"ஆசிய பௌத்த சமாதான மாநாடு" ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பமானது

 


சமாதானத்திற்கான ஆசிய பௌத்த மாநாட்டின் 13ஆவது செயற்குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் இன்று (14) கொழும்பு 07இல் உள்ள ஸ்ரீ சம்போதி விகாரையில் நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ரஷ்ய மற்றும் மங்கோலிய  பௌத்த தலைவர்கள் ஒரு சர்வதேச பௌத்த அமைப்பின் அவசியம் குறித்து கவனம் செலுத்தினர். இதன் விளைவாக, 1970 ஜூன் 13ஆம் திகதி மங்கோலியாவின் உலன்படாரில் உள்ள பெரிய விகாரையில்  பௌத்த தலைவர்கள் ஒன்றுகூடி ஆசிய பௌத்த சமாதான மாநாட்டின் முதல் மாநாட்டை நடத்தினர். இரண்டாவது மாநாடு இலங்கையில் நடைபெற்றது. தற்போது உலகின் அனைத்து பௌத்த நாடுகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளன.

13 வது செயற்குழு கூட்டத்திற்கான உபசரிப்பு பங்களிப்பை இலங்கை வழங்குகிறது. கொரோனா தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் ஒரு உபசரிப்பு நாடாக செயற்பட கிடைத்தமை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்பதுடன், ஏனைய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளுக்கும் வழிவகுக்கும் என்று ஆசிய பௌத்த மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று ஆரம்பமான செயற்குழு கூட்டத்தில் Zoom தொடர்பாடல் தொழிநுட்பத்தின் ஊடாக 25 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டார். பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் மாநாட்டின் நோக்கத்தை விளக்கினார்.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிரி தேரர், "கோவிட் -19 நிலைமைகளுக்கு மத்தியில் பௌத்தர்களின் பங்கு" என்ற தலைப்பில் ஆரம்ப உரையாற்றினார். பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ சிறப்புரையாற்றினார்.

மங்கோலிய பிரதமர் உக்ஹான் ஜின் குரேல்சுக் வீடியோ தொழிநுட்பத்தின் மூலம் மாநாட்டில் உரையாற்றினார்.

கலாநிதி சங்கைக்குரிய மாயிடிபே விமலசார நாயக்க தேரர் மாநாட்டின் முதல் பகுதியின் இறுதி உரையை நிகழ்த்தினார்.

மாநாட்டின் அங்குரார்ப்பன நிகழ்வை தொடர்ந்து ஸ்ரீ சம்போதி விஹாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய பொலரலன்தே வஜிரஞான நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், புனித தந்தத்தையும் வழிபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பௌத்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


"ஆசிய பௌத்த சமாதான மாநாடு" ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பமானது "ஆசிய பௌத்த சமாதான மாநாடு" ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பமானது Reviewed by Editor on January 14, 2021 Rating: 5