என்னுடைய நெடுநாள் விருப்பம், நண்பர்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன்....


(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் விருப்பம் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், பேஜஸ் புத்தக இல்ல உரிமையாளரும், அரசியல் மற்றும் இலக்கிய ஆய்வாளருமான சிராஜ் மஸூர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

'அக்கரைப்பற்று வரலாறு' என்ற அரிய நூலை எழுதிய ஏ.ஆர்.எம்.சலீம் என்னுடைய பெரிய தந்தை- வாப்பாவின் மூத்த சகோதரர். இந்தப் பிரதேசத்தில் ஊர் வரலாற்றைத் முதன்முதலில் எழுதியவர் அவர்தான். அவரது ஆழமான, சலிப்பின்றிய உழைப்பையும் தேடலையும் இந்த வேளையில் நன்றியோடும் வியப்போடும் மனங்கொள்கிறேன்.
ஆனால், விஞ்ஞானபூர்வமாக- ஆய்வு முறையியலைப் பின்பற்றி- இந்த வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் புதிய வெளிச்சங்களும் பொருள்கோடல்களும் சாத்தியப்படும்.

இதை எங்கிருந்து தொடங்குவது?

மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாற்றுத் தொன்மை மிக்க இடங்களான தீகவாபியிற்கும் சாகாமத்திற்கும் இடையில்தான் அக்கரைப்பற்று அமைந்திருக்கிறது. அங்கிருந்துதான் இதைத் தொடங்க வேண்டும்.

சாகாமக் குளத்திற்கு அருகேதான் மொட்டையாகல் மலை இருக்கிறது.
எங்களது வயலுக்குப் பக்கத்கத்தில் இருக்கும் இந்த மலையில் சின்ன வயதில் அதில் ஏறி விளையாடியிருக்கிறேன். அதிலுள்ள பிராமி கல்வெட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இப்பிரதேசத்தில் இருந்த மனித நடமாட்டத்தின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

இந்தப் பிரதேசத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. ருஹுணு ராச்சியத்திற்கும் அநுராதபுர ராச்சியத்திற்கும் இடையேயான போக்குவரத்துப் பாதையில்தான் அக்கரைப்பற்று பிரதேசம் அமைந்திருக்கிறது. பிற்கால சோழர்களின் ஆள்புலமாகவும் இது இருந்திருக்கிறது.

அக்கரைப்பற்று என்பது தனியொரு ஊரின் பெயராக இன்று மாறியிருந்தாலும், இப்பிரதேசத்திலுள்ள பல ஊர்களிற்கான பொதுப் பெயராகவே அது முன்னர் வழங்கியுள்ளது. இப்போதுள்ள அக்கரைப்பற்றின் பழைய பெயர் கருங்கொடித்தீவு ஆகும். இப்பிரதேசத்தின் முக்கிய சந்தியாக விளங்கியதால், பிற்காலத்தில் அக்கரைப்பற்று என்ற பொதுப் பெயர் கருங்கொடித்தீவின் பெயராக மாறிவிட்டது.

ஆகவே, அக்கரைப்பற்றின் ஆதி வரலாறு என்பது இன்றைய அக்கரைப்பற்றின் வரலாறு மட்டுமல்ல. அது அக்கரைப்பற்று, திருக்கோவில், தம்பிலுவில், அட்டாளைச்சேனை, தீகவாபி பாலமுனை, ஒலுவில், ஆலையடிவேம்பு, பனங்காடு, கோளாவில், சாகாமம், அளிக்கம்பை, கஞ்சிகுடிச்சாறு, இசங்கணிச்சீமை, மாந்தோட்டம், அம்பலத்தாறு, இறக்காமம், நைனாகாடு என்ற பரந்த நிலப்பரப்பின் வரலாறாகும்.

இந்த வரலாற்றை எழுதும் முயற்சியை இன்று தொடங்கியிருக்கிறேன். இதை ஒரு குழு முயற்சியாக வளர்த்தெடுக்க வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கிறேன் என்று அவர் கேட்டுள்ளார்.
என்னுடைய நெடுநாள் விருப்பம், நண்பர்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன்.... என்னுடைய நெடுநாள் விருப்பம், நண்பர்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன்.... Reviewed by Editor on January 26, 2021 Rating: 5