"Made in Sri Lanka" வர்த்தக கண்காட்சி திறந்து வைப்பு!!

 


மேட் இன் ஸ்ரீலங்கா (Made in Sri Lanka) வர்த்தக கண்காட்சி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (13) சனிக்கிழமை முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

இந்நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் சந்தை இலக்குகளை அடைவதற்கான வாய்ப்பைத் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேட் இன் ஸ்ரீலங்கா என்ற எண்ணக்கருவிற்கு அமைய கொழும்பு 07 மன்றக் கல்லூரி மாவத்தையில் இந்த வர்த்தக கண்காட்சி இடம்பெறும்.


கைத்தொழில் அமைச்சின் கீழ் தேசிய நிறுவன மேம்பாட்டு அதிகாரசபையினால் இந்த வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை (14) ஆகிய இரு தினங்கள் முற்பகல் 10 மணிமுதல் இரவு 8 மணிவரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.இதன்போது கண்காட்சி கூடங்களை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்.


தேசிய மட்டத்தில் வர்த்தக கண்காட்சி ஊடாக இந்நாட்டு தொழில்முனைவோரை பலப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

மேட் இன் ஸ்ரீலங்கா எண்ணக்கருவினூடாக விற்பனை நிலையங்களை ஸ்தாபித்தல், இணைய வணிக மார்க்கத்தை நிர்மாணித்தல் மற்றும் நாடு முழுவதும் வர்த்தக கண்காட்சிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள், 

கௌரவ பிரதமரே, நீங்கள் 2005 ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஜனாதிபதியாக நீங்கள் பதவியேற்றதை தொடர்ந்து சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சிந்தனையில் ஒரு பாரிய புரட்சி ஏற்பட்டது. தோல்வியடைய செய்ய முடியாது என்ற பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்து காட்டினார். மேலும், தேசியவாதத்திற்கு முன்னுரிமையளித்து நம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை தேசியவாதத்துடன் இணைத்து கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை 2005-2015ஆம் ஆண்டின் ஆரம்பம் வரையான காலகட்டத்தில் நீங்கள் கட்டியெழுப்பி காட்டினீர்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிறுவியதுடன் கொழும்பு துறைக நகரையும் நிறுவினீர்கள். 

மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதன் மூலம் தேசிய மின்சார தேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள். பொருளாதார வளர்ச்சி வேகம் 6 சதவீதத்திற்கும் மேலாக பராமரிக்கப்பட்டது. அந்த தசாப்தம் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு அழகான அத்தியாயம். அந்த அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான எமது தற்போதைய அரசாங்கம் மஹிந்த சிந்தனையை அடிப்படையாக கொண்ட அந்த தேசியவாதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டு மேட் இன் ஸ்ரீலங்கா எண்ணக்கருவை மேம்படுத்துவதற்கான தன்னம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதை கொண்டு பெருமை மற்றும் கௌரவமடைய முடியும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, இலங்கைக்கான ஜப்பான் மற்றும் பிரான்ஸ் தூதுவர்கள், அமைச்சின் அதிகாரிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


(பிரதமர் ஊடக பிரிவு)

"Made in Sri Lanka" வர்த்தக கண்காட்சி திறந்து வைப்பு!! "Made in Sri Lanka" வர்த்தக கண்காட்சி திறந்து வைப்பு!! Reviewed by Editor on February 13, 2021 Rating: 5