(ஏ.எல்.நிப்றாஸ் - ஊடகவியலாளர்)
நாட்டிலும் குறிப்பாக அக்கரைப்பற்றில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமைகள் அவ்வளவு அவ்வளவு நல்ல அறிகுறிகளாக தெரியவில்லை.
கொழும்பில், பிறந்து இருபதே நாளான ஒரு பச்சிளம் குழந்தை எரிக்கப்பட்டதை கேள்விப்பட்டதில் இருந்து நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கின்றது.
இதற்கிடையில் அக்கரைப்பற்றில் நேற்றைய தினம் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 9 மாத குழந்தையொன்று மேலதிக சிகிச்சைக்காக அங்கொடை – ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது பெருங் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதுமட்டுமன்றி, அக்கரைப்பற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 235 தொற்றாளா்களுள் இன்னும் சிறு குழந்தைகளும் 70 வயதை தாண்டியவா்களும் இருக்கின்றனா்.
இந்த சந்தர்ப்பத்தில் பாரதூரமான எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என மனம் பிரார்த்திக்கின்றது.
மறுபுறத்தில், அக்கரைப்பற்றில் அதிகளவில் கொரோனா பரவுகின்றமை பற்றி நிறைய கதைகளும் சந்தேகங்களும் மக்களிடையே உள்ளன. அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என, ஊருக்குள் ஆயிரத்தெட்டு அனுமானங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
ஒருவேளை, அப்படி எதுவும் நடந்திருக்குமாயின், அக்கரைப்பற்றின் எம்.பி.க்கு, மாநகர மேயருக்கு, சுகாதார வைத்திய அதிகாரிக்கு, இவ்வூரின் வைத்தியர்களுக்கு, ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளா்களுக்கு அந்த சந்தேகம் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அவா்களுக்கு அதில் எவ்வித சந்தேகமும் இல்லாதவிடத்து, மக்கள் அடிப்படையற்ற கதைகளைக் கதைத்துக் கொண்டு, சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்படுதல் இன்னும் நோய் பரவுவதற்கே வழிவகுக்கும் என்பதை நினைவிற் கொள்ளவும்.
நமது பகுதியில் நோய் பரவுவது பற்றி கல்முனை RDHS வைத்தியர் ஜி. சுகுணனுடன் தொடர்புகொண்ட சந்தர்ப்பங்களில், மக்களின் ஒத்துழைப்பு இதற்கு முக்கியமான தேவையாகவுள்ளது என்றே கூறினார்.
இன்று காலை இவ்விடயமாக மேயர் ஏ.அகமட் சக்கியுடன் பேசிய வேளையில் அவரது கவலையும் அதுவாகவே இருந்தது. அத்துடன் அவா் பின்வரும் விதிமுறைகள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
1. பொறுப்பற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதற்கும், கூடி நிற்பதற்கும் தடை
2. ஊருக்குள் உள்ள கடைகளை திறந்தோ அல்லது இரகசியமாகவோ வியாபாரம் செய்வதற்கு முற்றாக தடை (அதனை மீறுவோரின் அனுமதிப்பத்திரமும் பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்)
3. வீதிகளிலும் வெற்றுக் காணிகளிலும் விளையாடுவதற்கு தடை
இதனை மீறுவோரிற்கு எதிராக படையினர் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதுடன், அவா்களுக்கு வலுக்கட்டாயமாக பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்று மேயர் சொன்னார்.
எனது கணிப்பின்படி,
அக்கரைப்பற்றில் 85-90 சதவீதமானோர் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கின்றனர். 5 சதவீதமானோர் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வருகின்றனா். மீதமுள்ள 5 வீத, அறப்படித்தவர்களை கட்டுப்படுத்தினால் சரி.
ஆறாம் அறிவை பயன்படுத்துவோம்.
