சோதனைகள், சிரமங்கள் ஏற்படும் போது தொழுகை, நோன்பு, துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு, அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்புவது அச்சோதனைகள் நீங்குவதற்கும் அதன் மூலம் நலவுகள் உருவாகுவதற்கும் காரணமாக அமைகின்றது.
மேலும், சோதனைகளின் போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைகளில் குனூதுன்னாஸிலா ஓதிவந்துள்ளார்கள். இதனை அடிப்படையாக வைத்து நாமும் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற குனூதுன்னாஸிலா ஒதிவந்தோம்.
தற்போது நாட்டில் கொரோனாவின் அச்சுறுத்தல் மட்டுமல்லாது, அரபு மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் போன்றவற்றுக்கான அச்சுறுத்தல்களும் மீண்டும் முடக்கிவிடப்படுவதால், இவை அனைத்திலிருந்தும் பாதுகாப்புப்பெற சுருக்கமாகவும், உருக்கமாகவும், மஃமூம்களுக்கு சிரமமில்லாத முறையில் தொடர்ந்தும் ஐவேளைத் தொழுகைகளில் குனூதுன்னாஸிலாவை ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறு மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்வதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வாக் குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.
