம்.

காலையில் மிக விரைவாக எனது வாட்டில் அனுமதிக்கப்பட்ட பேசண்டுகளை வழமை போன்று பார்த்துக்கொண்டிருந்த போது, 15 வயதுடைய பெண் பிள்ளை ஒன்றும் வாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய கட்டிலின் அருகே சென்ற போது அவருடைய அம்மாவும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். “ நம மொகக்த, மொகக்த உனே “ என்று சம்பாஷனை தொடர்ந்தது. 

மஹத்தயா என்று ஆரம்பித்த அவர் 2 வாரமாக பிள்ளைட கண் மஞ்சலாக இருப்பதாகவும் , ஒரு மாதமாக தனது மகள் எதையோ இழந்த மாதிரி இருப்பதாகவும் கூறினார். மேலும் சில கேள்விகளைக் கேட்ட நான், அவரைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். இது சீரியசான  ஒரு பிரச்சனையாக இருக்கும் என ஆரம்ப கட்டத்திலேயே விளங்கியது. இதுக்கு இன்னும் சில பரிசோதனைகள் அவசியம் என்று கூறி அடுத்த பேசணைப் பார்க்க நகர்ந்தேன். 

அடுத்த முறை அந்த பிள்ளையைப் பார்க்கும் போது மிகவும் சோர்ந்தபடி காணப்பட்டார். “ இப்ப எப்படி இருக்கு” என்று நான் கேட்ட போது “நேற்றிலிருந்து ஒழுங்கா சாப்பிர்ரா இல்ல, நிறய தடவை சத்தி எடுத்திட்டா மஹத்தயா” என்று அம்மா கூறினார். அவருடன் மேலும் கதைத்து விட்டு நேற்று அனுப்பிய பரிசோதனைகளை நோட்டமிட்ட போது பெரும் அதிர்ச்சியடைந்தேன். “என்ன இந்த சின்ன வயசில ஈரல் முற்றாக செயலிழந்து விட்டதா” ,என்னால் நம்பவே முடியவில்லை. உடனடியாக ஸ்கேன் பரிசோதனையை செய்யுமாறு இன்டர்ன் டொக்டர்களுக்கு கூறினேன். 

அந்த ரிபோர்ட்டும் ஈரல் முற்றாக பழுதடைந்ததை மேலும் உறுதிப்படுத்தியது. இதை அந்த பிள்ளையின் அம்மாவிடம் ஆசுவாசமாக தெரிவித்த போது, “மஹத்தயா எனக்கு ரெண்டு பிள்ளைதான், இவ ஒன்னு இவட தம்பி ஒன்னு. அப்பா கூலி வேலை செய்ர , எவ்வளவு காசு வேணுமென்டாலும் தாறன், எப்பிடியாவது என்ட புள்ளைய காப்பாத்துங்க’ என்று அழுத குரல் வாட்டு முழுக்க எதிரொலித்தது. 

ஒரு மாதிரியாக அம்மாவை சமாளித்த நான், இந்த பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் பரிசோதனைகளை செய்ய ஆரம்பித்தோம். அனேகமான அறிக்கைகள் நெகடிவ் என்றே காட்டியது. மேலும் சில டெஸ்டுகளை ஓடர் செய்த போது , சீரம் செருலோபிளாஸ்மின் ( Serum Ceruloplasmin) என்ற டெஸ்ட்டின் அளவு குறைவு என்று காட்டியது. “என்ன இந்த பெண்ணுக்கு நமது புக்குகளில் மாத்திரம் படிச்ச நோயாக இருக்குமோ “ என்று நினைத்து மேலும் சில நோயை உறுதிப்படுத்தும் டெஸ்டுகளை எனது கன்சல்டனின் ஆலோசனைக்கு இணங்க ஓடர் செய்தேன். “அந்த ரிபோட்ர ரிசல்ட் வாரத்துக்கு 5 நாளாகுமாம்” என்று லெப்பில் இருந்து தகவல் வந்தது. 

நாட்கள் நகர நகர பிள்ளையின் உடலில் ஈரல் முற்றாக செயலிழந்ததற்கான மாற்றம் தெரிய ஆரம்பித்தது. “வயிறும் காலும் வீங்கிட்டு டொக்டர், சாப்பிர்ராவும் இல்ல , சத்திதான் எடுக்கா, காச்சலும் வந்து வந்து போகுது” என்னு பிள்ளையின் அம்மா கவலையுடன் தெரிவித்தார். மேலும் ஈரல் செயலிழப்பால் ஏற்படும் அறிகுறிகளைக்குறைக்க மருந்துகளை ஆரம்பித்தோம். பிள்ளையின்  பெற்றோர்கள் டெய்லி அழுவதும் வந்து கதைப்பதுமாக நாட்கள் நகர்ந்தது. டெஸ்ட் ரிபோட் சில நாட்களிற்கு பின் வந்தது. எல்லா ரிபோட்டுகளும் நம்ம புக்கில் படித்த நோய்தான் என்னு உறுதிப்படுத்தியது.

அதுதான் வில்சன் நோய் (  Wilson’s disease) . இது பரம்பரை அலகுகளால் ( genetics) கடத்தப்படக்கூடிய, 1/30000 பெயருக்கு ஏற்படும் ஒரு அரிதான நோயாகும். உடம்பில் உருவாகும் செம்பை ( copper) கழிவகற்ற உதவும் ஒரு ஜீனில் ( ATP7B) ஏற்படும் பிரச்சனையே இந்த நோய்க்குறிய காரணமாகும். இதனால் உடம்பில் உருவாகும் செம்பானது ஈரலால் கழிவகற்ற முடியாமல் ஈரல், மூளை மற்றும் இதர அங்கங்களில் படிய ஆரம்பிக்கும். இவ்வாறு துருப்பிடித்துப்போன அங்கங்கள் தனது செயற்பாட்டை இழக்க ஆரம்பிக்கும். மிக முக்கியமாக ஈரலும், மூளையும்  பழுதடையும். இந்த பிள்ளைக்கும் இதுவே ஈரல் பழுதானதிற்கான காரணமாகும். 

“நோயைக் கண்டு பிடிச்சாச்சு” என்று உற்சாகத்துடன் அதற்குறிய பெனிசிலமைன் ( Penicillamine) என்ற மருந்தை ஆரம்பித்தோம். இதுக்குப் பிறகு சரியாகிடும் என்ற அதீத நம்பிக்கையில் அவசரமாக சிகிச்சைகளைத் தொடர்ந்தோம். முதல் நாள் முன்னேற்றத்திற்குறிய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது. ஓரளவு சந்தோசத்துடன் அவர் நல்லா வந்திடுவார் என்று பிரார்த்தனைகளுடனும் எங்களது கடமை தொடர்ந்தது. 

நைட் ஒன்கோல் இருக்கும் போது போன் ரிங் செய்தது. மறுபக்கத்தில் இன்டர்ன் டொக்டர் அவசரமாக என்னை வருமாறும் அந்த பிள்ளைக்கு பிட்ஸ் ( fits) வருவதாகவும் தொடர்ச்சியாக இரத்த வாந்தி எடுப்பதாகவும், உணர்வற்று இருப்பதாகவும் டென்ஸனுடன் கூறினார். 

“ என்னடா நடந்த, நல்லாத்தானே இருந்தா, கரல்பிடித்த மூளையும், ஈரலும் வேலை செய்யுதில்லையோ 

என்று பல விதமான எண்ணங்களுடனும் 

“யா அல்லாஹ் இந்தப்பிள்ளையை எப்பிடியாவது காப்பாத்து” என்று மனது நிறைய துஆக்களுடனும் ஜெட் வேகத்தில் ஓடினேன். 

அங்கே போன போது பிள்ளை மிக மோசமான நிலையில் காணப்பட்டது. உடனடியாக அவசர சிகிச்சைகளை ஆரம்பித்த நாங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (ICU) பிள்ளையை மாற்றினோம். 

ICU வில் சுவாசிப்பதற்கு வென்டிலேட்டரில் இணைக்கப்பட்டார். சிறிது நேரத்தில் பிரசர் குறைய ஆரம்பித்தது. அதை அதிகரிப்பதற்குறிய மருந்துகளை ஆரம்பிக்கும் போதே, உடம்பின் எல்லா பகுதிகளாலும் இரத்தம் வெளியேற ஆரம்பித்தது. உடம்பின் அனைத்து அங்கங்களும் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருந்தது. எங்களது முயற்சியைக் கைவிடாது, விடிய விடிய பல வைத்தியர்கள், தாதியர்கள், இதர வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் ஓடிக்கொண்டு இருந்தார்கள் தூக்கத்தையும் மறந்து. எல்லோருடைய பிரார்த்தனையும் பெயர்தெரியாத ஊர் தெரியாத இந்த பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்றே இருந்தது. நேரம் செல்ல செல்ல அவள் மோசமாகிக் கொண்டிருப்பதையே உணர முடிந்தது. கடவுளின் நியதிக்கு முன்னால் நவீன மருத்துவம் தோற்றது, அவளின் கடைசி மூச்சை விட்டு மரணித்துவிட்டாள். ஒரு நிமிடம் ICU ஸ்தம்பித்துவிட்டது சத்தமே இல்லாமல். 

 நான் மனதில் பலத்த யோசனையுடன் எப்படி பெற்றோர்களை சந்திக்கப்போகிறேனோ என்று எண்ணியவாறு ICU வை விட்டு வெளியேறும் போது விடிந்து விட்டது. என்னைக் கண்டதும் அம்மாவும் அப்பாவும் ஓடோடி வந்து “ மகள் எப்டி இருக்கா மஹத்தயா “ என்று கேட்ட போது எனது கவலையை மறைத்துக்கொண்டு, மனதைக் கல்லாக்கிக் கொண்டு “அவர் மிக மோசமாக இருக்கிறார் என்றும் பின்னர் ஓரிரு நொடிகளில் அவர் இறந்து விட்டார் என சொன்னேன். “ மகே ரத்தரங் துவ “ என்று பெற்றோர்கள் ஹொஸ்பிட்டல் அதிர போட்ட சத்தம் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. 

இறைவனால் எமக்குத்தரப்பட்ட அருட்கொடைகள் எண்ணிலடங்காதது.  ஒரு சிறிய ஜீனில் ஏற்பட்ட குறைபாட்டால் உடலங்கள் எல்லாம் இயங்க மறுக்கின்றது. மரணம் எமக்கு எந்த நேரத்திலும் வரலாம். எவ்வளவுதான் மனிதன் மருத்துவத்தில் உச்ச நிலை அடைந்தாலும், மரணத்தை விஞ்ச யாராலும் முடியாது. 

எனவே, எமக்கு கிடைக்கப்பெற்ற பெரும் செல்வமான உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து நல்ல மக்களாக வாழ வல்ல இறைவன் அருள்புரிவானாக. 


குறிப்பு - இன்னுமொரு கவலையான விடயம் அவர்கள் இரண்டு வாரத்தின் பின் தனது ஒரே மகனைக் கூட்டி வந்து செக் பண்ணிய போது அவருக்கும் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, ட்ரீட்மண்ட் ஆரம்பிக்கப்பட்டது.


Dr. A.H.M. Asmy Hasan
MBBS ( SL), MD ( Col),
விஷேட பொது வைத்திய நிபுணர், 
தள வைத்தியசாலை- காத்தான்குடி.
"துருப்பிடித்துப் போன ஈரல்" கண் கலங்கவைத்த பதிவு... "துருப்பிடித்துப் போன ஈரல்"  கண் கலங்கவைத்த பதிவு... Reviewed by Editor on September 08, 2020 Rating: 5