பாத்திமா பஜீகா விலக்கப்பட்டமைக்கு எதிராக தடையுத்தரவு!!

 

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (11) அக்கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு ஆரதவளித்து, அவரது தேர்தல் முகவராக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் திருமதி அலியார் பாத்திமா பஜீகா, அவரது கட்சி அங்கத்துவம் கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகரவினால் நீக்கப்பட்டிருந்தது.

இச்செயல் சட்டமுரணான செயல் என்று கட்டளையிடக்கோரி அவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு திங்கட்கிழமை (11) கொழும்பு மாவட்ட நீதிபதி ரஸான்த கொடவெல முன்னிலையில் எடுக்கப்பட்டபோது வழக்காளி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கனிஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம்.ஐனுள்ளாஹ் மற்றும் சட்டத்தரணி ஆனந்த குலவன்ஸ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி குறித்த வழக்காளியின் அங்கத்துவம் நீக்கப்பட்டதானது முதற்தோற்ற பார்வையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கும் இயற்கை நீதிக்கும் முரணானது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டு வழக்காளியை கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கிய தீர்மானத்தை இடைநிறுத்தி கட்டானை வழங்கினார்.

இவ்வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் அன்றைய தினம் நீதிமன்றுக்கு ஆஜராகுமாறு மேற்படி பிரதிவாதிகள் இருவருக்கும் அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில் கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகர முதலாவது பிரதிவாதியாகவும் தெரிவத்தாட்சி அலுவலகர் ஆர்.சகீலன் இரண்டாவது பிரதிவாதியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாத்திமா பஜீகா விலக்கப்பட்டமைக்கு எதிராக தடையுத்தரவு!! பாத்திமா பஜீகா விலக்கப்பட்டமைக்கு எதிராக தடையுத்தரவு!! Reviewed by Editor on January 11, 2021 Rating: 5