ஜனாதிபதி தலைமையில் மடிக்கணினி வழங்கல்



பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு சலுகை கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

முழு கல்வி முறையையும் தற்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் மயமாக்குவதற்கான "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக மக்கள் வங்கியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மக்கள் வங்கி ரூ. 03 பில்லியனை ஒதுக்கியுள்ளது.

இணைய இணைப்பு, மென்பொருள் பொதி மற்றும் 4 வருட உத்தரவாதத்துடன் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. ஒரு கணினியின் பெறுமதி 80,000 ரூபாவாகும். தொழிலொன்று கிடைத்த பின்னர் 06 ஆண்டுகளில் மொத்த பெறுமதியை திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் கடன்கள் வழங்கப்படுகின்றன. 

மாணவராக இருக்கும் காலத்தில் மாதாந்தம் செலுத்த வேண்டிய தொகை ரூ. 500 ஆகும். 2021ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நுழைவைப் பெறும் ஆறு புதிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் அதற்கான கடிதங்களை இன்று (09) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


ஜனாதிபதி தலைமையில் மடிக்கணினி வழங்கல் ஜனாதிபதி தலைமையில் மடிக்கணினி வழங்கல் Reviewed by Editor on February 09, 2021 Rating: 5