2021 ஆண்டின் கருப்பொருள் நீருக்கு பெறுமதி சேர்த்தல் ஆகும். நீர் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ம் திகதி உலக நீர் தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
நீரானது உயிரினங்களின் நிலவுகைக்கு மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும். நீரின்றி மூன்று நாட்களுக்கு மேல் எம்மால் உயிர் வாழவே முடியாது. புவியானது அதிகளவு நீரால் சூழப்பட்டுள்ளதால் நீலக் கோள் எனவும் அழைக்கப்படுகின்றது. எனினும் உயிர் அங்கிகளின் பயன்பாட்டிற்கு பெற்றுக் கொள்ளக் கூடிய நீர் வளம் வரையறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது.
புவியின் மொத்தப் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோ மீற்றராக காணப்படுவதோடு இதில் 361 மில்லியன் சதுர கிலோ மீற்றர் (71%) நீர்ப்பரப்பாகவும் காணப்படுகின்றது. இந் நீர்ப்பரப்பில் 97.5% மான நீர் உவர் நீராகவும் எஞ்சியுள்ள 2.5% மான நீர் நன்னீராகவும் காணப்படுகின்றது. இந் நன்னீரில் 69% மான நீர் துருவப்பிரதேசங்களில் பனிப்போர்வைகளாகவும், 30% மான நீர் தரைக்கீழ் நீராகவும் 1%மான நீர் பயன்படுத்தக் கூடிய நீராகவும் காணப்படுகின்றது.
மேலும் பயன்படுத்தக் கூடிய 1% மான நீரில் 67.5% மான நீர் ஏரிகளிலும் ,12% மான நீர் மண்ணீராகவும் ,9.5% மான நீர் வளிமண்டலத்தில் நீராவியாகவும்,8.5% மான நீர் சதுப்பு நில நீராகவும், 1.5% மான நீர் ஆற்றுப்படுகைகளிலும் எஞ்சியுள்ள 1 % மான நீர் உயிர் வாழ் அங்கிகளுக்கான நீராகவும் காணப்படுகின்றது.
அதாவது மொத்த பூகோள நீர்ப்பரப்பில் எமக்கு கிடைக்கும் நன்னீரானது அண்ணளவாக 0.03 % ஆக காணப்படுகின்றது. இதனாலேயே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நீர் தொடர்பாக விசேடமாக கவனம் செலுத்துகின்றது.
2025ம் ஆண்டில் உலக சனத்தொகையில் 2/3 பகுதியினருக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. தற்போது 2.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பற்ற நீரைப்பருகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
இத்தகைய நிலைமைகளை ஒரளவுக்கு சீர்செய்யுமுகமாக 2030 ம் ஆண்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDG) இன் 06வது குறிக்கோளாக நீர் மற்றும் சுகாதாரம் என்ற நோக்குடன் உலக நாடுகள் யாவும் பயனிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் தாபனம் வலியுறுத்தியுள்ளது.
நீரின் முக்கியத்துவம்.
1.உயிரங்கிகளின் வாழ்க்கைக்கு ஆதாரமாக / அடிப்படையாகக் காணப்படுகின்றது.
2. உயிரங்கிகளின் இருப்பிற்கு இன்றியமையாதது வளமாக நீர்க்கோளம் திகழ்கின்றது.
3.ஏராளமான மூல வழங்களின் இருப்பிடமாக காணப்படுகின்றது.
4. நீரியல் வட்டம் சிறப்பாக நடைபெறக் காரணமாக உள்ளது.
5.நீர் வழிப் போக்குவரத்துக்கு உதவுகிறது.
6.பயிர் செய்கைக்கு அவசியமாகின்றது.
7.சமுத்திர நீரோட்டங்கள் காரணமாக காலநிலை மாற்றத்திற்கு பெரும் பங்காற்றுகின்றது.
8.நீர் மின் உற்பத்திக்கு பயன்படுகின்றது.
இலங்கையில் நீர் மாசடைதல்.
நாடு முழுவதும் குடிநீர் போத்தல்களின் பாவனை மிக வேகமாக அதிகரித்து வருவதனைக் காணலாம். இதுவே நாம் பயன்படுத்தும் நீரானது மாசடைந்து வருவதற்கு ஆதாரமாகவும், நீர் நிலைகள் மாசடைவதற்கு தூண்டுகோலாகவும் காணப்படுகின்றது.
1. நன்னீருடன் கடல் நீர் கலத்தல்.
2. நன்னீருடன் நுண்ணுயிர்கள் கலத்தல்.
3.மலசலக் கழிவுகள் சூழலுக்கு திறந்து விடப்படல்.
4.வீட்டுக் கழிவுகள் சூழலுக்கு திறந்து விடப்படல்.
5.செயற்கைப் பாசளை, பீடைநாசிப் பாவனை அதிகம்.
6.கைத்தொழில் கழிவுகள் நீருடன் கலத்தல்.
7.அசுத்தமான வாயுக்கள் நீருடன் கலத்தல்.
8.சுரங்கம், மணலகழ்வு நடவடிக்கைகள். என்பனவாகும்.
நீரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்.
1.நீரைச் சிக்கனமாக பயன்படுத்தல் ( வினைத்திறனாக)
2.மழைநீரை சேகரித்து பயன்படுத்தல்.
3.புதிய நீர் நிலைகளை உருவாக்குதல் மற்றும் புனரமைப்பு செய்தல்.
4.தரைக்கீழ் நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வழிவகைகளைத் திட்டமிட்டல்.
5.உவர் நீரின் உவர் தன்மையை நீக்கிப் பயன்படுத்தல்.
6.பயன்படுத்திய நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தல்.
7.நீரேந்து பிரதேசங்களைப் பாதுகாத்தல்.
8.நீர் மாசடைதலைத் தடுத்தல்.
9.நீர் தொடர்பாக மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு செய்தல்.
10.வீண்விரயமாகிக் கொண்டிருக்கும் நீரைப் பாதுகாத்தல் என்பனவாகும்.
இலங்கையில் இயற்கை நீர் வீண்விரயங்கள்.
எமது நாட்டில் காணப்படும் 103 நதிகளில் உலர் வலயத்தில் 80 நதிகளும் ஈர வலயத்தில் எஞ்சிய நதிகளும் காணப்படுகின்றது. இந் நதிகளில் பெருக்கெடுத்து வரும் மழை நீரில் அதிகளவு நீர் வீணாக கடலைச் சென்றடைகின்றது.
உதாரணமாக-
1. இலங்கையின் மிக நீளமான நதியான மகாவலி கங்கையில் (335km) இருந்து 20% நீர் வீண்விரயமாகின்றது. இதன் நீரேந்து பரப்பளவு 10327 சதுர km ஆகும். இது இலங்கையின் நிலப்பரப்பில் 1/6 பகுதியாகக் காணப்படுகின்றது.
2.133 km நீளமான ஜின் கங்கையிலிருந்து 48% நீர் வீண்விரயமாகின்றது.
3.145km நீளமான களனி கங்கையிலிருந்து 43% நீர் வீண்விரயமாகின்றது.
4.134 km நீளமான மஹா ஓயா, 129 km நீளமான களுகங்கையிலிருந்து 42% மான நீர் வீண்விரயமடைகின்றது.
இவ்வாறு பல்வேறு முறைகளில் இயற்கை நீரானது வீண்விரயமடைந்து கொண்டிருக்கின்றது. பண்டைய கால மன்னர்களில் ஒருவரான பொலனறுவை இராசதானியை ஆட்சி செய்த மகா பராக்கிரமபாகு மன்னனின் கூற்றானது,
விண்ணிலிருந்து விழும் ஒரு துளி நீரையேனும் மனித தேவைக்கு பயன்படுத்தாமல் வீணாக கடலைச் சேர இடமளியேன் எனக் கூறி பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டினான்.
இக் கூற்று எம்மில் அதிகமானோருக்கு தெரிந்தும் கூட பாரியளவிலான நீர் வீண்விரயமடைந்து கொண்டிருக்கின்றது என்பது மிகவும் கவலையளிக்கின்றது.
எனவே மானிடர் சமுகமாகிய நாம் திட்டமிட்டு வினைத்திறனாக நீரைப் பயன்படுத்தும் போது தற்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான நீர் கிடைப்பதோடு, எதிர்கால சந்ததியினருக்கு நீர் கிடைக்க வழிவகை செய்ய முடியும். சிறிய முயற்சிகள் மூலம் வரையறுக்கப்பட்ட நீர் வளத்தைப் பேணிப்பாதுகாப்போம்.
AGRICULTURE SCIENCE TEACHER,
AK/AS - SIRAJ MAHA VIDYALAYA,
AKKARAIPATTU.
