களனி கங்கை மாசடைவதைத் தடுப்பதற்கு உரிய பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு கோப் குழுவின் தலைவர் மூன்று அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
கொழும்புக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் இந்நாட்டின் பிரதான கங்கையான களனி கங்கை அங்கீகராமளிக்கப்படாத கட்டுமானங்கள், சுற்றாடல் பாதுகாப்பு அனுமதி அற்ற தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் காரணமாக மோசமான முறையில் மாசடைந்திருப்பது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது.
இந்த மாசினைத் தடுப்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நீர்வழங்கல் அமைச்சு மற்றும் அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியன இணைந்து விரைவில் பொறிமுறையொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோப் குழு நேற்று (26) பணிப்புரை விடுத்தது.
விசேடமாக குடிநீர் விநியோகம், சுற்றுலாத்துறை மற்றும் நகர அபிவிருத்தி என நாட்டில் தாக்கம் செலுத்தும் பல்வேறு விடயங்களுடன் களனி கங்கை நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதால், களனி கங்கை மாசடைவதைத் தடுப்பது அவசியம் எனக் கருதுவதால் கோப் குழு இதுபற்றிக் கூடுதல் கவனம் செலுத்தியது.
களினி கங்கை நீர் மாசடைவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றாடல் மதிப்பாய்வு அறிக்கையில் உள்ள விடயங்களை ஆராயும் நோக்கில் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு நேற்று (26) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அஜித் நிவார்ட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரட்ன, ஜகந் புஷ்பகுமார, பிரேம்நாத் சி.தொலவத்த, எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
நேற்றையதினம் கோப் குழு முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தமை விசேட அம்சமாகம். இதற்கமைய பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி சஞ்சீவ முணசிங்க, கைத்தொழில் அமைச்சின் செயாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா மற்றும் பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஆகியோர் முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கோப் குழுவுடன் இணைந்துகொண்டனர். அத்துடன் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி அனில் ஜாசிங்ஹ, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம ஆகிய அமைச்சின் செயலாளர்கள் கோப் குழுவுக்கு வருகை தந்திருந்ததுடன், கோப் குழுவின் கூட்டத்தில் மொத்தமாக ஐந்து அமைச்சின் செயலாளர்கள் இணைந்து கொண்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.
களனி கங்கையை அண்மித்ததாக 2946 தொழிற்சாலைகள் செயற்பட்டு வருவதாகவும், இவற்றில் 41 தொழிற்சாலைகள் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்குவதாகவும், 205 தொழிற்சாலைகளுக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் இவற்றில் 17 தொழிற்சாலைகள் எச்சரிக்கை மிகுந்தவை என்றும் கோப் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். எனவே விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என கோப் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.
Reviewed by Editor
on
November 27, 2020
Rating:
