(ஜெமீல் கல்குடா)
கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களின், எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இடமாற்றங்கள் யாவும் 2021.01.01ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக அறிவித்துள்ளார்.
இவ்விடமாற்றம் தொடர்பில், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுக்களின்செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோரப்பட்ட இடமாற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான, கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விடமாற்றங்கள் தொடர்பாக, உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அறிவிக்கப்படும் எனவும், குறித்த திகதிக்குப் பின்னர் காலதாமதமாகி கிடைக்கும் மேன்முறையீடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் பிரதிப் பிரதம செயலாளரினால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின்போது, உத்தியோகத்தர்களுக்குரிய பதிலீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆளணி பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்றத்தினை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதிப் பிரதம செயலாளர் அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.
மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவை, மொழிபெயர்ப்பாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணியாளர் சேவை என்பனவற்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வருடாந்த இடமாற்றத்திற்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
வருடாந்த இடமாற்றம் கிடைக்கப் பெற்றுள்ள எந்தவொரு உத்தியோகத்தருக்கும் சிறப்புத் தன்மை காட்ட வேண்டாம் எனக் கேட்டுள்ள செயலாளர், அவ்வாறான சிறப்புச் செயற்பாடு இடமாற்றங்களை செயற்படுத்துவதற்கு தடங்கல்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு வருடாந்த இடமாற்றக் கட்டளைகள் கிடைக்கப்பெற்ற அனைத்து உத்தியோகத்தர்ளினதும் இடமாற்றக் கட்டளைகள் ஒரு மாற்றமும் இன்றி, மேலும் செயற்பாட்டில் உள்ளதனால், அவர்களது இடமாற்றக் கட்டளைகள் செயற்படுத்தப்பட்டது எனக்கருதி, இடமாற்றக்கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பில் சென்று இடமாற்றப் பட்டியலை பார்வையிடலாம்
https://drive.google.com/file/d/1N_P3MsmPQAX79vr6BpVcpyL0D59_-lfr/view?usp=sharing
