அமைச்சர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த ஆளும் கட்சி எம்பி



கனடா அமைச்சர்களை காலிஸ்தானிய தீவிரவாதிகள் என விமர்சித்த ஆளும் கட்சி எம்பியை பிரதமர் ட்ரூடோ கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

கனடாவில் இரண்டு செல்வாக்குமிக்க சீக்கிய எம்பிக்கள் உட்பட லிபரல் கட்சியினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, இந்தோ-கனேடிய எம்பி ரமேஷ் சங்கா ஆளும் லிபரல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒரு அறிக்கையில், அரசாங்க கொறடா மார்க் ஹாலந்து, பிராம்ப்டன் மைய எம்.பி. சங்கா, கட்சியில் உள்ள தனது பல சகாக்களுக்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் ஆபத்தான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என கடந்த வாரம் தாமதமாக தனக்குத் தெரியவந்தது என கூறினார். எனினும், அந்த குற்றச்சாட்டுகள் என்ன என்பதை ஹாலந்து குறிப்பிடவில்லை.

அத்துடன், “நாங்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளதால், சதி கோட்பாடுகளையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பிற கனடியர்களைப் பற்றிய ஆபத்தான மற்றும் ஆதாரமற்ற சொல்லாடல்களையோ நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று ஹாலந்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சங்காவை கட்சியின் குழுவிலிருந்து நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கலந்தாலோசித்ததாகவும் அவர் கூறினார்.

அதோடு லிபரல் கட்சி இனவெறி மற்றும் சகிப்பின்மைக்கு எதிராக உறுதியாக நிற்கிறது என அவர் மேலும் கூறினார்.

முன்னதாக கனடாவில் தெற்காசிய சமூகத்திற்கான பஞ்சாபி மொழி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, கடந்த வாரம் லிபரல் கட்சி எம்.பி. நவ்தீப் பெய்ன்ஸ் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஹர்ஜித் சஜ்ஜன் ஆகியோரை சங்கா விமர்சித்ததை அடுத்து இந்த நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.

பெய்ன்ஸ் மற்றும் சஜ்ஜன் இருவரும் காலிஸ்தானிய தீவிரவாதிகள் என்று சங்கா குற்றம் சாட்டியிருந்தார். பிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து பெயின்ஸ் தனது தீவிரவாத கருத்துக்கள் காரணமாக ராஜினாமா செய்திருக்கலாம் என அவர் கூறினார்.

இதேவேளை கடந்த 2013 ஆம் ஆண்டில் ட்ரூடோ தலைமை பொறுப்பிற்கு வர முக்கிய பங்கு வகித்த 43 வயதான சீக்கிய தலைவர் பெய்ன்ஸ், இந்த மாத தொடக்கத்தில் அமைச்சரவையில் இருந்து விலகினார். அவர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறினார்.

2015’ஆம் ஆண்டில் முதன்முதலில் லிபரல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கா, கடந்த காலத்தில் தனது கட்சி சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

2019 கூட்டாட்சித் தேர்தலுக்கு சற்று முன்னர், சங்கா பஞ்சாபி மொழி சேனலுக்கு வழங்கிய ஒரு நேர்காணலில், ட்ரூடோவின் சீக்கிய அமைச்சர்கள் காலிஸ்தானிய பிரிவினைவாதிகள் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த ஆளும் கட்சி எம்பி அமைச்சர்களை  தீவிரவாதிகள் என விமர்சித்த ஆளும் கட்சி எம்பி Reviewed by Sifnas Hamy on January 27, 2021 Rating: 5