(றிஸ்வான் சாலிஹூ)
பள்ளிகளையும் பெளத்த குருமார்களையும் தலதா மாளிகையும் தாக்கி விட்டு இன்று முஸ்லீம்கள் மீது பழி போடும் பிள்ளையான் வரலாற்றை மறந்து விட்டார் என்று தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான அஸ்மி அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலயே இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் அவருக்கு சில புரிதல்களை கூற வேண்டும். வெளிச் சக்திகள் என்று நம்பபடும் சிலரால் இயக்கப்பட்டு 400ற்கும் மேற்பட்ட உயிர்களை கொலை செய்த படுபாதகன் சஹ்ரான் செய்த தவறுக்காக மாண்டு போன ஒருவனின் செயற்பாடிகளுக்காக இன்னும் முஸ்லீம்கள் சொல்லொன்னா துயரமும் மன வேதனையும் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் பிள்ளையான் போன்றவர்களின் பாராளுமன்ற உரை அவரின் வக்கிரங்கள் இன்னும் மாறவில்லை என எமக்கு எண்ணத் தோன்றுகிறது.
இன்றை பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கின்ற சஜித் பிரமதாசவினுடைய தந்தை முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரமதாசவை கொலை செய்து, மயந்த திசாநாயக்காவின் தந்தை சிரேஷ்ட அமைச்சர் காமினியை கொலை செய்து அதனோடு இணைந்து 30 வருட காலமாக ஆயிரக்கணக்கான சிங்கள முஸ்லீம் தமிழ் உயிர்களை கொலை செய்து அது மட்டுமின்றி பெளத்த பிக்குகளை நடுவீதிகளில் வெட்டியும் சுட்டும் கொலை செய்தும், தலதா மாளிகைக்குள் குண்டு அடித்து உயிர்களை காவு கொண்டு பள்ளிகளில் தொழுகை நேரங்களில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ரத்த வாடை கொண்ட அமைப்பில் இருந்து அதன் சித்தாந்தங்களில் வளர்தெடுக்கப்பட்ட பிள்ளையான் இன்னும் முஸ்லீம் இளைஞர்களை தவறாக காட்டுவதற்கு முன் வரக் கூடாது.
பிள்ளையான் போன்றவர்கள் இவ் விடயங்கள் தொடர்பில் எங்கும் பேச அருகதையற்றவர்கள். எனவே இவ்வாறு முஸ்லீம் சமுகத்தை துயரத்தினுள் தள்ளுகின்ற நிலைபாடுகளை கை விட்டு நாடு தொடர்பில் சிந்திக்குமாறு அவருக்கு அன்புக் கட்டளை பிறப்பிக்கின்றேன் என்று முன்னாள் பிரதி முதல்வர் அஸ்மி அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
