பாராளுமன்ற வளாகத்தில் வாரத்துக்கு ஒரு தடவை பாராளுமன்றப் பணியாளர்களை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், இந்தப் பரிசோதனைகளில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப் பகுதியிலும், அமர்வுகள் இடம்பெறாத காலப் பகுதியிலும் வாராத்துக்கு ஒரு தடவை இவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பா பண்டார தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அறியக்கிடைத்த பின்னர் அவருடன் சிறிது நேரம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி உபுல் கலப்பதி தானாக முன்வந்து பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு உட்பட்டதுடன், இவற்றில் தொற்று ஏற்படவில்லையென்பதை உறுதிப்படுத்தும் வைத்திய அறிக்கை படைக்கல சேவிதரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது.
2021 ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் இதுவரை பாராளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் இறுதியாக 2021-01-25ஆம் திகதி 190 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டது.
Reviewed by Editor
on
January 28, 2021
Rating:
