
(றிஸ்வான் சாலிஹூ)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதவி வழி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட அதிஉயர்பீட கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அதிஉயர்பீடம் முழுமையாக ஒன்றுகூடுவது சாத்தியமில்லையென்பதால், கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரைக்கு அமைய, பதவிவழி உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூட்டம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கமாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தித்திற்கு ஆதரவாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்ததன் தொடர்பிலும், அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விளக்கம் கோருவதற்காகும் என்று கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
தலைவர் இதற்கான அவசியத்தை வலியுறுத்தியதன் பின்னர் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் தாம் அவ்வாறு நடந்து கொண்டற்கான காரணங்களை வாய்முலமாக கூறினர். இதுபற்றி ஆராயப்பட்ட போது கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர் என்று செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்வதற்கு உரிய காரணங்கள் எழுத்து மூலம் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தலைவருக்கும், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர், பிரஸ்தாப பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும் என்று செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
(Source - Rauff Hakeem)
Reviewed by Editor
on
December 13, 2020
Rating:

