சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடும் சேவைகள் மூலம் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக வர்த்தகப் பிரதிநிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றது.
இதன்போது நடமாடும் சேவைகள் மூலம் வியாபார நடவடிக்கை ஈடுபடுவர்கள் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைக்கப்பெறுகின்றமையினால் வியாபாரிகள் விலைப்பட்டியலை கட்டாயம் வாகனத்தில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை மீறியும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்காணிக்க பிரதேச மட்டத்தில் குழு அமைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டால் வியாபார உரிமம் இரத்துச்செய்யப்படுவதுடன் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டனர்.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம். முஹம்மட் நெளஷாட் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா ,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளார் எம்.ஏ.கே முஹம்மட், சுகாதார வைத்திய அதிகாரி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி, பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், சம்மாந்துறை வர்த்தக சம்மேளன தலைவர் எ.சுலைமா லெப்பை, சம்மாந்துறை வர்த்தக சம்மேளன செயலாளர் எம்.எச்.எம் ஹாரீஸ், நடமாடும் வியாபாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதனையும் மீறி வியாபாரிகள் கூடுதலான விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்து வந்தால் விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் விலை நிர்ணய குழுவினால் தீர்மானிக்கப்படும் விலை வியாபாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் விலைப் பட்டியல் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
