கற்றல் இயலாமை (Learning Disabilities)!!!!


கற்றல் இயலாமை என்பது நரம்பியல் ரீதியான செயல்முறைச் சிக்கலாகும். இச்செயன்முறைப் பிரச்சினையானது கற்றல் அடிப்படை திறன்களான படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் போன்றவற்றை குறுக்கீடு செய்கிறது. இவை உயர்மட்டத் திறன்களான ஒருங்கமைத்தல், காலத்திட்டமிடுதல், கருத்தியல் காரணமறிதல், குறுகிய கால அல்லது நீண்ட கால நினைவுத்திறன் மற்றும் கவனத்தைக் குறுக்கீடு செய்கிறது. கல்விச் செயற்பாட்டுகளில் ஒரு இடைவெளியை ஏற்படுத்துகின்றது.

இவர்கள் பார்ப்பதற்கு முற்றிலும் இயல்புநிலையுடனும், புத்திக்கூர்மையும் படைத்தவர்களாக காணப்படுவர். இருப்பினும் ஒத்த வயதினருக்கு நிகரான திறமைகளை வெளிப்படுத்த இயலாத நிலை ஏற்படும்.

கற்றல் இயலாமை  என்பது  வாழ்நாள் செயலாகும். கற்றல் குறைபாடானது மரபியல் அல்லது உயிரியல் அல்லது நரம்பியல் காரணங்களாலேயோ அல்லது காயங்களினாலேயோ ஏற்படும் மூளை செயற்பாட்டுப் பிரச்சினையாகும். இது கற்றலுடன் தொடர்பான ஒன்றுக்கு மேற்பட்ட செயன்முறையைப் பாதிக்கும்.

இவை கையகப்படுத்தல், ஒருங்கமைத்தல், மீட்டுணர்தல், புரிதல் போன்றவற்றை பாதிக்கும் எண்ணற்ற குறைபாடுகளை குறிக்கின்றது. இக்குறைபாடானது தனிநபரின் சிந்தனைத்திறனையும், காரணகாரியம் அறிதலையும் பாதிக்கிறது.

இக்கற்றல் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

    

    *    மரபுவழிக் காரணிகள்

    *    குழந்தை பிறக்கும் முன்னர் (கருவில் இருக்கும் போது)

    *    குழந்தை பிறக்கும் போது

    *    குழந்தை பிறந்த பின்னர்.


அதில் முதலாவதாக மரபுவழிக்காரணிகள் தொடர்பாக ஆராய்கின்ற போது, கற்றல் குறைபாடானது பரம்பரை ரீதியாக தாக்கம் செலுத்துகின்றன. பெற்றோர்கள் அவரது பரம்பரை வழியில் கற்றல் குறைபாடு உள்ளது போது அது குழந்தையின் மீது தாக்கம் செலுத்தும். 1981ம் ஆண்டு மாரிசன் மற்றும் ஸ்ருவர்ட் போன்றவர்களால் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி 20 வீதமான கற்றல் குறைபாடு பரம்பரை மூலமாக கடத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது.

குழந்தை பிறப்பதற்கு முன்னர் அல்லது குழந்தை தாயின் கருவரையில் இருக்கும் போது தாய் தக்க வயதில் குழந்தை பெறாமல் அதிகரித்த வயதில் கருவில் குழந்தையைச் சுமக்கும் போதும் பிள்ளைக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். அதே போன்று பிரசவத்தோடு தொடர்பான விசேட அதற்கென சிறப்புத்தேர்ச்சி பெற்ற அனுபவமுள்ள வைத்தியரை நாடாமை காரணமாகவும், வீட்டில் பிரசவம் பார்த்தல், தாக்கு போசாக்கு குறைவாகக் காணப்படல், தாய், தந்தை இரத்த உறவுத் திருமணம் முடித்தவர்களாகக் காணப்படல், ஹோமோ சோன் வேறுபாடுகள், மருத்துவரின் ஆலோசனை இன்றி தான்தோன்றித் தனமாக மருந்துகளை உட்கொள்ளல், மாதம் சென்ற பிறகு குழந்தையைக் கலைப்பதற்கான முயற்சிகளை எடுத்து கருத்தடை மாத்திரைகளைப் பாவிப்பதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளும் கற்றல் இயலாமையுடைய பிள்ளைகளாகப் பிறப்பதற்கான காரணங்களாகக் குறிப்பிடலாம்.

அதே போன்று குழந்தைப் பேறு இடைவெளி இல்லாமல் காணப்படல். அதாவது முதலாவது குழந்தை பிறந்து குறைந்த இடைவெளியில் இரண்டாவது குழந்தை பிறக்கின்ற போது அதே குழந்தையைப் பாதிக்கலாம், கருவுற்றிருக்கும் தாய் யுத்தம், இயற்கை அனர்த்தம், மனஅழுத்தம், விரக்தி நிலை போன்றவற்றின் காரணமாக அதிர்ச்சியடைகின்ற போது, கருத்தரிப்பின் போது தாய்க்கு வழிப்பு ஏற்படல், X-Ray கதிர்வீச்சு எடுத்தல், RH ஒவ்வாமை, தாய்க்கு அம்மை நோய், தொண்டை கழலை ஏற்படல், தாய் தந்தைக்கு நீரிழிவு நோய் காணப்படல், தாய் தந்தை மது மற்றும் புகைத்தல் பழக்கம் உடையவர்களாக இருத்தல், முறையற்ற பாலியல் தொடர்புகள் போன்றவற்றின் காரணமாக குழந்தை கருவில் இருக்கும் இவ்வாறான விடயங்கள் பிள்ளையின் கற்றல் குறைபாட்டுக்கு காரணமாகலாம்.

அதே போன்ற குழந்தை பிறக்கும் போதான காரணிகளாக, அனுபவமுள்ள வைத்தியரை நாடாமை, ஆயுதப் பிரசவம், பிரசவ நேரம் அதிகரித்தல், நிறை கூடிப் பிறத்தல், நிலைமாறிப் பிறத்தல், குறைமாதப் பிரசவம், நச்சுக் கொடி குழந்தையின் தலையைச் சுற்றி இருத்தல், பிரசவத்தின் போது அதிக அளவான இரத்தப் போக்கு ஏற்படல் போன்ற காரணங்களாலும் கற்றல் குறைபாடு ஏற்படலாம்.

குழந்தை பிறந்தவுடன் அழாமை, குழந்தை பிறந்த பின்னர் வீரியம் கூடிய நோய்களுக்கு ஆளாகுதல், உடலில் சக்கரை அளவு குறைதல், சத்துக் குறைபாடு, அதிக காய்ச்சல் மற்றும் அழற்சி நோய், விபத்துக்களின் போது, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடைகள் ஏற்படல், மூளைச்சவ்வு அளர்ச்சி நோய், சிசு வலிப்பு நோய் போன்றவற்றின் காரணமாகவும் கற்றல் குறைபாடுகள் ஏற்படலாம்.


கற்றல் குறைபாட்டின் வகைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்...

1.   டிஸ்லெக்சியா (வாசிப்பு இயலாமை)
2.   டிஸ்கிராபியா (எழுத்து இயலாமை)
3.   டிஸ்கால்குலியா (கணிதம் சார் பிரச்சினை)
4.   டிஸ்பிராக்ஸியா
5.   நொன் லெவல் லேனிங் லிஸ்ஒடர் (சொல்சாரா கற்றல் இயலாமை)


1.டிஸ்லெக்சியா (வாசிப்பு இயலாமை)

இக்குறைபாடானது கற்பவரின் படிக்கும் திறன் மற்றும் மொழிசார்நத் பாதிக்கிறது இது ஒவ்வொரு தனிநபருக்கும் மாறுபட்டது. இக்குறைபாடுடையோர் சரளமாகப் பேசுதல், புரிந்துணர்தல், மீட்டுணர்தல், எழுதுதல், பேசுதல் போன்றவற்றில் குறைபாடுடன் இருப்பர், இது மொழி அடிப்படையிலான கற்றல் குறைபாடாகும்.

கற்றல் குறைபாடுடையோர்களிடையே டிஸ்லெக்சியா எனும் குறைபாடானது பெரும்பாலானோரிடம் காணப்படுகின்றது. அனைத்து நிலை நுண்ணறிவுத் திறன் உடையோருக்கும் இக்குறைபாடானது ஏற்படலாம். டிஸ்லெக்சியா பன்முக சிந்தனை, உயர் ஆக்கத்திறன் மற்றும் செய்து கற்றலில் சிறந்து விளங்குவதாகக் கருதுகின்றனர்.

இதன் அறிகுறிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

மெதுவாகக் கற்கும் திறன், சில வார்த்தைகளைக் கவனித்தலிலும் படித்தலிலும், சிரமங்களைச் சந்தித்தல், எழுத்துப் பிழைகளை இழைத்தல், கையெழுத்தில் சிரமங்கள் ஏற்படலாம், தெரிந்;து வார்த்தைகளை மீட்டுக் கூறுவதில் கடினமாக இருத்தல், எழுத்துக் கூட்டி வாசிப்பதில் கடினம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


2.டிஸ்கிராஃபியா (எழுத்து இயலாமை)

டிஸ்கிராபியா என்ற சொல் டிஸ் மற்றும் கிராஃபியா என்னும் கிரேக்கச் சொல்லால் உருவானது “டிஸ்” என்பது கடினம் என்பதையும் கிராஃபியா  என்பது எழுதுதல் என்பதையும் குறிக்கும். இக்குறைபாடானது கையெழுத்துத் திறனைப் பாதிக்கும்.

இக்குறைபாட்டால் பாதித்த ஒருவர் தெளிவற்ற கையெழுத்து ஒவ்வொரு வரிக்கும் போதுமான இடைவெளி இன்மை எழுத்துப் பிழை போன்ற பிரச்சினை ஏற்படும்.

இதன் அறிகுறிகளாக,

தெளிவற்ற கையெழுத்து, வார்த்தைக்கும் எழுத்துக்குமிடையே போதுமற்ற இடைவெளி, வித்திர மணிக்கட்டு காகிதத்தைக் கையாளும் திறன், மெதுவாக எழுதுதல், அசாதாரண பிடியால் கையில் வலி அல்லது புண் ஏற்படல், ஒரே சமயத்தில் சிந்தித்தல் மற்றும் எழுதுதலால் பெரும் சிரமப்படல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  

3.டிஸ்கால்குலியா (கணிதம் சார் பிரச்சினை)

டிஸ்கால்குலியா எனப்படுவது கணிதக் கருத்துக்களை கற்பதில்  எண்களைப் புரிந்து கொள்வதில் மற்றும் தனிநபரின் கற்றலில் டிஸ்கால்குலியா பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எண்களைக் கூட்டுதல் நேரம் பார்த்துச் சொல்லுதல், எண்களை ஒருங்கமைத்தல், கணித குறியீடுகளைப் புரிந்து கொள்வதில் மாணவர்களிடையே இவ்வகையான கற்றல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

இதன் அறிகுறிகளாக,

கணிதத்தில் இடமதிப்பு, எண்கோடுகள், மிகை மற்றும் குறை எண் போன்ற கருத்துக்களைப் புரிந்து கொள்வதில் கடினம், கணிதப் பிரச்சினையைத் தீர்ப்பதில் கடினத்தன்மையினை உணர்தல், தகவல்கள் மற்றும் சம்பவங்களை வரிசைப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுவது, பின்னங்களைப் புரிந்து கொள்வதில் கடினம், பணம் மற்றும் சில்லறைகளைக் கையாள்வதில் கையாளும் வழிமுறைகளை அடையாளம் காண்பதில் சிரமம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலின் கையாளும் வழிமுறைகளைக் அடையாளம் காண்பதில் சிரமம், மொழி வடிவினைக் கணித அடிப்படையிலான செயற்பாடாக மாற்றுதல், நாட்கள். வாரங்கள், மாதங்கள், போன்ற நேரம் தொடர்பான கருத்துக்களைப் புரிந்து கொள்வதில் சிரமம், கணித பிரச்சினைகளை ஒழுங்கமைத்தலிலும் நீண்ட வகுத்தலிலும் சிரமம் ஏற்படல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

4.டிஸ்பிராக்ஸியா

இக்கற்றல் குறைபாடுடையவர்கள் தங்கள் பணியை செய்து முடிப்பதிலும் உடல் உறுப்புக்களின் செயற்பாட்டினை ஒருங்கமைப்பதிலும் சிரமம் ஏற்படுகின்றது. உடற்செயற்பாட்டுத் திறன்களோடு ஒப்பிடுகையில் தம்மோடு பயில்பவர்களிடையே பின்தங்கிக் காணப்படுவர்.

இக்குறைபாடுடையோர் தசை இருக்கக் கட்டுப்பாடு மொழி நகர்வு மற்றும் ஒருங்கிணைப்பில் கடினத்தன்மையை வெளிப்படுத்துவர். டிஸ்பிராக்ஸியா என்னும் குறைபாடானது டிஸ்லெக்சியா மற்றும் டிஸ்கால்குலியாவோடு சேர்ந்து காணப்படும். டிஸ்பிராக்ஸியா மேலும் நான்கு வகைகயாக பிரித்து நோக்கப்படுகின்றது.


        Ideomotor dyspraxia - தலைசீவுதல் உடை உடுத்தல் போன்ற ஒரு படி                
                                             உடற்செயற்பாடு செய்வதில் கடினத் தன்மை.      

        Ideational dyspraxia - பல் தேய்த்தல் போன்ற தொடர்ச்சியான உடல் இயக்கச்                                                  செயற்பாடுகளைச் செய்வதில் கடினம்.

        Oromotor dyspraxia - இது வார்த்தை அப்ராக்ஸியா என்றும்                                                                                     அழைக்கப்படுகின்றது.வார்த்தை உச்சரிப்புக்கேற்றதசை                                                அசைவுகளை ஒருங்கிணைத்தல்.

       Constructional dyspraxia - இடம்சார் தொடர்புகளை கையாள்வதில்                                                                                கடினத்தன்மை போன்றனவாகும்.


இதன் அறிகுறிகாளாக,

உடல்சார்ந்த செயற்பாடுகளை திட்டமிடலில் கடினத் தன்மையை வெளிப்படுத்துதல்,

ஊடலின் இருபக்க செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதில் திறனின்மை, கண் கை ஒருங்கிணைப்பதில் சிரமம், தன்னைச் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கும் திறனில் பின்னடைந்த நிலை, கடிகாரச் சத்தம் எழுதுகோலைத் தட்டுதல் போன்ற சத்தத்தினால் உளைச்சல், இறுகிய கடினமாக உடைகளினால் எரிச்சல் உணர்வு ஏற்படல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


5.சொல்சாரா கற்றல் இயலாமை – Non Verbal Learning Disorder NLD

சொல்சாராத் தகவல்களை மாணவனால் அறிகைசார் அடிப்படையில் நிரற்படுத்த முடியாத தன்மையே இதுவாகும். இத்தகைய பிள்ளைகள் சொல்சார் விடயங்களில் ஆற்றலுடன் செயற்படுவர். கட்புலன் மூலம் வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் இடர்படும் தன்மை காணப்படும். கற்றல் இயலாமை கொண்ட பத்துப் பிள்ளைகளில் ஒருவர் இத்தகைய குறைபாடுடையவராக இருப்பார். மூளையின் வலதுபகுதியின் செயலின்மை காரணமாக இப்பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இவர்களின் இயல்புகள் -

சமூகம் சார்ந்தவை -சொல்சாரா தொடர்பாடலை இரசிக்க முடியாமை. இது சமூகத் தீர்ப்பு சமூக இடைவெளிகளில் குறிப்பான குறைபாடு

புலமை சார்ந்தவை -கணிதம், வாசிப்பு, கிரகித்தல், எழுத்தில் பிரச்சினைகள் ஒழுங்கமைத்தலாகும். பிரச்சினையாகும்.

கட்புல இடைவெளி சார்ந்தவை - படிமங்கள் இன்மை, கட்புல ஞாபகத்திறன் குறைவு, குறைபாடான இடைவெளி, புலக்காட்சி, மற்றும் இடைவெளித் தொடர்புகள்

இயக்கம் சார்ந்தவை -இணைப்பாக்கம் இன்மை, சமநிலையில் கடுமையான பிரச்சினை, நுண்ணிய இயக்கத்திறனில் சிரமம், அடிக்கடி அடம்பிடித்தல், இலகுவில் சமாதானப்படுத்த முடியாமை, விரைவாக உணர்ச்சிவசப்படல்.

மனவெளிச்சி சார்ந்தவை -புதிய இடங்களில் அச்சம் சார்ந்தவை, நாளாந்த செயற்பாடுகளை மாற்றிக் கொள்ளல் மன அழுத்தம் பதகளிப்பு அதிகம்.


கற்றல் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் இயலாமையை இழிவளவாக்குவதற்கு ஓர் ஆசிரியர் என்ற வகையில் பின்வரும் உதவிகளை வழங்கலாம்....


இன்று கற்றல் குறைபாடு என்பது பாடாசாலை மட்டங்களில் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சினையாகும். பொதுவாக 35 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பறையை எடுத்துக் கொண்டால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவர்களேனும் மேற்படி கற்றல் குறைபாட்டினைக் கொண்ட மாணவர்களாகக் காணப்படுகின்றனர். கற்றல் குறைபாடானது மாணவர்கள் மத்தியில் பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்துவதுடன் அவர்களது சமூக ஆன்மீக விருத்தியிலும் பொருளாதாரப் பின்னனி, குடும்ப வாழ்க்கை போன்ற விடயங்களிலும் இழுவைத் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் போது ஒரு ஆசிரியர் பல்வேறுபட்ட நடிபங்குடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதுடன் கற்றல் குறைபாடுடைய மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை இனங்கண்டு அவர்களுக்கு வேண்டிய மேலதிக செயற்பாடுகளை வழங்கக் கூடியவராக இருத்தல் வேண்டும்.

பாடசாலையில் உள்ள இவ்வாறு கற்றல் குறைபாடுடைய மாணவர்களின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு முதலில் தரவட்டங்கள் அமைக்கப்பட வேண்டியதுடன் அதில் பாடசாலையின் அதிபர், பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர், வலயத்தலைவர், வகுப்பாசிரியர்கள் இணைந்து தரவட்டக் கூட்டங்கள் நடாத்தப்படல் வேண்டும் அதில் கற்பித்தலும் கூடிய அனுபவமுடைய சிரேஷ்ட ஆசிரியரின் கருத்துக்கள் பெறப்படல் வேண்டும் இங்கு,

1.   மாணவர்களின் கற்றல் மேம்படுத்துவது,
2.   பின்தங்கிய மாணவர்களை சிறந்த மாணவர்களாக மாற்றுவது,

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்குரிய செயல்களை மேற்கொள்ளப்படுவது,

குறிப்பாக கற்றல் இடர்பாடுடைய மாணவர்கள் தொடர்பான நடத்தைப் பாங்குகள், அவர்களின் இயலாமையின் வகைகள், இயலாமைக்கான காரணங்கள் என்பன கண்டறியப்பட்டு அது தரவட்டத்தில் குறித்த மாணவனின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அப்பியாகச் கொப்பிகள், பிள்ளையின் நடத்தைகள் என்பன கண்காணிக்கப்பட்டு தரவு சேகரிக்கப்பட்டு ஒரு மாதிரி செயற்றிட்டம் ஒன்று தயார்செய்யப்படல் வேண்டும்.

பின்னர் ஒவ்வொரு ஆசிரியர்களும் இவ்வாறான பிள்ளைகள் தொடர்பாக பெற்ற முன்அனுபவங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு செயற்பாடுகள் செயற்படுத்தப்படல் வேண்டும்.

பொதுவாக ஒரு வகுப்பறையில காணப்படும் கற்றல் இயலாமையுடைய பிள்ளைகளை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்குவதன் மூலம் அவர்களுக்கு பொருத்தமான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

டிஸ்லெக்சியா – வாசிப்பு இயலாமை உடைய ஒரு மாணவனுக்கு கவர்ச்சிகரமான மாணவனின் கவனத்தை ஈர்க்கக் கூடிய கற்றல் உபகரணங்களை தயார் செய்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பது பிள்ளைகளை மகிழ்ச்சிகரமான முறையில் கற்றலின் பால் ஈர்ப்பதற்கும் பிள்ளை ஆர்வத்தோடு கற்பதற்கும் உறுதுணையாய் அமையும்.

முதலில் ஒரு ஆசிரியர் இயலாமை உடைய மாணவர் பற்றிய புரிதலோடு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது பிள்ளையிடம் சொற்களஞ்சியப் பெருக்கம் ஏற்படும்.  மாணவர்களுக்கு கற்பித்தல் உபகரணப் பயன்பாட்டோடு கற்றல் செயற்பாடுகளின் ஈடுபடுவது மேலும் மாணவர்கள் வினைத்திறனான முறையிலும் ஈடுபட்டுவதற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு பிள்ளையும் எழுத்துக்களை அடையாளம் காண்பதற்கு பல எழுத்துக்களை ஒன்றாகக் கோர்த்து ஒரு சொல் உருவாக்கப்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாணவர்கள் எழுத்துக்களைக் கூட்டிச் சொற்களை உருவாக்குவதற்குப் பயின்றுவிப்பதன் மூலம் வாசிப்பு இயலாமையுடைய பிள்ளைகளை இலகுவாக வாசிப்பதற்குத் தூண்டலாம்.

உதாரணமாக ஒரு மல்லிகைப் பூவின் படத்தைக் காட்சிப்படுத்தி பிள்ளைகள் இலகுவாக கிரகித்துத் துலங்குவங்கு எழுத்தட்டைகளின் மூலமாக ம+ல+கைூப்ூபூ என்று அடுக்கி அதன் மூலம் சொல்லுருவாக்கத்தில் ஈடுபடலாம்.

அது போன்று மனவரைபடம் வரைதல், பல்வேறு எண்ணங்களைப் பயன்படுத்தல், காட்சி மென்பொருளைப் பயன்படுத்தல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தலாம்.

டிஸ்கிராபிஃயா - எழுதுவதில் இயலாமை

மாணவர்களின் கை தசைவுகளை  வலுவாக்கி அவர்களின் உடற் செயற்பாடுகளை மேன்படுத்தி களிமண்ணில் விளையாடச் செய்யலாம். இதனால் மாணவனின் தசைநார்கள் வலுவடைந்து பிள்ளையின் கை விரல்கள் வலுவடையும். சிறிய அளவிலான எழுத்து வேலைகள் வீட்டில் பெற்றோரின் உதவியோடு செய்வதற்கு மாணவர்களை ஊக்குவிக்கலாம்.

டிஸ்கால்குலியா – கணிதம்சார் பிரச்சினை

கணிதத்தில் பிரச்சினையுள்ள பிள்ளைகளுக்கு வகுப்பறைச் செயற்பாடுகளின் போது அன்றாட வாழ்க்கையில் அவர்களோடு தொடர்படும் விடயங்களை வைத்து இலக்கங்களை இனங்காண வைக்கலாம். கைவிரல்களைப் பயன்படுத்தி என்ன வைத்தல், புளியம் விதை, ஈர்க்கு போன்ற பொருட்களை மூலம் எண்ணுவதற்கு வழிப்படுத்தல். மகிழ்ச்சிகரமான முறையில் கற்றல் செயற்பாடுகளை ஏற்படுத்தல், மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை ஏற்படுத்தல், மாணவர்களுக்கு பல்வேறு மாற்று முறைகளின் ஊடாக கற்பித்தலை மேற்கொள்ளல்.

மாணவர்கள் சரியான முறையில் கிரகித்துத் துலங்குவதற்கு வழியமைத்துக் கொடுத்தல், கருத்தூன்றிக் கவனிப்பதற்கான வழிமுறைக் கையாளல், பிள்ளைகளை உண்மைப் பொருட்களைக் காட்டிக் கற்பித்தல், மாதிரியைக் காட்டிக் கற்பித்தல், மீண்டும் மீண்டும் கூற வைத்து தொடர்ச்சியான மீளவலியுறுத்தல்களை வழங்குதல். வகுப்பறையில் பொருத்தமான கற்றல் உபகரணங்களை காட்சிப்படுத்தல். தேவையான வாய்ப்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை மனனம் செய்ய அவற்றை கவர்ச்சியான முறையில் எழுதி வகுப்பறையில் காட்சிப்படுத்தலாம்.

மேலும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு வழங்கக் கூடிய கற்றல் செயற்பாடுகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கற்பித்தல். ஈரெழுத்துச் சொற்கள், மூவெழுத்துச் சொற்கள், நான்கெழுத்துக் சொற்களை படிமுறையாக எழுதி படிமுறையாகக் கற்பித்தல். கணிதத்தில் ஒரிலக்க எண்களுடன் தொடர்பான கணிதச்செய்கைகள், ஈரிலக்க எண்களுடன் தொடர்பான கணிதச் செய்கைகள், மூவெழுத்துடனான கணிதச் செய்கைகள் போன்ற இலகுவிலிருந்து கடினம் நோக்கிக் கற்பிப்பதற்கான யுக்திகளைக் கற்பிப்பதற்கான வழிமுறைகளைக் கையாளல்.

மாணவர்களுக்கு தொடர் பின்னூட்டல்களை வழங்குதல், படங்கள் மூலமும் வார்த்தை மூலமாகக் கற்பித்தல், கற்பித்தல் செயற்பாடுகளின் அதிகளவான கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தல், ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியாகப் பயிற்சியளித்தல், ஒரு குறித்த பாடத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அது தொடர்பான பாடப் பிரவேசங்களோடு கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தல், பாடம் தொடர்பான முழு அறிமுகம் ஒன்றினை வழங்குவதன் மூலமாக ஒரு வகுப்பறையில் காணப்படும் கற்றல் இயலாமையுடைய மாணவர்களுக்கு ஆசிரியர்களிடையே காணப்படுகின்ற பல்வேறு வகைப்பட்ட ஆற்றல் அனுபவங்களைப் பயன்படுத்தி கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.


Mr.MISM.Nafeen, NDT (Merit) Sp.Edu, B.Ed-R
Deputy Principal,
Ak/Zahira Vidyalaya, Akkariaptttu
கற்றல் இயலாமை (Learning Disabilities)!!!! கற்றல் இயலாமை (Learning Disabilities)!!!! Reviewed by Editor on March 04, 2021 Rating: 5