இலங்கையில் கொவிட் தொற்றின் மூன்றாவது அனர்த நிலையை கவனத்திற் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி வெளியிட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக பொலிஸ் தலைமையகம், நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இரண்டு விசேட சுற்றறிக்கைகள் அனுப்பி வைத்துள்ளது.
இதன்படி புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக, வைபவங்களை நடத்துவது தற்காலிகமாக தடை செய்யபபட்டுள்ளதுடன், இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் தலைமையகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புதிய சுகாதார வழிகாட்டல்களின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் வாடகை thfdq;கள் தொடர்பாகவும் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுகின்றவர்கள் தொடர்பாகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியவர்கள் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலத்தினுள் 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலும் 5,248 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முகக் கவசங்களை முறையாக அணியாதவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
