முன்னோடி மாணவர்களாக வளர்வதற்கு நம்பிக்கையோடு பரீட்சை எழுதுங்கள் - அதாஉல்லாஹ் எம்.பி

(றிஸ்வான் சாலிஹூ)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணங்கள் நிறைவேற இறைவன் அருள்பாலிக்கட்டும் என தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள் மாணவர்களுக்கான தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

மேலும் அவரது மாணவர்களுக்கான வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அடைவுகள் நல்ல முறையில் அமைந்து, அவர்களது கல்விக்கான கனவுகள் நனவாக வல்ல நாயன் துணை புரிவான். கல்வியின் வெளிச்சம் தான் சமூகங்களின் மத்தியில் பீடித்துள்ள கறைகளைப் போக்கும். 

ஒருவரை ஒருவர் உளமாறப் புரிந்து கொள்வதற்கான இளைய தலைமுறைகளுக்கு இன்றைய மாணவர்கள் உதாரணமாக செயற்பட வேண்டும். தொழிலுக்காக மட்டுமன்றி மனிதாபிமானத்தையும் வளர்த்துக் கொள்ளும் பருவமாகவே பாடசாலைக் காலங்கள் உள்ளன. 

எனவே, இன்று (மார்ச் 01) சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்புற பரீட்சை எழுதி, முன்னோடித் தலைவர்களாவதற்கான வளமான எதிர்காலத்துக்குள் பிரவேசிக்கப் பிரார்த்திப்பதோடு, இதற்கான நல்ல பெறுபேறுகளை எமது மாணவச் செல்வங்கள் பெறுவதற்கும் வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார்.

இதுவரை காலமும் தமது பிள்ளைகளை கல்வியின்பால் ஊக்கப்படுத்திய பெற்றோர்கள், இவர்களுக்கு உற்சாகமளித்த கல்விச் சமூகத்தவர்கள் பாராட்டுக்குரியவர்களே, காலந்தாழ்த்தியாவது இந்தப் பரீட்சை நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. 

கொடிய கொரோனாவின் சவால்களுக்கு மத்தியில் இப்பரீட்சையை நடாத்துவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகள் அரசாங்கத்தின் தைரியத்தையே காட்டுகிறது. கல்வி அதிகாரிகள் எடுத்துக் கொண்ட அர்ப்பணிப்புகளும் மகிழ்ச்சியளிக்கிறது.   

ஆகவேதான் அனைத்து மாணவர்களும் இந்தக் கல்விப் பொதுச் சாராதரண தரப்பரீட்சையில் மிகக் கவனம் செலுத்தி, மாணவர்கள் நல்ல அடைவுகளைப் பெறவும் பிரார்த்திக்கிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


முன்னோடி மாணவர்களாக வளர்வதற்கு நம்பிக்கையோடு பரீட்சை எழுதுங்கள் - அதாஉல்லாஹ் எம்.பி முன்னோடி மாணவர்களாக வளர்வதற்கு நம்பிக்கையோடு பரீட்சை எழுதுங்கள் - அதாஉல்லாஹ் எம்.பி Reviewed by Editor on March 01, 2021 Rating: 5