கொரோனா காலத்தில் நாட்பட்ட நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதின் தேவை - ஒரு கனமான அனுபவப் பகிர்வு

கடந்த சனிக்கிழமை பன்னிரண்டு மணியளவில் கொழும்பு பதினைந்தைச் சேர்ந்த எழுபது வயதான நோயாளியொருவர் சுயநினை விழந்த நிலையில் (unconscious) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எங்கள் வாட்டுக்குள் எடுத்துவரப்படுகிறார்.
பத்து வருடங்களாக சீனி மற்றும் பிரசர் நோயுடன் வாழ்வராகவும் சில காலங்களாக மருந்துகள் பாவிப்பதை நிறுத்தியும் இருந்திருக்கிறார்.
எனது இளைய வைத்தியரொருவர் (junior doctor) அவரைப்பரிசோதிக்கும் போது இரத்தத்தின் சீனியின் அளவு மிகவும் அதிகமாக இருந்தது (severe hyperglycemia). சீனி வருத்தத்தை உரிய முறையில் பரிபாலிக்காவிட்டால் இவ்வாறு சீனியினளவு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும். இதனை hyperglycemic emergency (hyperosmolar hyperglycemic state) என்போம்.
இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்திய பின்னரும் இவரின் சுயநினைவு திரும்பாததாலும் உடலில் ஒருபக்கம் பலவீனமாக இருந்ததாலும் அவரின் தலையை CT ஸ்கேன் பண்ணிப்பார்த்தோம். அந்நேரம் அவருக்கு மூளையில் பக்கவாதமும் (acute stroke) ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்துகொண்டோம். சீனி உடலில் கூடும் போது இரத்தம் கட்டியாகி (blood clot) பக்கவாதம் மற்றும் காலில் இரத்தம் உறைதல் (venous thrombosis) போன்றன ஏற்படுகிறது.
எங்கள் வாட்டுக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா PCR எடுப்பது வழக்கம். நோயாளியின் நிலைமையும் அடுத்த நாளாகியும் எந்த முன்னேற்றமுமில்லை.
ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அவருடைய PCR positive ஆக வந்தது. இவரை நாங்கள் கொழும்புக்கு அண்மையிலிருக்கும் ஒரு வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு ஆயத்தமானோம்.
உம்மாவின் நிலைமை சாதகமாக இல்லை, அதிலும் மேலாக கொரோனா தொற்றுமுள்ளது என்ற விடயத்தை மிகவும் கனத்த இதயத்துடன் மகளுக்கு எடுத்துரைத்தேன்.
நோயாளியும் குறித்த வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். சில நாட்களுக்கு முன் கொரோனாவினால் இறந்தவர்களின் விபரத்தைப் பார்த்தவுடன் அவருடைய வயதையும் ஊரையும் ஊகித்துக்கொண்டேன் இறந்த உடலை என்ன செய்திருப்பார்கள் என்று!
இறைவன் அறிவைத் தந்திருக்கிறான். அவன் பொதுவான நாட்பட்ட நோய்களுக்கு மருந்தையும் தந்திருக்கிறான்!
சில விடயங்கள் எங்கள் கட்டுப்பாட்டிலில்லை, சில விடயங்கள் எங்கள் கட்டுப்பாட்டிலுள்ளது!
(Dr. AU Ali Akram)
Reviewed by Editor
on
November 27, 2020
Rating: