அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனின் விடுதலைக்கான முயற்சி பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புனித நோன்பு காலத்தில் - முஸ்லிம் சமுகத்தின் அதிக பிரார்த்தனை - ரிஷாத் பதியுதீனின் விடுதலைக்கானதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
மக்கள் காங்கிரஸ் எம்பீக்கள் , 20 இற்கு வாக்களித்தமைக்காக - அவர்களை , கட்சியை விட்டும் துரத்த வேண்டும் என - கட்சிக்குள் இருக்கும் வட்டாரத்தைக் கூட வெல்ல முடியாதோர் முயற்சிக்கும் போது - அதே எம்பீக்களே - தலைவர் ரிஷாத் பதியுதீனின் விடுதலைக்கான முயற்சியில் மும்முரமாக பணியாற்றுகிறார்கள் என்ற உண்மையை இப்புனித ரமழானில் நாம் மறைக்க முடியாது.
இவ்வாறான இறுக்கமான கட்டத்தில் - தலைவரின் விடுதலை குறித்து ஆராய்வதற்கு அரசியல் அதிகார பீடத்தை கூட்டாமல் - கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஒருவரிடம் கையளிப்பதற்காக (மறைமுக சூழ்ச்சி ஒன்றை வைத்து கொண்டு ) கூட்டியதுவே , வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் இன்று அனைத்து போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
தலைவர் பதவியிலிருந்து ரிஷாத் பதியுதீனை தூக்கி எறியும் முயற்சி நீண்ட காலமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது எனது வாதம். இது உண்மை என்பதை தலைவர் அறிவார் என்பதும் - நானும் அறிவேன் என்று தலைவருக்கும் தெரியும். இது சம்பந்தமாக 2018 ரமழான் மாதம் நடுநிசி தாண்டியும் பேசியிருக்கிறோம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன். சாட்சிகள் , எங்களோடு மேலும் இருவர்.
அது அவ்வாறு இருக்க - தலைவரின் சிறை வாசத்தை பயன்படுத்தி - தலைமையை கைப்பற்ற முயற்சிக்கும் ஒருவர் , முகாவிலிருந்து பிரிந்து வந்த சிலரையும் பக்கத்துணை ஆக்கிக் கொண்டு எடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட முயற்சிதான் - சில தினங்களுக்கு முன் அதிகாரபீடத்தை கூட்டி சட்டத்தரணி சஹீடிடம் , கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்ததாகும்.
மக்கள் காங்கிரஸ் ஒன்றும் 40 அல்லது 50 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியென்றால் இந்த வழிநடத்தல் பொறுப்பாளர் அவசியம்தான். ஆனால் , இப்போது இந்த வழிகாட்டல் அல்லது Monitor வேலை - மக்கள் காங்கிரஸுக்கு அவசியமற்றது.
இங்கு - சட்டத்தரணி சஹீட் பாவிக்கப்பட்டிருக்கிறாரே ஒழிய - அவரையும் உளத் தூய்மையுடன் அந்த பொறுப்புக்கு நியமிக்கவில்லை என்றே அறிய முடிகிறது.
ரிஷாத் பதியுதீனை தலைமை பதவியிலிருந்து அகற்றிவிட்டு - தான் தலைவரானால் , கட்சிப் போராளிகள் மற்றும் சமுகத்தின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும் என்று - அந்த அற்பத்தனமாக தலைமைக்கு ஆசைப்படுபவர் அறிந்து கொள்ள எடுக்கப்பட்ட வெள்ளோட்டம் தான் இது என்பதை அனைவரும் அறிந்து விட்டனர். அந்த ஒருவரும் - இந்த முயற்சியை சமுகம் அங்கீகரிக்கவில்லை , அங்கீகரிக்கமாட்டாது என்பதையும் இந்த இரண்டு தினங்களுக்குள் அறிந்தும் விட்டார். முதுகில் குத்துவது / துரோகமிழைப்பது பாவம் என்பதும் உணர்த்தப்பட்டு விட்டது.
எனவே - ஒருபோதுமே சமுகம் ஏற்றுக்கொள்ளாத இந்த அற்பத்தனமான முயற்சியை கைவிடுங்கள்.
தனது சட்டத்துறையில் நல் மதிப்பு பெற்ற முன்னாள் தூதுவரான சஹீடும் - தான் பெற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து உடன் விலகி - போராளிகள் மற்றும் சமுகத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை அகற்ற முன்வர வேண்டும். நீங்கள் பிழையாக வழி நடாத்தப்பட்டுள்ளீர்கள் என்பதே இந்த நிமிடம் வரை போராளிகள் , சமுகத்தினர் மத்தியிலுள்ள எண்ணமாகும்.
எனவே - ஒன்றுபட்டு - தலைவரின் விடுதலைக்காக பிரார்த்திப்போம். முயற்சிகளை முன்னெடுப்போம்.
( ஏ.எச்.எம்.பூமுதீன் )
