இரண்டுவருடங்களிற்கு முன்னர் உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களை மன்னிக்க தயாராக உள்ளோம்,ஆனால் என்ன நடந்தது என்ற உண்மையை அறியவேண்டியது அவசியம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் அவசியம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வருடங்களிற்கு முன்னர் தாக்குதலை மேற்கொண்டவர்களை மன்னிக்க தயாராகவுள்ளோம் இந்த தேவாலயத்திற்குள்ளேயே கொலைகள் இடம்பெற்றன. நாங்கள் கிறிஸ்தவர்களாக பதில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை நாங்கள் அவ்வாறு செயற்பட்டிருந்தால் இன்னமும் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ போதனைகளிற்கு ஏற்ப எங்களால் பதில்வன்முறையில் ஈடுபடமுடியாது இயேசுநாதர் எங்களிற்கு மன்னிப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கின்றார்.எங்களிற்கு தீமை இழைப்பவர்களை மன்னிக்க கற்றுக்கொடுத்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை சிலுவையில் அறைந்து கொலை செய்தவர்களை அவரே மன்னித்தார் தன்னை கொலை செய்தவர்களை மன்னிக்குமாறு அவரே பிரார்த்தனை செய்தார் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எனினும் ஏப்ரல் 21 தாக்குதலை திட்டமிட்டது யார் என்பதை கண்டுபிடிக்கவேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச அமைப்பொன்று தொடர்புபட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டியதும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதை தடுப்பதற்கு சட்டங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தியடையமுடியுமா என தெரிவிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(தினக்குரல்)
