
கொவிட் - 19 வைரஸ் பதுளை மாவட்டத்தில் மீண்டும் பரவும் நிலைமை காணப்படுவதால், அதனைக் கட்டுப்படுத்துவது மற்றும் மாவட்ட மக்களைப் பாதுகாக்கும் முகமாக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட, மாவட்ட கொவிட் குழு மாவட்ட செயலகத்தில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.முஸம்மில் தலைமையில் ஒன்றுகூடியது.
இதன்போது கொவிட் வைரசைக் கட்டுப்படுத்த பின்பற்றவேண்டிய சுகாதார வழிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் ஆராயவும், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

விசேடமாக பதுளை மாவட்டத்தினுள் போக்குவரத்து தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறும், மக்களுக்குப் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கொவிட் தொற்றாளர்களை இனம்காணச் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்படும் எனவும், தற்போதைய நிலைமையில் கொவிட் தொற்றாளுக்குச் சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான வசதிகள் மாவட்டத்தினுள் போதுமானளவு காணப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன டெனிபிடிய, இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் நிமல் கமகேதர உள்ளிட்ட சுகாதார பிரிவின் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Reviewed by Editor
on
April 28, 2021
Rating: