COVID-19 தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு இரண்டு வகையான பரிசோதனைகள் உள்ளன.
1) பீ சீ ஆர் பரிசோதனை (PCR Test) : இது கொரோனா வைரஸிலுள்ள ஆர் ஏன் ஏ(RNA)யை அறியும்.
2) ஆன்டிஜென் பரிசோதனை (Antigen Test): இது கொரோனா வைரஸிலுள்ள புரதத்தை அறியும்.
1) பீ சீ ஆர் பரிசோதனை (PCR Test):
இது கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே அடையாளம் காண உதவும்.
இந்தப் பரிசோதனை முறையானது COVID-19 இற்கான சிறந்த பரிசோதனையாகும்.
ஆயினும், இதிலுள்ள சில சாதகமற்ற தன்மைகள் பின்வருமாறு:
அ) விலை அல்லது செலவு அதிகமாகும்.
ஆ) நன்கு பயிற்றப்பட்டவர்கள் அவசியமாகும்.
இ) களத்தில் (Field) செய்ய முடியாது. ஆய்வுகூடம் அவசியம்.
ஈ) முடிவுகள் தெரியவர நீண்ட நேரம் எடுக்கும்.
குறைந்தளவு வைரசுகள் உடலில் உள்ள சந்தர்ப்பங்களான, நோயின் ஆரம்ப மற்றும் பிந்திய நிலைகளிலும் அடையாளம் காண உதவுவது இதன் சிறப்பம்சமாகும்.
2) ஆன்டிஜென் பரிசோதனை (Antigen Test):
இது கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரில் அதிகளவு வைரசு கிருமிகள் (High Viral Load) இருக்கின்ற போது நேர்த்தியான முடிவைக் காட்டும். வைரசுகள் அதிகமாக இருக்கும் போது ஏனையோருக்கு பரப்புவதற்கு வாய்ப்பு அதிகம் என்பது இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விடயமாகும்.
இந்த பரிசோதனை முறையின் சாதகமான தன்மைகள் பின்வருமாறு:
அ) விலை அல்லது செலவு குறைவு
ஆ) சாதாரண பயிற்சிபெற்றவர்களும் செய்யலாம்.
இ) ஆய்வுகூடம் அவசியமில்லை. களத்தில் செய்வதற்கு வசதியானது.
ஈ) குறைந்தளவு (15 நிமிடங்களில்) நேரத்தில் முடிவுகள் தெரியவரும்.
ஆதலினால், இந்நோய் பரவக்கூடிய பிரதேசத்தில் அல்லது இடமொன்றில் அதனை கட்டுப்படுத்த இந்த பரிசோதனை முறையானது மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த ஆன்டிஜென் (Antigen) பரிசோதனை முறையில் பிழையான தொற்றாளராக (False Positive) அடையாளம் காண்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆயினும், பரிசோதனை மாதிரிகள் (Samples) எடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஒருவரின் வைரஸ் கிருமிகள் இன்னொருவரின் பரிசோதனை மாதிரியுடன் கலக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், நேர்த்தியான வழிகாட்டுதலும், பயிற்சியும் அதனை வெகுவாக குறைக்கும். ஆயிரக்கணக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகின்ற போது அதன் நேர்த்தியை அறிந்துகொள்ளலாம்.
ஆயினும், இந்த ஆன்டிஜென் (Antigen) பரிசோதனை முறையில் பிழையான தொற்றில்லாத (False Negative) முடிவுகள் வருவதற்குத் தான் வாய்ப்புண்டு. ஏனெனில், இது கூடிய வைரசுகள் இருந்தால் தான் நேர்த்தியான முடிவைக் காட்டும். அதாவது, நோயின் ஆரம்ப மற்றும் பிந்திய நிலைகளில் தொற்று இல்லை (Negative) என்று காட்டுவதற்கே வாய்ப்புண்டு. எனவே, ஆன்டிஜென் (Antigen) பரிசோதனை முடிவில் தொற்றில்லை என்று வந்தாலும், அது நூறு சதவீதம் அவ்வாறில்லை.
அதன் அடிப்படையில், ஆன்டிஜென் (Antigen) பரிசோதனையில் தொற்றில்லை (Negative) என்று முடிவு வந்த ஒருவருக்கு, பீ சீ ஆர் (PCR) பரிசோதனையில் தொற்றுள்ளது (Positive) என்று முடிவு வருவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், ஆன்டிஜென் (Antigen) பரிசோதனையில் தொற்றுள்ளதாக (Positive) முடிவு வந்த ஒருவருக்கு, பீ சீ ஆர் (PCR) பரிசோதனையில் தொற்று இல்லை (Negative) என்று வருவதற்கு வாய்ப்பு மிக மிக அரிது. அது ஒருவேளை அதனை வாசிக்கும் விதத்தில் மயக்கம் (Doubtful) ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தில் மாத்திரமே வாய்ப்புண்டு. அத்தகைய மயக்கமான சந்தர்ப்பத்தில், பீ சீ ஆர் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
பொதுவாக எந்தப் பரிசோதனையும் நூறு சதவீதம் நேர்த்தியைக் (Sensitivity) கொண்டிருக்காது ஆயினும் இங்கு நேர்த்தியற்ற வீதம் மிக மிக குறைவு என்பதனையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்றுள்ள ஒருவரோடு கடந்த 14 நாட்களுக்குள் ஒரு சந்தர்ப்பத்தில் குறைந்தது 15 நிமிடங்களுக்கு ஆறு அடி இடைவெளிக்குள் இருந்திருந்தால், அவர்கள் தங்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லாதிருந்தாலும், ஆன்டிஜென் (Antigen) பரிசோதனையில் தொற்றில்லை (Negative) என்று முடிவு வந்தாலும் தங்களை பீ சீ ஆர் (PCR) பரிசோதனை மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
எது எப்படி இருந்தாலும், அதிகமதிகம் பரிசோதனைகளை செய்து, வயதான மற்றும் நாட்பட்ட நோய்களைக் கொண்டிருப்பவர்களை COVID-19 இலிருந்து பாதுகாக்க முயற்சிசெய்வோம்!
Dr.Nagoor Ariff
Regional Epidemiologist,
RDHS
Kalmunai.
கொரோனாவுக்கான பரிசோதனை - இதோ வாசித்து பயன் பெறுங்கள்...
Reviewed by Editor
on
December 20, 2020
Rating:
