அதிகாரத்திற்காக உயிர்களை குடித்தது தெரிந்த பின்னரும்,மு.கா எம்பிக்கள் இன்னும் குடைபிடிக்கத்தான் வேண்டுமா?



ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து - குருநாகல் மற்றும் மினுவான்கொடயில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் கொலைகளில் - அன்று எதிர்க்கட்சியாக இருந்த - தற்போது ஆளுங்கட்சியாக இருப்போருக்கு நேரடி சம்மந்தமிருப்பதாக கூறப்பட்டது.

அதற்கான தொலைபேசி தொடர்பாடல் ஆதாரங்கள் - போட்டோக்கள் - வீடியோ பதிவுகள் - சிசிடீவி பதிவுகள் இருந்ததாக அன்று பொலிஸாரால் கண்டறியப்பட்டன. அவை நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் நேரடியாக சம்மந்தப்பட்டவராக மதுமாதவ அரவிந்த அடையாளம் காணப்பட்டார். நீதிமன்றில் அவரை கைதுசெய்யுமாறும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரை கைதுசெய்ய முடியாமல் ஒழித்துவைக்கப்பட்டார்.

அவ்வாறு அவரை “நாங்கள் ஒழித்துவைத்தோம்” என்பதை - அவரின் கட்சித் தலைவர் தற்போதைய அமைச்சர் உதய கமன்வில பகிரங்கமாக ஒப்புக்கொண்டு - றிசாட் பதியுத்தீன் ஒழித்திருந்த காலத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

பின்னர் மதுமாதவ அரவிந்த் போன்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது - அப்போதிருந்த சூழலில் நீதிமன்றத்திற்கு சென்று - முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டவர்களை - ஆள் அடையாளம் காட்டுவதில் இருந்த உயிராபத்து மற்றும் அச்சுறுத்தல் காரணமாக - முஸ்லிம்களில் எவரும் ஆள் அடையாளம் காட்டவோ - வழக்கை தொடரவோ பின்வாங்கிய காரணத்தால் - அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், அல்லாஹ் இன்று இந்த விடயங்கள் யாவற்றையும் பகிரங்கமாக வெளிக்கொணர்கிறான் - ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சாட்சியமளித்த பொலிஸ் உயரதிகாரிகள் - ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து குருநாகல் மற்றும் மினுவான்கொடயில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் கொலைகளில் - மதுமாதவ அரவிந்த் நேரடியாக சம்மந்தப்பட்டிருந்ததாக சாட்சியமளித்துள்ளனர்.

இளம் பிக்குவை முஸ்லிம் ஒருவர் தாக்கியதாக சோடித்து - அனைத்து வன்முறைகளும் அரங்கேற்றப்பட்டதையும் - அந்த விடயங்களை மதுமாதவ அரவிந்த் நேரடியாக செய்தார் என்பதையும் கூறியுள்ளனர். அதன் பிரகாரம் குறித்த இளம் பிக்குவும் தான் யாராலும் தாக்கப்படவில்லை எனவும் - தாக்கப்பட்டதாக சொல்லுமாறு தன்னிடம் கூறியதையே தான் கூறியதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார். (கீழே ஆதாரமாக இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன)

அன்று எதிர்க்கட்சியாக இருந்தவர்களான - இன்றைய ஆளும் தரப்பினரே  -அதிகாரத்தைக் கைப்பற்ற - முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை செய்கிறார்கள் எனவும் - இனவாதத்தை கையில் எடுத்துள்ளனர் எனவும் நாம் தெளிவாக ஆதாரங்களோடு கூறிய போது - அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் - தங்களுடைய அரசியல் அதிகார தாகத்திற்காக சகோ. அதாவுல்லா போன்றோர் - அதனை மறுத்து பொய்யுரைத்தனர். 

இன்றைய ஆளும் தரப்பினரை முஸ்லிம்களை காக்க வந்த மலக்குகள் போன்று சித்தரித்தனர். இன்று ஜனாஸா எரிப்பில் கூட ஆளுந்தரப்பை பாராளுமன்றத்தில் புகழ்ந்து - நியாயத்தின் காவலர்கள் போன்று அவர்களுக்கு காவடி பிடிக்கின்றனர். இன்னும் மக்களை பிழையாக வழிநடாத்துகின்றனர்

அதேபோன்று, குருநாகல் மற்றும் மினுவான்கொடயில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் கொலைகளில் - தற்போது ஆளுங்கட்சியாக இருப்போருக்கு நேரடி சம்மந்தமிருப்பதாக வெளிப்படையாக தெரியவருகின்ற இந்தத் தருணத்தில் - இதே அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்ற மு.காவின் எம்.பிக்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கின்றனர்.

முஸ்லிம்களில் உயிர்களை குடித்து - உடமைகளை எரித்து - பொருளாதாரத்தை அழித்த / அழித்துக்கொண்டிருக்கின்ற - கொடுரமானவர்களோடு மு.கா எம்பிக்கள் கூட்டு வைத்திருக்க முடியாது. அப்படி மீறி கூட்டு வைத்திருந்தால் மன்னிக்கப்பட முடியாதவர்கள். 

ஆனால், மையத்துக்களை எரிப்பதையே மசிரென்று கணக்கெடுக்காமல் - தலைமையையும் மீறி 20 க்கு கையுயர்த்தி  இவர்களிடம் - குருநாகல் மற்றும் மினுவான்கொடயில் என்றோ நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் கொலைகளுக்காக நியாயம் கேட்க சொன்னால் - நாம்தான் முட்டாள் எனக்கணிக்கப்படுவோமென உள் மனது உறுத்துகிறது. 


என்ன செய்ய...செல்லாமல் இருந்த பாவம் நம்மை சுற்றக்கூடாதுதானே!.....


ஏ.எல்.எம்.தவம்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.







அதிகாரத்திற்காக உயிர்களை குடித்தது தெரிந்த பின்னரும்,மு.கா எம்பிக்கள் இன்னும் குடைபிடிக்கத்தான் வேண்டுமா? அதிகாரத்திற்காக உயிர்களை குடித்தது தெரிந்த பின்னரும்,மு.கா எம்பிக்கள் இன்னும் குடைபிடிக்கத்தான் வேண்டுமா? Reviewed by Editor on December 04, 2020 Rating: 5