(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவில் கொவிட் -19 நிலைவரம் தீவிரமடைவது போன்றே தெரிகிறது. நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் ஒருவரேனும் தொற்றாளராக இனங்காணப்படுகிறார்.
சுகாதாரத் தரப்பினரும் தங்களது கடமைகளைச் சரிவரவே செய்கிறார்கள். கடமை நேரம் முடிந்தும் அவர்கள் களத்தில் நின்று மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்படுகின்றனர்.
தங்கள் பிரதேசத்தில் கொவிட் தொற்று இல்லை என்பதனை பறைசாற்றி தாங்கள் பாராட்டுப்பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் சேவையை முன்னெடுக்கவில்லை. கொரோனா என்ற அரக்கனிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். அதுவே தமது பிரதான கடமை என்ற புனிதமான உணர்வின் அடிப்படையிலேயே அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.
ஆனால், மக்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்பது சுகாதாரத் துறையினரின் கவலையாக உள்ளதனை அவர்களுடன் நான் உரையாடும் போதெல்லாம் அறியக் கூடியதாக உள்ளது. மக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் இந்த விடயத்தில் தாங்கள் மேலும் உற்சாகத்துடன் செயலாற்ற முடியும் என்ற ஒரு தொய்வு நிலையையே என்னிடம் எடுத்துக் கூறுகின்றனர். அவர்களது ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த விடயத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவில் உள்ள மக்கள் தங்கள் ஒத்துழைப்பை சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதன் ஊடாக அவர்களது நடவடிக்கைகளுக்கு பாரிய உந்து சக்தியை ஏற்படுத்தலாம் அது மட்டுமின்றி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மக்கள் தங்களையும் தங்கள் சமூகத்தையும் இந்த கொவிட் அரக்கனிலிருந்து பாதுகாக்கவும் முடியும் அல்லவா?
விசேடமாக, தனிப்பட்ட நபர்கள் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஒரு வகையில் அச்சம் கொள்கின்றனர். இவ்வாறான சோதனைகளில் தங்களுக்கு கொவிட் இருப்பது உறுதியானால் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கலாம் என்ற அச்சம் அவர்களில் குடிகொண்டிருக்கலாம்.
ஏதாவது ஒரு பரிசோதனையின்போது எட்டப்படும் முடிவுகளில் எவருக்கேனும் கொவிட் தொற்று சாதாரண நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டால் அவர் உடனடியாக கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்படுவார் என்றோ அல்லது ஐடிஎச் வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸில் அழைத்துச் செல்லப்படுவார் என்றோ அர்த்தமல்ல.
சுகாதாரத் துறையினரால் உங்களுக்கு வழங்கப்படக் கூடிய சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றி நடந்தால் சரிதான். மேலும் இது எந்த வகையிலும் கௌரவப் பிரச்சினையான விடயமும் அல்லவே.
இது தவிர, மோசமான நிலைமையில் காணப்படும் ஒருவரின் பரிசோதனை அறிக்கை தொடர்பில் வைத்தியர்கள் நிலைமைக்கு ஏற்ப தீர்மானம் எடுப்பார்கள். அவ்வாறான தீர்மானம் கூட எமது நன்மைக்கானதாகவே இருக்கும்.
இந்த நிலையில் இவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு ஒருவர் நடந்து கொள்வாரானால் நிச்சயமாக அவர், கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு அல்ல ஐடிஎச் வைத்தியசாலைக்கே நேரடியாக அழைத்துச் செல்லப்படும் நிலைமையும் உருவாகலாம்.
இதனுடன் இந்த விடயம் முற்றுப் பெறுவதில்லை. அவரது குடும்பம், அவருடன் தொடர்பை பேணியவர்கள் ஏன் சிலவேளைகளில் அவர் வாழும்முழுப்பிரதேசமே முடக்கப்பட்டு அபாய வலயமாகவும் அறிவிக்கப்படலாம். ஒரு தனிநபரின் நடத்தையாலே இந்த அத்தனை விளைவுகளும்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களின் சில பிரதேசங்களில் இவ்வாறான நிலைமையே காணப்படுவதாக கூறப்படுகிறது. பண்டாரகமையின் அட்டுளுகம பிரதேச மக்கள் போன்று இவர்களும் நடந்தால் கல்முனையிலும் நிலைமை மோசமடையும்.
எனவே, ஒவ்வொரு தனிநபரும் சுகாதராத்துறையினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தெருவோரக் கதைகளைக் கேட்டு உங்களது வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். உங்களைப் பாதுகாத்து ஏனையோரையும் பாதுக்கவும்.
வெள்ளிக்கிழமை (25) கல்முனை தெற்குப் பகுதியில் 500 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக அறிந்தேன். ஆனால் கல்முனைக்குடியில் 27 பேரும் இஸ்லாமாபாத்தில் 77 பேருமே இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர். ஆக, 500 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சோதனையில் 104 பேர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர் என்பது கவலையான விடயம்.
இந்தச் சோதனைகளைச் செய்ய தனி நபர்கள் அச்சமடைந்தாலும் அவர்களைத் திடப்படுத்தி அவர்களுக்கு அறிவுரைகளைக் கூற வேண்டிய பொறுப்பு அந்தப் பிரதேச மத ஸ்தலங்களின் நிர்வாகங்கள், சமூக மற்றும் பொது அமைப்புகள், புத்தி ஜீவிகளைச் சார்ந்தது. அவர்கள் இது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்க வேண்டும். இது அவர்கள் மீதான காலத்தின் கட்டாயக் கடமை.
சுகாதாரத்துறையினரின் வழிகாட்டல்கள், ஆலோசனைகளை மக்கள் பின்பற்றுவதற்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பரிசோதனைகளை மக்கள் மேற்கொள்ள ஊக்கவிக்க வேண்டும்.
கொழும்பிலும் வேறு பல பிரதேசங்களிலும் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் நடைபெறுகின்றன என்றால் அந்த இடத்துக்கு அதிகாலை 5.00 மணிக்கே மக்கள் ஆர்வத்துடன் சென்று வரிசையில் காத்திருப்பதனை நான் கண்டுள்ளேன்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு, மருதானை பகுதியில் இவ்வாறான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது அன்றைய தினம் குறித்த இடத்தில் 175 பேருக்கு மட்டுமே அன்டிஜன் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தங்களையும் பரிசோதனை செய்ய வேண்டுமென்று அங்கு வந்த மக்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிக் காணப்பட்டது. திணறிப்போன சுகாதாரப் பிரிவினர் மேலும் இரு தினங்கள் அதே இடத்தில் பரிசோதகளை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது.
இந்தச் சம்பவத்துடன் எமது நிலைமையை ஒப்பிடுகையில் நாம் எங்கே உள்ளோம் என்பது தெளிவாகும்.
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த சில மெத்தப்படித்த மேதாவிகள் இந்தப் பரிசோதனைகள் தொடர்பில் விஞ்ஞானபூர்மற்ற, தவறான தகவல்களைப் பரப்பி மக்களை அச்சமடையச் செய்வதாகவும் தெரிய வருகிறது. இவ்வாறான நபர்களின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டு விடாதீர்கள். இந்த நாட்டில் மேலும் கொவிட் மரணங்களை ஏற்படுத்தி ஜனாஸாக்களை எரிக்க பெற்றோல் ஊற்றவே அவர்கள் முயற்சிக்கின்றனர்.
இது தவிர, கல்முனையில் காணப்படும் இன்னொரு பிரச்சினை இனவாதம், பிரதேசவாதம் என்பன. இவை இரண்டும் கொவிட் தாக்கத்தை விடவும் மிக மோசமாக அங்கு பரவியுள்ளன.
தமிழ் டாக்டரான சுகுணன் அவர்கள் ஒரு முஸ்லிம் பிரதேசத்துக்குச் சென்று கொவிட் தொடர்பான விடயங்களைக் கையாண்டால் அவருக்கு அங்கு இனவாத முத்திரை குத்தப்படுகிறது. சாய்ந்தமருதுவைச் சேர்ந்த முஸ்லிம் டாக்டர் நாகூர் ஆரிப் அவர்கள் வேறொரு முஸ்லிம் பிரதேசத்துக்குச் சென்று கொவிட் தொடர்பான விடயங்களைக் கையாண்டால் அவர் பிரதேசவாதியாக பெயர் பெறுகிறார்.
இவையெல்லாம் தவறான, கேவலமான சிந்தனைகள். இவ்வாறான இனவாத, பிரதேசவாதச் சிந்தனையுடன் சிலர் செயற்படுவதால் அதன் விளைவுகளும் பாரதூரமானவைகளாகவே அமையும்.
அம்பாறை மாவட்டத்தில் நான்கு பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். அனைவரும் முஸ்லிம்கள் அவர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விடயத்தில் காட்டப்படும் தாமத நிலைமைக்கு அந்தப் பிரதேச சுகாதாரத் துறையினரின் கருணை, முஸ்லிம்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்துள்ள முறைமைகளும் காரணங்களாகும். இந்த விடயத்தில் சட்டத்துக்கு அப்பால் அவர்கள் மனிதாபினமானத்துடன் இதுவரை செயற்பட்டு வருகின்றனர் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் நினைத்திருந்தால் உரிய இடங்களுக்கு அறிவித்து அந்த ஜனாஸாகக்களை எப்போதோ எரித்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனவே, சுகாதாரத் துறையினரின் மனங்களை வேதனைப் படுத்தாதீர்கள்.
வேறு பிரதேங்களில் என்றால் இந்த ஜனாஸாக்களை எப்போதே எரித்திருப்பார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
இருப்பினும் குறித்த ஜனாஸாக்களும் எரிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை அவர்களால் ஏற்க முடியாது. காரணம் அவர்கள் இதுவரை தங்கள் கைகளுக்குள் வைத்திருந்த விடயம் மத்தியை நோக்கி கைமீறிச் சென்றதாகவே அமையும் என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பிரிவிலுள்ள மக்கள் சுகாதரத்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள். இதன்மூலமே உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் உங்களால் பாதுகாக்க முடியும்.
