
ஜனாதிபதி அதிகாரத்திற்கு வரும்போது தேசப்பற்றுடைய, தன்னாதிக்கத்தை பாதுகாக்கின்ற ஆட்சியை நிறுவுவதாகவே கூறினார். அதனால் நாட்டை விற்கப்போவதில்லை எனவும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார். நாட்டைப் பாதுகாப்பதானால் அதனை கோட்டாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே மேற்கொள்ள முடியுமென்ற அபிப்பிராயமொன்றை நாட்டில் உருவாக்கினார்கள். அவ்விதமாக அதிகாரத்திற்கு வந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் தற்போது நாட்டின் இறைமையை இழக்கச்செய்விக்கின்ற போர்ட் சிட்டி சட்டமூலத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த சட்டத்தினால் எமது நாட்டுக்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலசேதங்கள் ஏற்பட இடமுண்டு என்று நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இன்றளவில் போர்ட் சிட்டி சட்டம் பற்றி சமூகத்தில் பாரிய உரையாடலொன்று உருவாகி இருக்கின்றது. அதன் பாதகமான பல விடயங்கள் வெளியாகி உள்ளன. அதைப்போலவே, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த போர்ட்சிட்டி சட்டம் அரசியமைப்புடன் அமைந்தொழுகுகின்றதா இல்லையா என்கின்ற விடயம்பற்றி மாத்திரமே இங்கு ஆராயப்படுகின்றது. ஆனால், இந்த சட்டத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சேதங்கள்பற்றி இங்கு ஆராயப்படுவது கிடையாது. இந்த போர்ட்சிட்டி சட்டமானது அமுலாக்கப்பட்டால் இடம்பெறக்கூடிய பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சேதங்கள் பற்றி நாட்டில் அபிப்பிராயமொன்று கட்டியெழுப்பப்படல் வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம்.
ஜனாதிபதியினால் துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரம் அது ஓர் ஆணைக்குழு மூலமாகவே மேற்கொள்ளப்படும். அந்த நிலைமை மூலமாக எமது நாட்டின் தன்னாதிக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்படுமென நாங்கள் கருதுகிறோம். நாங்கள் ஒரே நாடு எனில் ஒரே சட்டம் எனில் போர்ட் சிட்டிக்கும் நாட்டின் சட்டம் ஏற்புடையதாக அமைதல் வேண்டும். ஆனால், அது உலகளாவியரீதியில் நாட்டுக்குச் சொந்தமானதாக இருந்தபோதிலும் சட்டரீதியாக உரிமையற்ற ஏதேனுமொரு சுதந்திரம் வழங்கப்பட்ட வலயமாக மாற்றிப்பட்டுள்ளதென்பதே எமக்குப் புலனாகின்றது.
முதலாவது விடயம் நாட்டின் பொதுவான கட்டுப்பாட்டிலிருந்து இது அகற்றப்பட்டுள்ளமையாகும். இது கொழும்பு மாநகர சபைக்கோ மேல் மாகாண சபைக்கோ உரித்தாக மாட்டாது. பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறாத ஒரு பிரதேசமாகும். மக்கள் பிரதிநிதிகளின் நிறுவனத்திற்கு இது சொந்தமானதல்ல. ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழு மூலமாகவே இது நிர்வகிக்கப்படுகின்றது. அது ஐந்து முதல் ஏழு பேரை உள்ளடக்கியதாக அமைகின்றது. அதற்காக நியமிக்கப்படுபவர்கள் யாரென்பது தெளிவாக இல்லை. இதனை நியமிக்கையில் ஜனாதிபதி எவருக்குமே பொறுப்புக்கூறப் போவதில்லை. அது பற்றி அமைச்சரவையை வினவுவதில்லை.
போர்ட் சிட்டி நிர்வகிக்கப்படுவது ஜனாதிபதி மூலமாகவே என்பது அதன் அர்த்தமாகும். அதனால் பாரிய ஆபத்து நிலவுகின்றது. ஓர் ஆளினால் இது நிர்வகிக்கப்படுகையில் போர்ட்சிட்டியின் வதிவாளர்களுக்கு, காணிகளை கைப்பற்றி உள்ளவர்களுக்கு, அதன் தீத்தொழில் புரிபவர்களுக்குதமக்கு சிறந்த ஜனாதிபதியொருவரை நியமித்துக்கொள்வதில் இடையீடு செய்வதற்கான வாய்ப்பு நிலவுகின்றது. மக்களின் இறைமைக்கு புறம்பாக இருப்பதனால் தன்னாதிக்கத்திற்கு பங்கமேற்படுத்துகின்றமை தெளிவாகின்றது. அரசாங்கம் என்னதான் வாதங்களை முன்வைத்தாலும் இந்தசட்டத்தின் மூலமாக நாட்டின் சட்டதிட்டங்கள் பாரியளவில் நீக்கப்பட்டுள்ளன. போட்ர் சிட்டி சட்டத்தின் இறுதியில் உள்ள அட்டவணைகளில் அதற்கு ஏற்புடைத்தாகாத சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம், மூலோபாய அபிவிருத்திச் சட்டம், முதலீட்டுச்சபை சட்டம் போன்ற தொழில்முயற்சிளை பேணிவருதலுடன் தொடர்புடைய பல்வேறு சட்டங்கள் இவை மத்தியில் இருக்கின்றன. இது தன்னாதிக்கத்திலிருந்து நீக்கப்பட்ட தனிவேறான ஆளுகைப் பிரதேசமொன்றாகும். போர்ட்சிட்டி சட்டம் காரணமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்குப் பதிலாக இரண்டுவிதமான சட்டங்களைக்கொண்ட இரண்டு நாடுகளாக மாறும்.
சீனாவின் தேவைக்கிணங்கவே இந்த போர்ட் சிட்டி உருவாக்கப்படுகின்றது. அதன் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளுக்காக அவர்கள் இதனை உருவாக்குகிறார்கள். எங்களுக்கு ஒரு காணியை உருவாக்கி கொடுக்க சீனக் கம்பெனியொன்றுக்கு அவசியம் கிடையாது. அதன் முழுச்செலவினையும் அவர்களே ஏற்றார்கள். அவர்கள் அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார தேவைகளுக்கிணங்கவே அதனை நெறிப்படுத்துகிறார்கள். இது அரசாங்கம் காட்டுகின்ற அளவுக்கு எளிமையான விடயமல்ல. எனவே, நிச்சயமாக இலங்கை பிராந்திய அதிகாரப் போராட்டத்திற்கு இரையாக மாறப்போகின்றது.
இந்த பிராந்தியத்திற்குள் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பாசறைகள் ஒருபக்கத்திலும் மறு பக்கத்தில் சீனா ஒரு பொருளாதார வல்லரசாகவும் இருக்கின்றது. இந்த இரண்டு பாசறைகளுக்கிடையிலும் முரண்பாடுகள் நிலவுகின்றன. இந்தியாவிற்கருகில் ஒரு தீவினை அமைத்துக்கொண்டு சீனாவின் பொருளாதார, அரசியல் தேவைகளை ஈடேற்றிக்கொள்ளும்போது அதற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் கட்டாயமாகச் செயற்படும். நாங்கள் அணிசேரா கொள்கையிலேயே இருக்கிறோம் என அரசாங்கம் கூறியது. எவரிடமும் மண்டியிட மாட்டோமென கூறியது.
ஆனால், இதன் காரணமாக இலங்கை பிராந்திய அதிகாரப் போராட்டத்தின் இரையாக மாற்றப்படுகின்றது. இந்த நாடுகளுடன் மோதுவதற்கான பலம் இலங்கையிடம் இல்லை. ஏற்கனவே இலங்கையானது சீன மற்றும் இந்திய கடனிலேயே தங்கியுள்ளது. கடன் இல்லாவிட்டால் அரசாங்கமும் கிடையாது. இலங்கை என்பது இந்த கடனுக்கு பிரதியீடாக நாட்டின் துண்டுகளை வழங்குகின்ற ஓர் அரசாங்கத்தைக்கொண்ட நாடாகும். போர்ட் சிட்டி என்பது அந்தக் கொள்கையின் ஒரு நீடிப்பாகும்.
இத்தகைய நிலைமை காணப்படுகையில் அரசாங்கம் முன்வைக்கின்ற ஒருசில விடயங்கள் இருக்கின்றன.
👉 பொருளாதார அபிவிருத்தியை எற்படுத்துவதற்காகவே இந்த சட்டத்தை கொண்டவருவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதன் மூலமாக வெளிநாட்டு முதலீடுகள் வந்து, தொழில்கள் உருவாகி, உற்பத்தி அதிகரித்துபொருளாதாரம் வளர்ச்சியடைதல் போன்ற கதைகளை அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையை எடுத்துக்கொண்டால் 446 ஹெக்டேருக்கு சற்று அதிகமான நிலப்பரப்பு இங்கு காணப்படுகின்றது. முழுநாட்டையும் கட்டியெழுப்ப அதன்மூலமாக இயலுமை கிடைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். முழு நாட்டினதும் காணி இருக்கையில் அதன் துறைமுகம், கரையோரம், வளங்களைப் பாவித்து கட்டியெழுப்ப முடியாமல்போன ஒரு நாட்டைஇந்த சிறிய நிலத்துண்டினால் எவ்வாறு கட்டியெழுப்புவது? இது விளையாட்டு வீடு போன்ற ஒரு செயலாகும். தமது ஆற்றாமையை மூடிமறைப்பதற்காக அரசாங்கம் பொய் கூறிக்கொண்டுஇருக்கின்றது.
👉 இலங்கைக்கு முதலீட்டினை வரவழைத்துக் கொள்வதற்காக சலுகைகளை வழங்கவேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள். அதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அவ்விதமாக சலுகைகளை வழங்கவேண்டிய பெருந்தொகையான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையில் இருக்கின்றன. முன்னர் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதனைப் பெரிதாக்கி முதலீட்டுச்சபை அமைக்கப்பட்டது. அதன் கீழான கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு சில சட்டங்கள் குறைந்த அளவில் அமுலில் இருக்கின்றன. அதனைப்பார்க்கிலும் சலுகைகளை வழங்க மூலோபாய அபிவிருத்திச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இவையனைத்தும் இருக்கையில் அதற்குப் புறம்பாக சலுகைகளை வழங்குவதற்காக மேலும் ஒன்றை ஏன்அமைக்கப்போகிறார்கள்? அவற்றின் மூலமாக வரவழைப்பித்துக்கொள்ள முடியாத முதலீட்டாளர்களுக்கு தனிவேறான நாடொன்றினை அமைத்துக்கொடுத்து வரவழைப்பித்துக்கொள்ள இயலுமென அவர்கள் நினைக்கிறார்களோ எனும் சிக்கல் எமக்கு உள்ளது.
👉 உண்மையிலேயே இலங்கைக்கு முதலீடுகளை வரழைப்பித்துக்கொள்ள இயலாதுள்ளமைக்கான காரணம் எமது நாட்டில் வரிச்சலுகைகள் இல்லாமை அல்லது சட்டங்களிலான சிக்கல்கள் காரணமாக அல்ல. இதனைப் பார்க்கிலும் இறுக்கமான சட்டங்கள் உள்ள இடங்களிலும் முதலீடுகள் செல்கின்றன. சீனா முதலீடுகளை வரவழைத்துக்கொள்ளும்போது அங்கு நிலவிய ஒருமுகப்படுத்தப்பட்ட தனிக்கட்சி ஆட்சி, கடுமையான சட்டங்கள் ஏற்புடையதாகவில்லை. அங்கு முதலீட்டாளர்கள் வந்தார்கள். கொமிஸ் அடிக்கவில்லை. இலஞ்சம் கேட்கவில்லை. ஆனால், முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகையில் அரசாங்கத்தை அமைத்துள்ள அரசியல்வாதிகள் கொமிஸ், இலஞ்சம் கேட்கிறார்கள். இந்த முதலீட்டாளர்கள் பெருந்தொகையான கொமிஸ், இலஞ்சம் கொடுத்து தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கத் தயாராக இல்லை. இந்த கொமிஸ் கேட்கின்ற, இலஞ்சம் வாங்குகின்ற கலாசாரத்தை மாற்றுவதையே அரசாங்கம் செய்யவேண்டும். ஜனாதிபதி தொடக்கம் கீழ் மட்டப் பிரதிநிதி வரை இலஞ்சம் கோருவதால் இலங்கைக்கு வரவிருந்த முதலீடுகள் திரும்பிப்போன அனுபவத்தை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, உண்மையான பிரச்சினையை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு சலுகைகளை வழங்க போர்ட் சிட்டி சட்டத்தைக் கொண்டுவருவதாக கூறுவது எவ்விதத்திலும் நியாயமனதாக இல்லை.
👉 போர்ட் சிட்டி காரணமாக முதலீடுகள் குவிந்து தொழில்கள் கிடைத்து நாடு முன்னேறுவதாக அரசாங்கம் மக்களுக்கு கனவுலகினைக் காட்டிக்கொண்டு இருக்கின்றது. இப்படிப்பட்ட எத்தனை கனவுகள் எமதுநாட்டு மக்களுக்கு காட்டப்பட்டிருக்கின்றன? ஐதேக அரசாங்கம் துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை கொண்டுவருகையில் விவசாயம் முன்னேற்றமடைந்து, மின்சாரம் கிடைத்து, கைத்தொழில்கள் விருத்தியடைந்து, நாட்டில் செல்வம் பெருகுவதாக கூறினார்கள். இந்தியாவிற்கும் மின்சாரத்தை விற்பனைசெய்ய இயலுமெனக் கூறினார்கள். ஆனால், தற்போது இந்தியாவில் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் சுதந்திர வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்ட வேளையிலும் அத்தகைய கனவு உருவாக்கப்பட்டது. முதலீடுகள்வந்து நாட்டை சொர்க்கபுரியாக மாற்றுவதாக கூறினார்கள். இன்று அவையெல்லாம் கவலைக்குரிய விடயங்களாக மாறியுள்ளன. அவற்றின் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச வசதிகளைக்கூட வழங்கத் தவறியுள்ளார்கள். மூலோபாய அபிவிருத்திச் சட்டத்தைக் கொண்டுவருகின்ற வேளையிலும் இத்தகைய கதைகளைக் கூறினார்கள். இவையனைத்துமே தோல்வி கண்டுள்ள வேளையிலும் தற்போதுபோர்ட் சிட்டிக் கனவினைக் காட்டுகிறார்கள்.
சீனாவின் முன்னிலையில் அரசாங்கத்திற்கு மண்டியிடவேண்டிய நிலையேற்பட்டுள்ளமையே உண்மைக்கதை. கடனெடுத்தல் காரணமாக சீனாவிலிருந்து சிந்துகின்ற எச்சிலுக்காக அமைத்துக்கொண்ட இந்த நிலத்துண்டின் உரிமையை சீனாவுக்கு வழங்கவேண்டி உள்ளது. எனவே, ஜனாதிபதிக்கு வெளிநாடுகளின் தாளத்திற்கிணங்க ஆடுகின்ற பொம்மையாக மாறவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. போர்ட் சிட்டி சட்டமொன்றைக்கொண்டுவந்து அதன் தொழில்முயற்சியாளர்களுக்கு அவசியமானவகையிலான நிர்வாகத்தை அமைத்துக் கொடுக்கவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்விதமாக நாட்டின் சட்டம் பலவீனப்படுத்தப்பட்ட இடத்திற்கு கறுப்புணம் வைத்துள்ளவர்களும் தீத்தொழில் புரிபவர்களும் ஆக்கிரமிப்புச்செய்ய இடமுண்டு. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகின்ற இடமாக தீத்தொழில்புரிபவர்கள் தாண்டவமாடுகின்ற இடமாக மாறுகின்றது. நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்க்கின்ற, ஜனாதிபதியை மாற்றுகின்ற சூழ்ச்சி இடம்பெறுகின்ற இடமாக மாறுகின்றது. அதற்காக கறுப்புப்பணத்தை பாய்ச்சுகின்ற இடமாக இது மாறக்கூடும்.
இது நாட்டுக்குள்ளே நாங்கள் போட்டுக்கொள்கின்ற பாரதூரமான ஆபத்தாக மாறக்கூடும். அந்த ஆபத்து தோன்றியிருப்பது நிலத்திலிருந்து அல்ல. நாட்டின் தன்னாதிக்கத்தைக் கைவிட்ட சட்டத்தினாலாகும். இங்கு வருகைதரவுள்ள தீத்தொழில் புரிபவர்களை மகிழ்விக்க, சீனாவை மகிழ்விக்கவேயொழிய இது நாட்டுக்காகவோ மக்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. எனவே, போர்ட் சிட்டி பற்றி உருவாக்கப்படுகின்ற கனவுகள் தொடர்பில் ஏமாந்து போய்விட வேண்டாமெனவும் நாட்டினால் கட்டுப்படுத்த முடியாத காணித்துண்டு உருவாகக்கூடிய ஆபத்துக்கு எதிராக முன்வருமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
Reviewed by Editor
on
April 26, 2021
Rating: