மருதூர் மக்களின் உணர்வுகளில் கலந்திட்ட பெருமகனார், மருதூர் எழுச்சியின் அச்சாணியாய் திகழ்ந்திட்ட, நெஞ்சுரமும், நேசமும் வாய்க்கப்பெற்ற "உமர் முக்தார்" என்று எல்லோராலும் விதந்துரைக்கப்பட்ட உன்னத மனிதர், சாய்ந்தமருது-மாளிகைகாடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மர்ஹும் வை.எம்.ஹனீபா அவர்களுக்கான துஆ பிரார்த்தனையும், நினைவேந்தல் நிகழ்வும் திங்கட்கிழமை (12) சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் பதில் தலைவர் ஹிபத்துல் கரீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டு மர்ஹும் வை.எம்.ஹனீபா அவர்கள் பற்றிய தமது ஆழமான புரிதலையும், அன்னாரின் ஆளுமையுடன் கூடிய தலைமைத்துவ நேர்மை, செயற்திறன், அவரின் எண்ணங்களின் வழித்தடத்தில் ஒற்றுமையாய் பயணித்தல் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின் போது, அரச பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர், சகோதரர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் பிரதி தலைவர் டாக்டர் உதுமாலெவ்வை, அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் எஸ்.எம்.சபீஸ் மற்றும் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகிகள், மரைக்காயர்கள், உலமாக்கள்,பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் பின்னராக மருதூர் முதுசம் மர்ஹும் வை.எம். ஹனீபா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருது தக்வா பள்ளி மையவாடிக்கு சென்று தேசிய காங்கிரஸ் தலைமை துஆ பிரார்த்தனையிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
