கொரோனா கொத்தணி உருவாகாத வகையில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும், டாக்டர்.பரூஸா நக்பர் கோரிக்கை



(ரீ.தர்மேந்திரா)


அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து கொரோனா கொத்தணி உருவாகாத வகையில் இப்பிரதேச மக்கள் கூடுதல் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டி உள்ளது என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பரூஸா நக்பர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (27) வெள்ளிக்கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில்,

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுந்தமானமாக பிரதேசங்கள் தோறும் ஆட்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இதன்படி அக்கரைப்பற்று சந்தையில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்  இப்போது வரை 31 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பாலமுனை, பதியத்தலாவ வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படுகின்றனர். இவர்களின் குடும்பத்தினர், இவர்களோடு தொடர்பில் இருந்திருக்க கூடிய நபர்கள் ஆகியோரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு சுகாதார துறையினர், பொலிஸார், படை தரப்பினர், அக்கரைப்பற்று மாநகர சபையினர் உள்ளிட்டோர் இதய சுத்தி, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் சேவையாற்றுகின்றனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச வைத்திய அதிகாரி பணிமனை, பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் வழிகாட்டல்கள், அறிவுறுத்தல்களை பின்பற்றி எமது மக்கள் கூடுதல் அவதானத்துடன் நடந்து கொள்கின்ற பட்சத்தில் நிலைமையை நிச்சயம் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியும்.

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு கட்டாயம் கேட்கப்படுகின்றனர். அத்துடன் அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். தொற்றாளர்களாகவோ, நோய் காவிகளாகவோ மாற வேண்டாம் என்றும் அவர் பொது மக்களை கேட்டு கொண்டுள்ளார்.

கொரோனா கொத்தணி உருவாகாத வகையில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும், டாக்டர்.பரூஸா நக்பர் கோரிக்கை கொரோனா கொத்தணி உருவாகாத வகையில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும், டாக்டர்.பரூஸா நக்பர் கோரிக்கை Reviewed by Editor on November 27, 2020 Rating: 5