36 வருட அரச பணியிலிருந்து ஓய்வு பெறும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி - ஆணையாளர் எம்.சி.எம்.செரீப்

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராகவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் கடமையாற்றி எம்.சி.எம். செரிப் 36 வருட அரச சேவையின் பின் 13.11.2020 ஓய்வு பெறுகின்றார். கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் செயலகப்பிரிவின் மூதூர் நகரின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள அக்கரைச்சேனைக் கிராமத்தில் கேணிக்காட்டில் முஹம்மது காசிம், ஆமினா உம்மா தம்பதியினருக்கு மகனாக 1960.11.16ஆம் திகதி பிறந்த எம்.சி.எம். செரிப் திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் இலங்கை நிருவாக சேவை அதிகாரி எனும் சாதனைக்குரியவர்.
செரிப் ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியை மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியிலும், உயர்தரக்கல்வியை மூதூர் மத்திய கல்லூரியிலும் கற்றார். 1981இல் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற இவருக்கு 1982இல் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்றது. பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு 1985இல் கலைப்பட்டதாரியானார்.
1984.10.06ஆம் திகதி நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றிய இவர் அப்பரீட்சையில் சித்தியடைந்ததை தொடர்ந்து 1985.03.10ஆம் திகதி தொடக்கம் நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ஆரம்ப ஆசிரியர் நியமனம் கிடைக்கப்பெற்று தனது கல்விப்பணியை ஆரம்பித்தார். பின் 1988இல் இடமாற்றம் பெற்று மூதூர் மத்திய கல்லூரியில் கடமையை பாரமேற்றதைத் தொடர்ந்து 1990 காலப்பகுதியில் இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று 1991இல் நியமனம் பெற்று கிண்ணியா உதவிப்பிரதேச செயலாளராக தனது நிருவாக சேவை பணியை ஆரம்பித்தார். பின்னர் 1993.02.17ஆம் திகதி தனது பிறந்த மண்ணில் மக்கள் சேவையாற்றுவதற்காக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மீண்டும் கிண்ணியா உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார். உதவிப் பிரதேச செயலாளராக சிறப்பாக கடமையாற்றிய இவருக்கு 1995.05.03ஆம் திகதி தொடக்கம் பிரதேச செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார். இங்கு எட்டு வருடங்கள் பணி புரிந்தார் இன்று எல்லோராலும் சிலாகித்து பேசப்படும் காத்தான்குடியின் அபிவிருத்தியில் அங்கு இடம்பெற்ற அத்தனை அபிவிருத்தியிலும் இவரது பங்களிப்பு மகத்தானது. இங்கு பிரதேச செயலாளராக கடமையாற்றும் போதே 25 மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த பிரதேச செயலாளராக இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமிருந்து அவ் விருதினை பெற்றுக் கொண்டார்.
இவரது காலப்பகுதியிலேயே காத்தான்குடி பிரதேச சபை நகர சபையாக தரமுயர்த்தப்பட்டது. இதன் போது இவர் காத்தான்குடி நகர சபையின் முதலாவது விஷேட ஆணையாளராக நியமிக்கப்பட்டு மூன்று வருடங்கள் சிறப்பாக பணியாற்றினார்.
காத்தான்குடி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவருக்கு 2002.05.24ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட இப் பிரதேச செயலகத்தின் இஸ்தாபக பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு குறுகிய காலத்தில் அப் பிரதேச செயலகத்தை இஸ்தாபித்து பணி செய்தார்.
2003.01.27ஆம் திகதி தொடக்கம் 2005.02.14ஆம் திகதி வரை கிண்ணியா பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவருக்கு 2005.02.15ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுனாமி விடயங்களை கவனிப்பதற்கான மேலதிக அராசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அப்போதைய ஜனாதிபதியின் சிபாரிசின் பேரில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார்.
2005.06.29ஆம் திகதி தொடக்கம் 2006.08.10ஆம் திகதி வரை கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலளராகவும் மட்டக்களப்பு கச்சேரியில் மேலதிக அரசாங்க அதிபராகவும் இரண்டு பதவிகளில் கடமையாற்றிய இவருக்கு 2006.08.11ஆம் திகதி தொடக்கம் மூதூர் பிரதேச செயலாளராக நியமனம் கிடைக்கப்பெற்றது.
2006.08.04ஆம் திகதி தொடக்கம் மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய வேளையில் 2006.08.04ஆம் திகதி மூதூர் மாவிலாற்றில் யுத்தம் ஆரம்பமான போது அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்தனர் இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைவாக குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்தி மக்களுக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டார்.
17 வருடங்களாக மத்திய அரசின் கீழ் பிரதேச மற்றும் மாவட்ட நிருவாகத்தில் கடமையாற்றிய பின் இவருக்கு கிழக்கு மாகாண சபையில் பதவி உயர்வுடனான இடமாற்றம் கிடைக்கப்பெற்றது. 2007.09.03ஆம் திகதி தொடக்கம் கிழக்கு மாகாண ஆளுநரினால் கிழக்கு மாகாண புனர்வாழ்வு, புனர்நிர்மான, சமூக சேவைகள், கட்டடங்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது இவர் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராகவும் பதில் கடமையாற்றினார்.
முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு 2008.05.03ஆம் திகதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு, நிர்மானம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளராக நியமனம் கிடைக்கப்பெற்றது. இது பொறியியல் துறைசார்ந்த அமைச்சாக இருந்த போதிலும் நிருவாக சேவை அதிகாரியான இவர் பொறியியலாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். இதன் போது குறிப்பாக JICA, ADB வீதி அபிவிருத்தி திட்டங்களை அப்போதைய அமைச்சருடன் இணைந்து மேற்கொண்டார். மேலும், பொத்துவில், குச்சவெளி போன்ற பிரதேசங்களில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகங்கள் இவரது கால்பகுதியிலேயே உருவாக்கப்பட்டன.
பின்னர் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக 2011.01.01ஆம் திகதி நியமனம் வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியல் கிழக்கு மாகாண கூட்டுறவு துறை அபிவிருத்திக்கு பெரிதும் பங்காற்றினார். 2013ஆம் ஆண்டு ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதம செயலாளராக நியமனம் கிடைத்தது இவர் அந்த அலுவலகத்தை குறுகிய காலத்தில் இஸ்தாபித்து பணி செய்தார். 2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து நான்கு வருடங்கள் சிறப்பாக பணியாற்றிய போது மீண்டும் 2018.03.16ஆம் திகதி தொடக்கம் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக நியமிக்கப்பட்டு அதி உன்னத சேவையாற்றி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இவர் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக இரு ஜனாதிபதி விருதுகளை பெற்றார்.
கடந்த 2018.07.07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் விளையாட்டு அரங்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற 96வது சர்வதேச கூட்டுறவு தின விழாவின் போது சர்வதேச கூட்டுறவு விருது (CO-OP-International Cooperative Allianceயினால் வழங்கப்பட்டது) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி கௌரவித்தார்.
2020.02.28ஆம் திகதி அரச நிதி கையாளல் மற்றும் கணக்கு பேணல் நடவடிக்கைகளில் திறமை காட்டும் அரச நிறுவனங்களுக்கு அரசாங்க கணக்கு குழுவினால் வழங்கப்படும் விருதை சபாநாயகர் கருஜயசூரியவிடமிருந்து பெற்றார். கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திற்கு முதல் முறையாக இவ்விருது கிடைக்கப்பெற்றது.
இவரின் சிறப்பான சேவைகளைக் கருத்தில் கொண்டு 2006இல் உள்நாட்டு பல்கலைக்கழகத்திலும், மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகத்திலும் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான இரண்டு ஜனாதிபதி புலமைப் பரிசில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்தியா, தென் கொரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் புலமை பரிசில் பெற்று சென்றுள்ளார்.
இதனை விட இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவர் தான் எழுதிய நூல்களுக்கு மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பல விருதுகளையும், பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார்.
இலக்கியத் துறையில் ஆர்வம் கொண்ட இவர் 2004ஆம் ஆண்டு மூதூர் - திருகோணமலை கடற்பயணத்தின் போது ஏற்பட்ட படகு விபத்து சம்பந்தமான விபரங்களை தொகுத்து “சங்கமம்" எனும் பெயரில் நூலை எழுதி வெளியிட்டார். 2011ஆம் ஆண்டில் இவர் "சுவடுகள்” எனும் ஒரு வரலாற்று நூலையும் வெளியிட்டார். 2012ஆம் ஆண்டு இலங்கை எழுத்தாளர் பேரவையினால் இவரது நூல் சிறந்த வரலாற்று நூலுக்கான பரிசை பெற்றுக் கொண்டது. மேலும், தமிழ் மொழியும் இலக்கியமும் எனும் நூலை க.பொ.சா.தர மாணவர்களுக்காக எழுதி வெளியிட்டார்.
கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2012ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் இலக்கிய நூல் பரிசுத்தேர்வில் பல்துறையில் இவரது "சுவடுகள்" எனும் நூல் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்டு சிறந்த நூலுக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருதும் சான்றிதழும், பணப்பரிசும் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார். மேலும் எழுத்தாளர் பேரவையினால் 2012ஆம் ஆண்டு சிறந்த வரலாற்று நூலுக்கான வித்தியாகீர்த்தி ந.சந்திரக்குமார் தமிழியல் விருதினையும் பெற்றார்.
ஓய்வு பெற்ற அதிபர் முகம்மது யூசுப், ஜொஹறா உம்மா தம்பதியினரின் மகள் ஜுவைரியா என்பவரை 1987இல் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்து கொண்டார். பாத்திமா பர்ஸானா ஹில்மி (முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர்) பாத்திமா றஸ்னா றுவைஸ் (விலங்கு மருத்துவ பட்டப்படிப்பு - பேராதனை பல்கலைக் கழகம்) முஹம்மது சாக்கிர் (சட்டத்தரணி) ஆகிய மூவர் மக்கள் செல்வங்களாக உள்ளனர்
36 வருடம் சிறப்பான முறையில் அரச பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் இவர் ஓய்விற்கு பின்னரும் இவரது அனுபவமும், ஆற்றலும் சமூகத்திற்கு கிட்ட வேண்டுமென பிராத்திக்கின்றேன்.
Reviewed by Editor
on
November 13, 2020
Rating: