முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!!!

(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் திடீரென அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து அக்கரைப்பற்று பிரதேசத்தை பாதுகாப்பது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டமொன்று, இன்று (28) புதன்கிழமை கௌரவ முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது என்று முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர்,பிரதேசத்திற்கு பொறுப்பான  சுகாதாரத்துறை அதிகாரிகள்,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, 241 வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி,பிரதேச செயலக உதவி திட்டமிடல் அதிகாரி உள்ளிட்ட ஏனைய முக்கிய அதிகாரிகளும்  பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடித்தல், மற்றும் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கும் விழிப்புணர்வு  செயற்பாடுகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில்-

*வணக்கஸ்தலங்களில் கூடுதல் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதுடன், அவ்வாறு பின்பற்றுவதை கண்காணித்தல்.

*வீதியோர வியாபாரங்களை முற்றாக தடை செய்தல்

*வியாபாரஸ்தலங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சுகாதார நடைமுறைகளை பரிபூரணமாக பின்பற்றுதல்.

*விதிமுறைகளை உதாசீனம் செய்வோர் அல்லது மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இவற்றை கண்காணிக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியினை கோரல், போன்ற சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

வல்லரசுகளேயே திணற வைக்கும் கொடும் தொற்றாய், ஒட்டு மொத்த உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து, அக்கரைப்பற்று மக்களை பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக உகந்த பொறிமுறைகளை கையாளுமாறு உரிய அதிகாரிகளை வேண்டிக் கொண்டதுடன், மாநகர சபை சார்பில் தம்மால் இயன்ற முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும் தயார் நிலையில் இருப்பதாக இக் கலந்துரையாடலின் போது மாநகர முதல்வர் உறுதியளித்ததாக அந்த  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!!! முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!!! Reviewed by Editor on April 28, 2021 Rating: 5