இன்று (29) செவ்வாய்க்கிழமை காலையில் சில நபர்களைச் சந்தித்த போது “ அன்டிஜன் எமது பகுதியில் ஏன் செய்கின்றனர்? சாதாரண தடிமனுக்கும் கொரோனா என்டு காட்டுதாமே” என்று கேட்டார்கள்.
கொரோனா அன்டிஜன் டெஸ்ட் என்பது எமக்கு புதியதாக இருந்தாலும் மற்றைய நாடுகளில் பல மாதங்களாக செய்யப்படும் இலகுவானதும் துரிதமாக முடிவுகளைத் தரும் ஒரு டெஸ்டாகும்.
ஒரு டெஸ்டைப் பொறுத்தவரையில் Sensitivity and Specificity என்று இரண்டு விடயங்கள் காணப்படும்.
( Sensitivity என்பது இங்கே தேவையற்றதால் அதை விளக்கவில்லை)
கொரோனா அன்டிஜன் டெஸ்ட்டின் Specificity ( துல்லியத்தன்மை) அண்ணளவாக 99% ஆகும்.
இதுதான் இப்போது எமக்கு தேவையான விடயம்.
இதன் அர்த்தம் என்னவென்றால் நோய் இல்லாத சாதாரண 100 பேருக்கு இதை செய்யுமிடத்து 99 பேருக்கு நெகடிவ் அல்லது நோயற்றவர் என்பதைக் காட்டும்.
பொசிட்டிவ் என்று டெஸ்ட் காட்டினால் அவர் நோயுள்ளவராக இருப்பதற்கு 99% சாத்தியமுண்டு. இதை இலகுவாகச் சொன்னா இந்த பரிசோதனை முறையாக செய்யப்படும் போது வேற நோயுள்ள ஒருவருக்கு ( உதாரணம் ; சாதாரண தடிமனுக்கு ) இது பொசிட்டிவ் ஆகுவதற்கு சாத்தியம் மிகக் குறைவு.
“என்ன டொக்டர் கணக்கெல்லாம் சொல்றீங்க ஒன்னும் விளங்குதில்ல” என்று சிலர் கேட்கலாம்.
நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் பிரக்னன்டா (கர்ப்பமா) இல்லையா என்பதை கண்டறிய பெண்கள் யூரினில் பார்க்கும் hcg டெஸ்ட்.
இந்த டெஸ்டின் specificity ( துல்லியத்தன்மை) என்பதும் கிட்டத்தட்ட கொவிட் அன்டிஜன் பரிசோதனைக்கு சரிசமமானது.
நான் ஏன் இதனை தெளிவு படுத்துகின்றேன் என்றால், சாதாரண தடிமனுக்கு கொரோனா அன்டிஜன் பொசிட்டிவாகலாம் என்று கூறுவது உண்மையானால் நம்முட மூத்தம்மா, மூத்தவாப்பா மற்றும் பல ஆண்கள் இந்த யூரின் hcg டெஸ்ட் மூலமாக பிள்ளை பெறுவதற்கு அட்மிட் ஆகியிருப்பார்கள்.
இந்த டெஸ்ட் ஏன் விரும்பப்படுகின்றது என்றால், இது இலகுவாக செய்யக்கூடியதும் , விரைவாக முடிவுகளை அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாலேயாகும்.
இந்த அன்டிஜன் பரிசோதனை செய்யப்படும் போது ஆரம்பத்திலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் நோயுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால் மற்றவர்களுக்கு பரவுவதை இலகுவாக கட்டுப்படுத்தலாம்.
எனவே தேவையற்ற வீண் சந்தேகங்களை தவிர்ப்போம், சுகாதார பிரிவினருக்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
