(றிஸ்வான் சாலிஹூ)
கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் ஒன்றினையும் நாங்கள் விட்டு கொடுக்கமாட்டோம் என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு செயலாளரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று (22) திங்கட்கிழமை அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இரவு கல்முனை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் திருக்கோவில் பாலக்குடா பகுதியில் நீண்டகாலமாக பேரூந்து சேவை இல்லாமல் இருந்தது. தற்போது பேரூந்து ஒன்றினை வழங்கி அச்சேவையை ஆரம்பித்து வைத்துள்ளோம். 600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு பனம் பொருள் உற்பத்தி தொடர்பில் ஒரு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.
குறிப்பாக தம்பட்டை திருக்கோவில் தாண்டியடி போன்ற இடங்களில் உள்ள குறித்த நிலையங்கள் உள்ள இடங்களை சென்று பார்வையிட்டோம். சிறந்த முறையில் இவ்வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பனம் உற்பத்தி பொருட்களை பெண்கள் மிக சிறப்பாக உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு குடும்ப பெண்களுக்கும் மாதாந்தம் ரூபா 3000 நிதியுதவி வழங்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.
ஆகவே இங்கு ஒன்றினை கூற விரும்புகின்றோம். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் ஒன்றினையும் விட்டுகொடுக்க மாட்டோம். தொடர்ந்தும் இத்திட்டத்தில் எமது முயற்சி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். மிக விரைவில் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளேன்.அந்த சந்திப்பில் கூட கல்முனை விடயத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கான ஆவணங்களை தயார்படுத்தி வைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
February 23, 2021
Rating:


