பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயத்தை அனுமதிக்க முடியாது

 

இலங்கை கல்விக் கொள்கையில் உப கல்வி வலயங்களை உருவாக்குவதற்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் பொத்துவில் பகுதிக்கு தனியான கல்வி வலயம் ஒன்று உருவாக்கப்படாதென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கல்வி அமைச்சரிடம், பொத்துவில் உப கல்வி வலயம், கல்வி வலயமாக தரமுயர்த்தப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

உப கல்வி வலயங்களை உருவாக்குவதற்காக இலங்கை கல்விக் கொள்கையில் எவ்வித அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. அந்தக் கல்விக் கொள்கைகளை நாம் அனுமதிப்பதில்லை என்பதுடன், அதனை முற்றாக நிராகரிக்கிறோம். என்றாலும் கிழக்கு மாகாண சபையால் பொத்துவில் உப கல்வி வலயம் நடத்தப்பட்டுச் செல்வதாக அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தேசிய மட்டத்தில் உப கல்வி வலயங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் குறித்த உப கல்வி வலயத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளும் இலங்கை நிர்வாக சேவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அதேபோன்று உப கல்வி வலயங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவ்வாறான உப கல்வி வலயங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரமும் வழங்கப்படாது.

சிறிய தேவைகளுக்காக பொத்துவில் பகுதியில் உள்ளவர்கள் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் புதிய கல்வி மறுசீரமைப்புக் கொள்கையில் புதிய தொழில்நுட்பங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. கல்வி முகாமைத்தும் மற்றும் நிர்வாக முறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய கல்வி முகாமைத்துவம் மற்றும் நிர்வாக முறைகள் உருவாக்கப்படும். விரைவாக இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆகவே, பொத்துவில் பகுதிக்கு தனியான கல்வி வலயமொன்று உருவாக்கப்படாது. இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறான கருத்திட்டங்களுக்கு அமைய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கொள்கை ரீதியாக நாங்கள் இணங்க மாட்டோம் என்றார்.

இதன்போது, இடையீட்டு கேள்வியை எழுப்பிய முஷாரப் எம்.பி, பொத்துவில், கிண்ணியா கோமரங்கடவல ஏற்கனவே கல்வி வலயங்கள் இருந்துள்ளன. இதேவேளை, அனைவரும் பொத்துவில் கல்வி வலயத்துக்கான வாக்குறுதிகளை அளித்துள்ளனரே என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இன ரீதியாக கல்வி வலயங்கள் ஒருபோதும் உருவாக்கப்படாது. அதற்கு எம்மால் அனுமதியும் அளிக்கமுடியாது. 

ஆனால், இங்குள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உபாய மார்க்கங்கள் உருவாக்கப்படும் என்றார்.

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயத்தை அனுமதிக்க முடியாது பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயத்தை அனுமதிக்க முடியாது Reviewed by Editor on December 08, 2020 Rating: 5