
(பாருக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் கொல்லப்பட்டு 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் புதன்கிழமை (18) இரவு பிரதமர் அவர்களின் மட்டு அம்பாறை இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400க்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.
Reviewed by Editor
on
November 20, 2020
Rating: