துறைமுக நகர சட்டம்,ஏன் ஹக்கீம் வாக்களிப்பை தவிர்த்தார்...?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

துறைமுக நகர சட்ட வாக்கெடுப்பு
நடந்து முடிந்துள்ளது. இச் சட்ட வாக்கெடுப்பில் முஸ்லிம் பா.உறுப்பினர்கள் எவ்வாறு செயற்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடையோ மேலோங்கி இருந்தது. அரசுக்கு சாதாரண பெரும்பான்மையே தேவைப்படும் பட்சத்தில், முஸ்லிம் கட்சி தலைவர்கள் இருவரும் எதிர்த்து வாக்களிக்க, இரு கட்சியையும் சேர்ந்த முஸ்லிம் பா.உறுப்பினர்கள் நடுநிலை வகிப்பார்கள் என்பது பலரது ஊகமாக இருந்தது. இருந்தும் இவ் வாக்களிப்பில் மு.கா தலைவர் ஹக்கீமும் நடுநிலை வகித்துள்ளார். இது ஏன் என ஆராய்வது பொருத்தமானது.

துறைமுக நகர சட்டம் தொடர்பில், அதன் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பே, அது தொடர்பில் கலந்துரையாட மு.காவின் உயர்பீடத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தும் அக் கலந்துரையாடல் திடீரென நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் நீர்வழங்கள் அதிகார சபையில் வேலை செய்யும் ஒருவரால், தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக மு.காவின் உயர்பீடத்தில் இருந்தோர் பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் கடிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ஏன் அந்த கலந்துரையாடல் அக் குறித்த தினம் தடை செய்யப்பட்டது என ஆராய்வது தற்போது நடைபெற்ற நாடகத்தை அறிய போதுமானதாகும்.

அன்று தடைபட்ட உயர்பீட ஒன்று கூடல் மீண்டும் துறைமுக நகர சட்ட வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மு.கா எந்த தீர்மானத்தையும் ஒரு நாளில் எடுத்த சரித்திரமில்லை. இவ் விடயம் கலந்துரையாடலுக்கு வரும் போது பாரிய பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் சாத்தியமிருந்தது. உயர்பீடத்தில் பா.உறுப்பினர்களான நஸீர் ஹாபிஸ் மற்றும் ஹரீஸ் ஆகியோரது ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். இப்படி இருக்க இறுதி நாளில் ஒன்று கூட்டிய மர்மம் என்ன? இது ஒன்றும் அவசர அவசரமாக வந்த சட்ட மூலமுமல்ல.

மு.காவின் உயர்பீடத்தை ஒன்று கூட்டி கலந்துரையாடினால், அது துறைமுக நகர சட்டத்தை எதிர்க்க வேண்டுமென்ற தீர்மானத்தையே இறுதி செய்யும். இந்த முடிவை மு.கா உயர்பீடத்தில் எடுத்து, அதனை மு.காவின் எம்.பிகள் மீறினால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். இறுதி நாளில் ஒன்று கூட்டி, ஏதாவதொரு முடிவை எடுத்தால், அவ் உயர்பீட கூட்டத்தில் பா.உறுப்பினர்கள் கலந்துகொள்ளாத போது, அத் தீர்மானத்தை அவர்களுக்கு முறையாக அறிவிப்பதில் சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கலுண்டு. அன்று ஒன்று கூடல் நடைபெற்றாலும், இதனை கூறியே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது கட்சியில் தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம். அ.இ.ம.காவானது துறைமுக நகர சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை மூன்று பா.உறுப்பினர்களும் இருந்த நிலையில் எடுத்திருந்த போதும், அவர்கள் குறித்த சட்ட மூலத்தை எதிர்க்க வேண்டும் என கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதி நாளில் உயர்பீடத்தை கூட்டியதன் மர்மம் புரிகிறதா..?

அன்று மு.காவின் உயர்பீட கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே குழப்பம் ஏற்பட்டுள்ளது. குழப்பம் சுயமாக ஏற்பட்டதா அல்லது திட்டமிடப்பட்டதா என்பதும் சிந்திக்கத்தக்கது. அன்றைய தின ஒன்று கூட்டலை குழப்புவதே சில விடயங்களுக்கு சாதகமானது. அன்றைய தினம் கூட்டத்தை குழப்பினால், இனி கூடி முடிவெடுக்க நாளில்லை. தலைவரின் முடிவே இறுதியானது என்ற வழமையான தீர்மானம் எடுக்கப்படும், அல்லது எடுத்தேயாக வேண்டும். வேறு வழியில்லை. வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்பு உயர்பீடத்தை கூட்டி குழப்பம் ஏற்பட்டிருந்தால், இன்னுமொரு நாளில் உயர்பீடத்தை கூட்டி முடிவெடுக்க நேர்ந்திருக்கும். இது தொடர்பில் விவாதித்திருந்தால், அங்கு சிறு சல சலப்பு ஏற்பட்டிருந்தாலும், எதிர்த்தேயாக வேண்டும் என்ற முடிவே இறுதியாகியிருக்கும். இந்த முடிவை கட்டுப்படுத்தும் மூக்கணாங் கயிறு மு.காவின் தலைவரிடம் இருந்திருக்காது. கட்சியின் உயர்பீடத்திற்கு மு.காவின் தலைவர் கட்டுப்பட நேர்ந்திருக்கும். தற்போது எடுத்திருக்கும் முடிவை முடியாதிருந்திருக்கும் அல்லவா? இறுதி நாளில் ஒன்று கூடலை அமைத்ததன் நோக்கில் இதுவுமொன்று. 

அன்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடலுக்கு வந்துள்ளனர். அவர்களை வைத்து, முறையான கலந்துரையாடலை அமைப்பதன் மூலம் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுத்திருக்கலாம். துறைமுக நகர சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானமே இறுதியாகியிருக்கும் என்பது வேறு விடயம். குறித்த தீர்மானத்திற்கு கட்சியின் பா.உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சி ஒரு முடிவை எடுத்து, கட்சியின் முடிவை பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தால், அந்த கட்சியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்ற மக்கள் அழுத்தத்திற்கு உட்பட்டிருப்பார்கள். அதனை ஏன் செய்யவில்லை? எல்லாம் நாடகமே! அந்த ஒன்று கூடல் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அதனை இன்னுமொரு ஒன்று கூடலை செய்வதன் மூலம் தீர்மானித்திருக்க முடியும். 

இறுதி நாளில் உயர்பீட ஒன்று கூடலை அமைத்ததன் நோக்கம் அனைவருக்கும் தெட்டத் தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகிறேன். இந்த இறுதி நாளை தீர்மானித்தது யார் என்பது யாவருக்கும் தெரியும். இதன் பின்னர் மு.காவின் தலைவரே உள்ளார் என்பதை அறிய, இவைகளை விட சான்றேதும் தேவையில்லை.

இறுதியில் மு.கா தலைவர் எங்கு கூடி, என்ன முடிவை எடுத்தாரோ தெரியவில்லை, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒரு கட்சி தலைவரால் சரி, பிழையென்ற தீர்மானத்தை எடுக்க முடியவில்லை என்றால், அது கோழைத் தனத்தின் வெளிப்பாடு. ஹக்கீம் சுயமாக எத் தீர்மானத்தையும் மு.காவின் தலைவர் என்ற அடிப்படையில் எடுக்க முடியும். அதனை விமர்சிக்க முடியாது. எதிர் தரப்பில் உள்ள ஒருவர் நடுநிலை வகிக்கின்றார் என்றால், அவர் ஆளும் தரப்பை நோக்கி நகர்கிறார் என பொருளெடுக்க முடியும். சிறுது சிறுதாக மு.காவின் தலைவர் மொட்டாக மாறிக்கொண்டிருக்கின்றார். இதனையே இச் ஐயமுற தெளிவு செய்கிறது. எத்தனை நாளைக்கு மறைக்க இயலும்? இவரின் இச் செயற்பாட்டை 20ம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தோடு ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமானது. 

20வது அரசியலமைப்பு சீர் திருத்தத்தில் மு.கா தலைவர் எதிராக வாக்களிக்க, அக் கட்சியின் ஏனைய நான்கு பா.உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனை அவர்கள் மு.கா தலைவர் ஹக்கீம் கூறியே, தாங்கள் செய்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூறியது சரியாக இருக்கும் என்பதை பல விடயங்கள் உறுதி செய்திருந்தன. இவர்களை மு.கா தலைவர் நேரடியாகவே நியாயப்படுத்த முனைந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. இது இவ்வாறிருக்க, இம் முறையும் மு.கா தலைவர் ஹக்கீம் எதிராக வாக்களிக்க, ஏனையோர் ஆதரவாக வாக்களித்திருக்கலாம். அவ்வாறு வாக்களித்திருந்தால், மீண்டும் மு.காவின் பா.உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் தூசிக்கப்பட்டிருப்பார்கள்.

" நாங்கள் (மு.காவின் பா.உறுப்பினர்கள் ), நீங்கள் ( மு.கா தலைவர் ) சொல்வதை கேட்டு, நடந்து மக்களிடம் ஏச்சு வாங்குவது. நீங்கள் எதிராக வாக்களித்து நல்ல பிள்ளையாவதா...? " என்ற கேள்வியின் அடிப்படையிலேயே, " எல்லோரும் ஒன்றாக வாக்களிப்பை தவிர்ப்போம் " என்ற முடிவுக்கு வந்திருக்கலாம் என்றே, இதனை நினைக்க தோன்றுகிறது. போலி முகத்தை நீண்ட நாட்கள் தொடர இயலாதல்லவா?

இவர்கள் அனைவரும் நடு நிலை வகிக்க, மு.காவின் தலைவர் மாத்திரம் எதிர்த்து வாக்களித்திருந்தால், இவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுத்திருக்கும். தற்போது அ.இ.ம.கா துறைமுக நகர சட்டத்தை ஆதரித்தவர்களை நீக்கியுள்ளதால், இவர்களையும் நீக்க வேண்டும் என்ற மக்கள் அழுத்தம் வலுத்திருக்கும். அ.இ.ம.காவின் குறித்த தீர்மானத்தை மு.காவின் தலைவர் நன்கு அறிவார் என்பது குறிப்பிடத்தக்கது. மு.காவின் தலைவர் ஹக்கீம் உட்பட மு.காவின் பா.உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தீர்மானத்தை எடுத்தால், இதுவே கட்சியின் தீர்மானமென கட்சியின் செயலாளரை வைத்து அறிக்கையும் விட்டு விட்டால், அனைத்து விமர்சனங்களும் முற்று பெற்றுவிடும்.

இலங்கை முஸ்லிம்களிடத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற இரண்டு கட்சிகள் உள்ளன. இது இரண்டும் ஒரே தீர்மானத்தை எடுத்தால், அது முழு முஸ்லிம்களின் தீர்மானமாக அமையும். அ.இ.ம.கா துறைமுக நகர சட்டத்தை எதிர்க்கும் முடிவை பல நாட்கள் முன்பே எடுத்திருந்தது. மு.காவின் உயர்பீடம் துறைமுக நகர சட்டத்தை எதிர்க்கும் முடிவை  எடுத்தாலோ அல்லது மு.கா தலைவர் ஹக்கீம் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தாலோ, இச் சட்டத்தை இரு கட்சிகளும் எதிர்த்ததாகிவிடும். மு.காவின் உயர்பீடம் எந்த முடிவையும் எடுக்காமல், மு.காவின் தலைவர் நடுநிலை வகித்ததால், இது சரியா, பிழையா என்ற விவாதம் முஸ்லிம்களிடையே தோன்றியுள்ளது. ராஜபக்ஸ அரசின் மீது கரும்புள்ளி ஏற்படாது காத்தலும் நடுநிலை வகிப்பின் காரணங்களில் ஒன்றாகும்.

20ஐ மு.காவின் பா.உறுப்பினர்கள் ஆதரித்ததன் பின்னால், உயர்பீடத்தை இறுதி நாளில் கூட்டி குழப்பியடித்ததன் பின்னால், துறைமுக நகர சட்டத்தின் போது நடுநிலை வகித்ததன் பின்னால் மு.காவின் தலைவர் ஹக்கீமே உள்ளார் என்பது துல்லியமாக உண்மை. இதனை மேலும் பல விடயங்கள் மூலமும் நிறுவ இயலும். நடிப்பே வாழ்க்கையாகிவிடாது. கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வரத் தானே வேண்டும்.


துறைமுக நகர சட்டம்,ஏன் ஹக்கீம் வாக்களிப்பை தவிர்த்தார்...? துறைமுக நகர சட்டம்,ஏன் ஹக்கீம் வாக்களிப்பை தவிர்த்தார்...? Reviewed by Editor on May 23, 2021 Rating: 5