நடுநிசியில், கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காது விடுதலை செய்யுமாறு கோரி, வன்னி மக்கள் வவுனியா கச்சேரிக்கு முன்னாள் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுலோக அட்டைகளையும், பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவெளிகளை பின்பற்றி, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாகவே, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
எந்தவிதமான, காரணங்களும் கூறாமல், வெறுமனே ஊகத்தின் அடிப்படையில், தமது பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டது, நீதிக்கு முரணானது எனவும், சட்டத்துக்கு விரோதமானது எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்புமில்லை என, அரச இயந்திரத்துக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் நன்கு தெரிந்திருந்த போதும், முன்னர் பல விசாரணைகளிலிருந்து அவர் நிரபராதி என வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும், வேண்டுமென்றே, எவரையோ திருப்திப்படுத்துவதற்காகவும், அரசியல் குரோதங்களை தீர்த்துக்கொள்ளும் வகையில் பழிவாங்குவதற்காகவுமே, இந்த ‘அர்த்தராத்திரிக் கைது’ இடம்பெற்றது” என ஆதரவாளர்கள் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர்.
மனிதநேயத்தையும் மனிதாபிமானத்தையும் மதித்து, அதன்படி மக்கள் பணி செய்த தலைவன், எந்தக் காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவியதில்லை எனவும், அவர் மீது வீண்பழி சுமத்துவதை விடுத்து, விடுதலை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வவுனியாவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பொலிசார் தலையீடு செய்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி, மக்களை கலைந்து செல்லுமாறு கூறியதனால், ஆர்ப்பாட்டம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
April 28, 2021
Rating:


