எழுமாறாக PCR சோதனைகள் மூலம் அக்கரைப்பற்று சந்தைக் கொத்தணி கண்டறியப்பட்டது.
அக்கரைப்பற்று சந்தைக் கொத்தணிக்கு Covid19 வைரஸ் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எப்போது கொண்டுவரப்பட்டது? என்ற கேள்விகளுக்கு விடை இல்லை.
அக்கரைப்பற்று சந்தைக் கொத்தணியில் இருந்து அது எத்தனை பேரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது? எங்கெங்கெலாம் கொண்டு செல்லப்பட்டுள்ளது? என்ற கேள்விகளுக்கும் விடை இல்லை.
கல்முனை பிராந்திய சுகாதார மணிமனைப் பிராந்தியத்தின் 14.12.2020 ம் திகதிய அதிகார பூர்வ இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இதுவரை Covid19 பரிசோதனைகள் மூலம் 433 பேர் தொற்றுள்ளவர்களாக அறியப்பட்டுள்ளனர்.
10914 பேரில் நடாத்தப்பட்ட சோதனைகள் மூலமே இந்த 433 பேரும் அறியப்பட்டுள்ளனர். இது 3.96 வீதம் மாத்திரமே.
இங்கு பரிசோதனைக்கு உட்பட்டவர்களோ அல்லது தொற்றுள்ளவர்களாக அறியப்பட்டவர்களோ Covid19 மிதமான அல்லது தீவிர நோய் அறிகுறிகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.
மட்டுமல்லாது, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு வழமைக்கு மாற்றமாக அதிக எண்ணிக்கையில் சுவாசக் கோளாறுகளுடன் நோயாளிகள் சிகிச்சைக்காக வரவுமில்லை. உண்மையைச் சொன்னால் கடந்த இரண்டு மாதங்களாக நோயாளிகளின் வருகையில் மந்த நிலையே அவதானிக்கப்பட்டது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மரணித்த நபர் ஒருவர் தொற்றுள்ளவராக அறியப்பட்டுள்ளார்.
இலங்கையின் பிறப்பின் போதான எதிர்பார்க்கைக் வாழ்க்கைக் காலம் 77.06 வருடங்களாகும். குறித்த நபர் 80 வயதுடையவர். இந்நிலையில் குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் Covid19 தான் என்பது ஏற்புடையதா என்பதும், குறித்த நபரில் Covid19 நோய் அறிகுறிகள் காணப்பட்டதா என்பதும் கவனிக்கப்பட வேண்டும், இம்மரண வீதம் Covid19 தொற்றாளர்களின் 0.23 மாத்திரமே என்பதும் கவனிக்கப்பட வேண்டும். இது தெற்காசிய நாடுகள் மற்றும் சர்வதேசம் ஆகியவற்றின் குறித்த வயதுக்கான Covid19 மரண வீதங்களுடனும் நகர்ப் படுத்தப் பார்க்க வேண்டும். சமூகத்தில் அறியப்படாத தொற்றுள்ளவர்கள் போல இவரிலும் வைரஸ் தொற்றிக் கொண்டு இருந்திருக்கலாம் அல்லவா?
தொற்றுள்ளவர்களாக அறியப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டவர்களில் இதுவரை 70 பேர் குணமடைந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாயின் அவர்களில் இருந்து குணமடைந்த நோய்நிலைமைகள் என்ன, வழங்கப்பட்ட சிகிச்சைதான் என்ன?
நோய் அறிகுறிகள் இன்றி தொற்றுள்ளவர்களாக அறியப்படுபவர்களை தனிமைப் படுத்துவதால் கிடைக்கும் ஒரே நன்மை அவர்களிடம் இருந்து அடுத்தவருக்கு தொற்று ஏற்படுவது தடுக்கப்படுவதே.
சமூகத்தில் உள்ள Covid19 அறிகுறிகள் அற்ற தொற்றுள்ளவர்கள் அனைவரும் கண்டறியப் பட்டுவிட்டார்களா என்றும், அவ்வாறு வடித்தெடுப்பது நடைமுறைச் சாத்தியமானதா என்றும் கேட்டால் விடை இல்லை என்பதே.
சின்னமுத்து, போலியோ போன்று தடுப்பூசிகள் மூலம் இவ்வைரஸ் தொற்றில் இருந்து நிர்ப்பீடனம் பெற முடியுமா என்றால் அடுத்த வருட நடுப் பகுதிக்குப் பின்னரே அது சாத்தியம் என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, அறியப்படாத தொற்றுள்ளவர்கள் சமூகத்தில் இருந்து கொண்டேதான் இருக்கப் போகின்றார்கள். தனிமைப்படுத்தப் பட்டவர்கள் போலவே இவர்களும் தொற்று ஏற்பட்டு 10 அல்லது 14 நாட்களாகும் போது இயற்கையாகவே அவர்கள் தொற்றற்றவர்களாக ஆகத்தான் போகின்றார்கள். இது ஒரு சங்கிலி போல்லாமல் வலைப் பின்னலாக சமூகத்தில் இருந்து கொண்டேதான் இருக்கப் போகிறது.
அப்படியானால் எழுந்தமானமாகத் தேடுவதும் முடக்குவதுமான திருடன் பொலீஸ விளையாட்டு இன்னும் எத்தனை நாளைக்கு?
தேடுதலும் முடக்குதலும் தீர்வாக அமையும் என நான் நினைக்கவில்லை. அது வறுமையையும், மன உளைச்சலையும் அதிகப் படுத்தி அவற்றால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.
தொற்று ஏற்படாவாறான அன்றாட நடைமுறைகளைக் கடைப்பிடித்தல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களை கைக்கொள்ளல், உடலாரோக்கித்துக்கு குந்தகம் விளைவிக்கும் கருமாந்திரங்களை விட்டொதுங்குதல், கிரமமான உடற்பயிற்சி மற்றும் உடல் எடையை மத்திமமாகப் பேணுதல், நிரந்தர தொற்றா நோய் நிலமைகளை ஒழுங்காகப் பரிபாலனம் செய்தல். சுவாசச் சிக்கல்களை ஏற்படுத்தாதவாறாக சூழலைப் பேணுவதோடு சுவாசத் தொகுதியை மேம்பட்டதாகப் பேணுதல் போன்றவையே இறை நாட்டத்துக்கு அடுத்ததாக நம்மைப் பாதுகாக்கும்.
Covid19 தொற்றின் ஆரம்பத்திலேயே முஸ்லிம்களை நோக்கி விரல் நீட்டி குற்றம் சுமத்தும் கைங்கர்யம் கச்சிதமாக நிறுவனமயப் படுத்தப்பட்டு அரங்கேற்றப் பட்டதை நாம் கண்டோம்.
Covid19 மரணங்களிலும், தொற்றுள்ளவர்களிலும் அதிகமானவை முஸ்லிம்களுடையவை எனப் புள்ளிவிபரப் படுத்துவதற்கும், விஞ்ஞான ரீதியான தடயங்கள் இல்லாத போதும் உலக நடைமுறைக்கு மாற்றமாக ஜனாசா எரிப்பை கட்டாயப் படுத்துவதன் ஊடாக முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு நாட்டின் பொதுச் சமூகத்திலிருந்து அந்நியப் படுத்தவும் காரியங்கள் களமிறக்கப் பட்டுள்ளதாகவே யூகிக்க வேண்டி இருக்கிறது. மாலைதீவுக்கு ஜனாசாக்களை ஏற்றுமதி செய்வதும் இதன் ஒரு ஏற்பாடே.
எனவே, நம்மோடு நமது குடும்பத்தையும் சமூகத்தையும் Covid19 இல் இருந்தும் பொறிமுறைப் படுத்தப்படும் வாதங்களில் இருந்தும் பாதுகாக்கும் பொறுப்பை சுமந்து கொள்வது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
(Dr. Aqil Ahmad Sharifuddeen)
