(றிஸ்வான் சாலிஹூ)
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமின் பணிப்பின் பேரில் அதிகாரிகள் புத்தளம் கலப்பு பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு இன்று (03) வியாழக்கிழமை காலை விஜயம் செய்துள்ளார்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள புறவி சூறாவளி காரணமாக புத்தளம் நகரத்தின் கடற்கரைப் பகுதிகள் பாதிக்ப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் சில படகுகள் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (03) அதிகாலை புத்தளம் சிறுகடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்ட நிலையில் கடல் நீர் கடற்கரை வீதியின் சில பகுதிகளை ஊடறுத்து சென்றுள்ள நிலையினை காணமுடிந்தது.தற்போது காணப்படும் மழையுடன் கூடிய கடும் காற்றினால் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து கிடப்பதையும் காணமுடிந்தது, அதேவேளை கடல் நீர் கரையினை தாக்கியுள்ள நிலையில் கடற்கரைப்பகுதியில் இல்யாஸ்வத்த, கூபா நகர், அல் - அமீன் புரம்,பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமின் பணிப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜமால்தீன் ஜவுசி தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து சேதங்களை பார்வையிட்டதுடன்,பிரதேச மக்களுடன் கலந்துரையாடினர்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் புத்தளம் மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார,புத்தளம் பதில் பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் வேண்டியுள்ளார்.
Reviewed by Editor
on
December 03, 2020
Rating:


