காத்தான்குடி நிலவரம் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு!!!


காத்தான்குடி நிலவரம் தொடர்பில் காத்தான்குடி பிரமுகர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ அனுராதா யஹம்பத் அவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு கச்சேரியில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது என்று காத்தான்குடி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என்‌.முபீன் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு சந்திப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளர் யூ.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மாகாண  முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவர்கள் ஆளுநரிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்க  நடைபெற்றது. 

இச்சந்தர்ப்பத்தில் காத்தான்குடியின் தற்போதைய கொரோனா  நிலமைகள் தொடர்பில் ஆளுனருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

காத்தான்குடியின் கொரோனா தொற்று நிலைமைகள் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலைமைகள் ஆதாரபூர்வத்துடன் தரவு ரீதியாகவும் விளங்கப்படுத்தப்பட்டது. அத்தோடு காத்தான்குடி கொரோனா முடக்கம் காத்தான்குடிக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டதுடன், முடியுமான வரை உடனடியாக முடக்கத்தை நீக்குமாறும் கோரிக்கை  முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் பதில் அளித்த ஆளுநர்,

இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு காத்தான்குடி மற்றும்  கொரோனா  விடயங்கள் தொடர்பில்  நடைபெறும் விஷேட கூட்டத்தில் காத்தான்குடி தொடர்பில் பொருத்தமான தீர்மானம் எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் காத்தான்குடி  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையும் மகஜரும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.நபீல், சமூக செயற்பாட்டாளர் நவாஸ் முகம்மத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 


காத்தான்குடி நிலவரம் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு!!! காத்தான்குடி நிலவரம் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு!!! Reviewed by Editor on January 18, 2021 Rating: 5