
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் தனது புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல பெர்ணான்டோ இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் வேலையின்மையைக் குறைத்து மனித வளத்தை பயனுள்ள வகையில் நாட்டின் பொருளாதாரத்துக்காக வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்காக பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி தமது திணைக்களத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் தொழில் தேடுவோரை தனியார் துறையில் காணப்படும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களில் பணிக்கமர்த்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தனியார் துறையில் தொழிலை எதிர்பார்க்கும் தொழில் தேடுவோர், தமது திணைக்களத்தின் www.dome.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று அல்லது அண்மையில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்துடன் இணைந்து இயங்கும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை சந்தித்து தம்மை பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்து கொள்ளும் தொழில் தேடுவோரின் தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் மாவட்டத்தில் தனியார் துறையில் நிலவும் வெற்றிடங்களுக்காக அவர்களை முன்னிலைப்படுத்த அல்லது தொடர்புபடுத்த இந்த மத்திய நிலையத்தின் ஊடாக இலவசமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக இணையத்தளத்தின் ஊடாக பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இணையத்தின் ஊடாக பதிவு செய்ய முடியாதவர்கள் மாவட்ட அலுவலகங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தம்மை பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நன்றி - Capital செய்தி
Reviewed by Editor
on
November 20, 2020
Rating: