முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளத்தை மீட்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கை ஊடாக ஊடறுத்துச் சென்ற 'புரேவி' புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில் மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.
அதையடுத்து நேற்றுக் (03) காலை 10.00 மணியளவில் குறித்த வள்ளத்தைக் கரைக்குக் கொண்டு வருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்ற இளம் குடும்பஸ்தர், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.
கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் மீனவரான குறித்த இளம் குடும்பஸ்தரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், காணாமல்போயிருந்த கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெயசீலன் சிலக்சன் (வயது 26) என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று (04) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வள்ளத்தை மீட்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Reviewed by Editor
on
December 04, 2020
Rating:
