சிங்கள தலைவர்களின் மனங்களில் உருவாகியுள்ள மாற்றம் வானத்தினால் விழுந்தது அல்ல, அது அதாஉல்லாஹ்வின் முயற்சி!!
(றிஸ்வான் சாலிஹூ)
தனது சமூகத்திற்காக பிற சமூகத் தலைவர்களை சாதகமாய் பேசத்தூண்டுவது தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லாஹ்வின் நடத்தை சார்பு அரசியல் கலையாகும் என்று அரசியல் விமர்சகர் எஸ்.எம்.தல்ஹா தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சகர் தல்ஹா தற்கால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார், மேலும் அவர் கூறுகையில்...
இனவாதத் தீயினை பெரும் நெருப்பாக மூட்டி மக்கள் சிந்தனையினை இருட்டடிப்பு செய்தவர்கள் பாமர மக்களின் அறியாமையின் மீது பொய்யினை மெய்யாக பரப்புரை செய்து அரசியல் இருப்பினை தக்க வைத்துள்ளார்கள். அந்த வகை அரசியல் தலைவர்களால் முஸ்லிம் சமூகம் சாம்பல் தீவு நோக்கி சென்றுவிட்டது.
மேற்சொன்ன முஸ்லிம் அரசியல் தலைவர்களாக அடையாளம் காணப்பட்ட ஹக்கீம், றிஷாட்டின் குரலுக்கு பெரும்பான்மைச் சமூகத்தின் சிறு துரும்பும் செவிசாய்ப்பதில்லை. சந்தேகம், நம்பிகையீனம், காட்டிக் கொடுப்பு போன்ற அரசியல் நடத்தைகளால் முஸ்லிம் இன வெறுப்பு வரலாற்றில் ஒரு போதுமில்லாத அளவு அதிகரிக்க காரணமானார்கள். ஆளும் அரசாங்கத்தின் வாசல் கதவினைக்கூட அவர்களால் தட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.
சிங்கள அரசின் மையம் இனவாத சிந்தனை எனும் எரிவாயுவில் இயங்கத் தொடங்கி பலவருடங்கள் சென்றுவிட்டது. இருப்பினும் சகவாழ்வு எனும் அரசியல் கலாச்சாரத்தால் சிறுபான்மைச் சமூகம் நிம்மதி பெருமூச்சு விட்டு சற்று ஓய்வுநிலையில் காணப்பட்டார்கள். நமது அரசியல் வாதிகள் மற்றும் கடும் போக்கு மதவாதிகளின் நடத்தைக் கோலங்கள் சமூக இடைவெளியை அதிகரிக்கலானது.
இப்படியான அரசியல் இடைவெளியில் பெரும்பான்மைச் சமூகம் செவிசாய்க்கும் முஸ்லிம் சமூகத்தின் முன்மாதிரி அரசியல் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாஹ் உணரப்படுகிறார்.
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாஷா எரித்தல் இலங்கையில் ஆரம்பிக்கும் போது பாராளுமன்ற அதிகாரம் அற்றவராக ஏ.எல். எம்.அதாஉல்லாஹ் காணப்பட்டார். ஆதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவராக அவரினால் அதிகார பூர்வ கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. கலந்து கொண்ட அரசியல் தலைவர்களான ஹக்கீம் மற்றும் றிஷாட் போன்றோரினால் எதனையும் சாதிக்க முடியாமல் போனது. ஆனால் றஊப் ஹக்கீம் தனியாக பேச இடம் தேடினார். தனியாக றஊப் ஹக்கீம் பேசினால் வழமை போன்று எதனை கேட்பார் என்பது ராஜபக்ஸக்களுக்கு விளங்கியதால் அதனை நிராகரித்தனர்.
அன்றைய தினம் அரசாங்க ஆதரவு கட்சித்தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஏ.எல்.எம்.அதாஉல்லா ஜனாஷாக்களை எரிக்கமுடியாது அதனை தன்னிடம் தரவேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அதற்கு நிலத்தடி நீரில் வைரஸ் பரவுவதாக பதில் கிடைத்த போது வைரஸ் எப்படி பரவுகிறது என்பதனை எனக்கு நிருபணம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ச்சியாக விடுத்து வந்தார். பின்னர் பல்வேறு வகையான சந்தர்ப்பங்களை உருவாக்கி சிங்கள தலைவர்களை சந்தித்து கருத் தொருமைப்பாட்டிக்கு கொண்டுவருவதில் வெற்றியும் கண்டார்.
தற்போது சிங்கள அரசியல் தலைவர்களின் மனங்களில் உருவாகியுள்ள மாற்றம் வானத்தினால் விழுந்தது அல்ல அதன் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாஹ்வின் முயற்சி மிகையளவில் உள்ளது என்பதனை மனச்சாட்சியோடு வாழ்வோர் மறக்க முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அமைச்சர்களை தனிப்பட்ட வகையில் சந்தித்து உரையாடியது மாத்திரமன்றி பெயர் குறித்து பாராளுமன்றத்தில் ஜீ. எல். பீரிஸ், சுசில் பிரேமஜெயந்த், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன போன்றோரினை சிரேஷ்ட தலைவர்கள் என விழித்து கவனத்தினை செலுத்தி தூண்டினார். ஒரு வைரலொஜிஸ்டாக உள்ள பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தன்னுடைய அறிவியல் நிலைப்பாட்டினை வெளிக் கொணர்வதற்காக தொடர் முயற்சி செய்தார் ஈற்றில் உண்மைக்கு உண்மையாக பேராசிரியர் திஸ்ஸவித்தாரன தனது நிலைப்பாட்டினை அறிவித்தார்.
சிரேஷ்ட அமைச்சர், இடதுசாரிகளின் மூத்தவர் முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் வாசுதேவ நாணயக்காரவினை சாதக நிலைக்கு கொண்டுவர பல சந்திப்புகளை மேற்கொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அமைச்சரின் வீடுதேடி பல தடவைகள் சென்றிருந்தார் அவரின் அமைச்சின் ஊடாக முடிக்கவேண்டிய தனது ஆதரவாளர்களின் வேலைகள் பல இருந்த போதும் அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பதனை அமைச்சரிடமே தெளிவு படுத்தியிருந்தார்.
ஈற்றில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவினூடாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் நிபுணர்களை வைத்து ஆய்வு செய்து விரைவாக இறக்காமம் மற்றும் வடக்கின் மறுச்சிக்கட்டி போன்ற இடங்களினை ஜனாஷா அடக்க பொருத்தமான இடமென சிபாரிசு செய்யக் காரணமானார்.
அரசாங்கத்திலிருக்கும் தீவிர போக்குடைய அமைச்சர்களான விமல்வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்வில போன்றோர் எதிரான கருத்துக்களை கூறிவிடாமல் அவர்களுக்கு நியாயங்களை ஒப்புவித்தமை இதனால் விமல்வீரவன்ஸ தனது தலைக்குள் ஜனாஷா விடயத்தினை எடுத்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தமையும் இதுவரைக்கும் இவர்கள் மாற்றுக் கருத்தினை கூறவில்லை என்பது நிதர்சனமாகும்.
பொதுத் தேர்தலும் ஜனாஷா வழக்கும்
கடந்த பொதுத்தேர்தலில் ஹக்கீம் மற்றும் றிஷாட்டின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாஷா எரித்தலாகவே இருந்தது. அதனால் நீதிமன்றம் செல்கின்றோம் என்ற செய்தியினை அவர்கள் தேர்தல் கால பரப்புரையாகவே பயன்படுத்தினார்கள். ஆனால் நீதிமன்றம் செல்லாமல் தேர்தலில் சுயாதீனமாக ஹக்கீம் மற்றும் றிஷாட் தமது கட்சிகளில் போட்டியிட்டிருப்பின் அரசாங்கத்தோடு பேசுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியிருக்கலாம். நீதிமன்றம் சென்றதன் மூலம் பேசுவதற்கான மேசையின் இடையில் திரையிட்டனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேறு செயல்களில் இறங்க முடியாது என்ற மரபினால் ஜனாஷாக்கள் தொடர்ந்து எரிந்து சாம்பலானது எரிதலின் விறகுகளாக மேற்படி தலைவர்கள் மாறினார்கள்.
வழக்கின் மூலம் ஜனாஷா எரித்தலுக்கு தீர்வு கிடைக்குமென்று நீதிமன்று சென்றது தூரநோக்கற்ற செயல் என்று எப்போதுமே ஏ.எல்.எம்.அதாஉல்லா கூறி வந்தார். மேலும் வழக்கினால் இழுபறியில் கிடக்கும் பல பொதுப்பிணக்குகளை சுட்டிக் காட்டியதுடன் வழக்குத் தீர்ப்பு சுமூகமாக வரவும் விரும்பினார்.
அவ்வேளை கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாஷா வழக்கு உயர்நீதிமன்றினால் தொடர்ந்து விசாரிப்பதில்லை என்று விடுவிக்கப்பட்டது. அதன் பின்னரான ஒருமாதம் தீர்வுக்கான பல முயற்சிகள் நடந்தேறியது, அதில் ஆர்ப்பரிப்பு இல்லாமல் தனது முயற்சிகளை செய்தார் வழக்கு தீர்ப்பின் மறுநாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினை பாராளுமன்றத்தில் சந்தித்து பேசி அவரினை இதில் அக்கறை கொள்ளச்செய்தார்.
அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா பிரதான அரசியல் கொள்கை வகுப்பாளர் அவரோடு பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவும் பாதிக்க பட்ட மக்களுக்காக பேசக்கூடியவராக அவரினையும் மாற்றினார்.
இந்த நாடு முக்கியமான போர்ச்சூழலில் காணப்பட்ட வேளையில் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த அனுபவம் இவரின் அரசியல் நடத்தை பற்றிய அவர்களின் அவதானிப்பு இவர் பக்கம் அவர்கள் செவிசாய்ப்பதற்கு காரணியானது. இவரின் நீண்ட கால நண்பர் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடனா கலந்துரையாடல் மூலம் அவர் பூரண தெளிவினை பெற்று ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் அவரே ஜனாஷா அடக்குதல் பிரச்சினையை முதலில் பேசத்தொடங்கினார்.
மேலும், அமைச்சர் தயாசிறி ஜெயசேகர ஒரு கலைஞன் என்ற அடிப்படையில் அவரோடு பேசுவதற்கான உறவு காணப்பட்டது இதன்படி மரணித்த உடல் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை பற்றி கேட்டறிந்த தயாசிறி அன்றைய கூட்டத்தில் பேசும் போது மரணித்த பின் முஸ்லிம்கள் மீளவும் மண்ணிலிருந்து எழுப்பப்படும் விடயம், கேள்வி கணக்கு கேட்கப்படுகின்ற சம்பவங்களை விவரித்துள்ளார்.
இடது சாரி முகாம்களின் தொடர்பினை தொடர்ந்து பேணுவதால் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அடிக்கடி சந்திக்கும் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் டீ. ஈ குணசேகரவுடன் பல விடயங்கள் பேசுவதனை வழக்கமாக கொண்டதனால் ஜனாஷா எரித்தலின் மீதான கவன ஈர்ப்பினை அதாஉல்லாவின் சமூகம்மீதான கவலையில் இருந்து விளங்கி ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பிராந்திய அரசியல் போக்கு மற்றும் நாட்டின் பொருளாதார நிலை என்பவற்றோடு தொடர்பு படுத்தி ஜனாஷா எரித்தலை நிறுத்த வேண்டும் என்ற விரிவான விளக்கத்தினை டீ. ஈ குணசேகர வழங்கினார்.
இந்த முன்னேற்றங்களின் பின்னால் இருக்கும் ஒரு மனிதனின் உண்மைச் செயற்பாட்டினை மனச்சாட்சியுள்ள மனிதர்களால் வெளிக்காட்ட முடியாமல் இருக்க முடியுமா? ஜனாதிபதி தலைமையில் அப்படி ஒரு கூட்டம் நடந்ததா என்று கேள்வி கேட்கும் வக்கிரமனம் கொண்டோர் அண்மையில் வெளியான அமிர்அலியின் அறிக்கையூடாக நம்பியிருக்க மாட்டார்களா?
பர்ளு கிபாயா நிறைவேறும் காலம் நெருங்குகிறது...
கிழக்கு வாசல் இணையத் தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் மாதமளவில் என்னால் கேட்கப்பட்ட ஜனாஷா எரிப்பு தொடர்பான கேள்விக்கு பதில் தரும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல்.எம். அதாஉல்லா "ஒரு முஸ்லிமின் ஜனாஷாவினை அடக்குவது மற்றைய முஸ்லிம்கள் மீது பர்ளுகிபாயா "என்று வலியுறுத்தினார். அந்த பர்ளுகிபாயாவான பொதுக் கடமையை நிறைவேற்றவே இன்று வரை அவர் போராடுகிறார். அதில் ஒரு அங்கமாக கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் விரைவாக ஜனாஷாக்களை அடக்குவதற்கான முடிவினை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார் . அவ்வேளை சிறிது காலம் சுகாதார அமைச்சர் கேட்டபோது எல்லோர் மத்தியிலும் "எனது ஜனாசாக்கள் ஐந்து சட்டப்படி வைத்திய சாலையில் இருக்கின்றது அதனை அடக்க வேண்டும் இந்த சபையிலே முடிவினை எடுங்கள்"என்று வலியுறுத்தினார்.
நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தும் வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களுக்கான முரண்பாட்டு தீர்வு அணுகுதல் முறையும், வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லிம் மக்களின் முரண்பாடுகளுக்கான தீர்வு அணுகுதல் முறையும் வித்தியாசமாக பார்க்கப்பட வேண்டும் என்பதனை பூரணமாக விளங்க இன்னும் சந்தர்ப்பங்கள் தேவையில்லை.
இவ்வேளை கடந்த 2021.02.09ம் திகதி பிரதமர் தலைமையில் நடந்த கூட்டம் முக்கியமானது. அதில் இறுதி முடிவு காணவேண்டும் என்பதில் ஏ எல். எம். அதாஉல்லாஹ் விடாப்பிடியாக இருந்ததன் விளைவே ஜனாஷாக்களை அடக்குவதற்கான 2021.02.25ம் திகதிய வர்த்தமானி பத்திரிகை வெளியீடு என்பதனை எம்மில் எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள் என்று ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் அரசியல் விமர்சகர் தல்ஹா குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Editor
on
March 01, 2021
Rating:
