
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் நாளை (04) திங்கட்கிழமை திறக்கமுடியும் எனவும் ஆனால் சுகாதார திணைக்களம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
இன்று (03) மாலை மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாகவுள்ளதனால் அப்பகுதிக்குள் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வர்த்தகர்கள் வரமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
தைப்பொங்கல் வரவுள்ளதனால் வர்த்தக நிலையங்களை நடாத்துபவர்களும் வருகைதரும் மக்களும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த நான்கு நாட்களாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய மூடப்பட்டிருந்தது. நாளை திங்கட்கிழமை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்.
ஆனால் வர்த்தகர்கள் அனைவரும் சுகாதார திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றவேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக சமூக இடைவெளியை பேணுதல், கைகழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுவதன் மூலமே தொடர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்.
அனைத்து வியாபார நடவடிக்கைகளும் மாலை 7.00மணியுடன் நிறுத்தப்பட்டு சுகாதார திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு வழிவிடவேண்டும். இதேபோன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக பூநொச்சிமுனை போன்ற பகுதிகளில் இருந்து ஊழியர்களோ,வர்த்தகர்களோ இங்குவந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாது. திணைக்கள தலைவர்கள் கூட அப்பகுதிகளில் இருந்து உத்தியோகஸ்தர்களை அழைப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
நாங்கள் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவிடத்து மட்டக்களப்பு மாநகரத்திற்குள்ளும் கொரனா தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றிசெயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அவ்வாறு பின்பற்றப்படாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மாநகரசபையின் கட்டளை சட்டத்தின் கீழும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தைத்திருநாள் வருவதன் காரணமாக வர்த்தக நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு செல்லாது சரியான விதிமுறைகளை பின்பற்றவேண்டும்.பொதுமக்கள் அவ்வாறு சுகாதார நடைமுறைகளை பேணுவதன் ஊடாகவே வர்த்தக நிலையங்கள் திறப்பதற்கான அனுமதியை தொடர்ச்சியாக வழங்கமுடியும்.
நாளை தினம் முன்னெடுக்கப்படும் நடைமுறைகளைப்பொறுத்தே வர்த்தக நிலையங்களை தொடர்ந்து திறப்பதா மூடுவதா என்பது தீர்மானிக்கப்படும். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கொரனா தொற்றின் தடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றேன்.
வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளையின் அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படும்.இன்றும் சில பகுதிகளில் பொது இடங்களின்அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
