ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அமெரிக்க காங்கிரஸில் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை அமெரிக்க நாடமாளுமன்ற கட்டிடத்திற்குள் திடீர் என நுழைந்த டொனால்ட் டிரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அமெரிக்காவையும் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க காங்கிரஸ் முன்னிலையில் துணை அதிபர் மைக்பென்ஸ் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து கொண்டிருந்தவேளை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து உடனடியாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். டிரம்பின் ஆதரவாளர்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினருடன் மோதியதுடன் துப்பாக்கி பிரயோகத்திலும் ஈடுபட்டதுடன் இதனால் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்களிற்கு டிரம்ப் வேண்டும் என கோசமிட்டபடி காங்கிரஸிற்குள் செல்வதையும்,செனட் தலைவரின் ஆசனத்தில் ஒருவர் அமர்ந்திருப்பதையும் ஊடகங்கள் காண்பித்துள்ளன.
ஒருவர் நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு சென்று டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார் என கோசம் எழுப்புவதை காணமுடிந்துள்ளது.
இந்த குழப்பத்தினை தொடர்ந்து அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டிரம்பின் ஆதரவாளர்களின் பல மணிநேர முற்றுகைக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்றம் மீண்டும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது என நாடாளுமன்ற படைகல சேவிதர் அறிவித்துள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
January 07, 2021
Rating:



