மாகாண சபைத் தேர்தலில் எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை தமது கட்சிக்கு ஒதுக்குவதற்கு ஆளுங்கட்சி தவறினால், தனித்துப் பயணிப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி, 2020 பொதுத்தேர்தலின் போது தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். தமது கட்சி மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்பார்க்கும் அளவில் நியாயமான வேட்பாளர் எண்ணிக்கை கட்சிக்குக் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அந்த நிலைப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் கூறியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வது இலகுவான விடயம் அல்லவெனவும், 13ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரிசல் ஏற்படக்கூடும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் இந்திய – இலங்கை உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மாகாண சபைகளை இரத்து செய்வது என்பது தீயுடன் விளையாடுவதைப் போன்றது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவின் கருத்து!!!
Reviewed by Editor
on
January 01, 2021
Rating:
