
(றிஸ்வான் சாலிஹூ)
முஸ்லிம்களின் தலை நகரமாக கருதப்படுகின்ற கல்முனை நகரை கபளீகரம் செய்ய தங்களால் ஆன எல்லா முயற்சிகளும் செய்து வரும் தமிழ் எம். பிக்கள் ( அரச ஆதரவு, அரச எதிர்ப்பு) வெற்றி பெற முடியாமல் தடுத்து வரும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் வாழ்த்துகின்றோம் என்று அரசியல் செயற்பாட்டாளர் எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாத் தெரிவித்துள்ளார்.
கல்முனை நகர் தொடர்பான தெளிவுகள் முஸ்லிம் நலன் ஆர்வலர்கள் எல்லோருக்கும் உள்ள நிலையில், அவ்விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பவர்கள் மீது மீண்டும் மீண்டும் குறை கூறுகின்ற செயற்பாடானது அரசியல் ரீதியில் முஸ்லிம் சமூகத்தை பிழையான வழியில் முன் கொண்டு செல்கின்ற நடவடிக்கையாகும்.
முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களில், கல்முனை விவகாரம் என்பதற்காக இவ்விடயத்தை தள்ளி வைத்து நிற்பவர்கள், ஹரிஸ் எம். பி மீதான தனிப்பட்ட கோபமுள்ளவர்கள், அதிமேதாவி என தங்களை தாங்களே எண்ணிக் கொள்வோர், தமிழ் தலைமைகளின் ஏஜெண்டுகள், மற்றும் அரசியல் ரீதியில் கள நிலவரம் புரியாதவர்கள், உச்சாப்பு விரும்பிகள் என ஒரு வகையினர் இவ்விவகாரத்தை இழிவு படுத்தி வருவது மிக மோசமான மன வருத்தத்திற்குரிய விடயமாகும். அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது இன்னும் ஒரு படி மேலான வருத்தத்திற்குரிய தாகும்.
ஜனாஸா எரிப்பு தொடர்பிலும் இவ்வாறான ஒரு அற்ப மனோ நிலையுடன் இவர்கள் கருத்து வெளியிட்டு வந்தமை வெளிப்படையானதாகும்.
இன்று அரசியல் ரீதியில் முஸ்லிம்களின் தேவைகள், உரிமைகள் தொடர்பில் பல காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வரும் அரசியல் தலைமைகளை இவ்வாறு சொந்த அபிலாசை களுக்காக இழிவு படுத்துவது நமது அரசியல் பலத்தை இழக்கச் செய்வதற்கான முஸ்தீபு என்பதுடன் அரசியல் நாகரீகத்திற்கும் அப்பாற்பட்டது. அல்லது பிரதேச வாதத்தின் உச்சக் கட்டமாகும்.
மேலும், கல்முனை முஸ்லிம்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடக்கூடாது என வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து சதிக் கூட்டு வைத்துள்ள சிலரும் இதற்கு பின்னணியில் செயற்படுகின்ற மையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த அரசு காலத்திலும் கல்முனை நகரை தாரைவார்க்க இரவோடு இரவாக இவர்கள் தயாரானவர்கள்.
முஸ்லிம் சமூகம் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை அரச இயந்திரங்களின் உதவியுடன் செயற்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களை விட நமது பிரச்சினைகளை கலந்து ஆலோசிக்க தகுதியானவர்கள் யார் ? நமது சமூகம் கடந்த சாத்தானிய தாக்குதலின் பின்னர் இந்நாட்டில் எந்த இடத்தை கை இழந்துள்ளது ? இப்போது நமது சமூகத்தை யாரால் கையாள முடியும் ? நமது சமூகத்தில் உண்மையான அக்கறை யுள்ளவர்கல் இதற்கான தங்களால் முடியுமான (remedial ) பரிகார நிலையை பிரேரிக்க முடியும். அவ்வாறு முடியாதவர்கள் முடியுமானவர்களை ஊக்கப்படுத்த முடியும்.
தனிப்பட்ட நபர்களை நாக்கூசாமல் விமர்சனம் செய்வதும், இட்டுக்கதைகளை வெளியிடுவதும், மற்றவர்களோடு மூட்டி விடுவதும் அரசியல் என்று பொருள்படாது. எதிர்கால சந்ததியினர் உங்களின் அரசியல் நாகரீகத்தின் பிம்பங்களை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உங்களின் வசனப் பிரயோகங்களை உங்கள் மகனும், மகளும் சேர்ந்து வாசிக்க முடியுமான அளவுக்கு பாவியுங்கள் அவர்களிடம் அசூசையாகி விடாதீர்கள். ஆரோக்கியமான கருத்தாடல்களை ஏற்பாடு செய்யுங்கள். விவாதிப்போம், சாதிப்போம்.
நாம் எதிர்க்க வேண்டிய போராட வேண்டிய களம் நமக்கெதிரே நீண்டு கிடக்கின்றது. சமூகத்தின் சக்தி வீணடிக்கபடுகிறது. பலம், பலயீனம் புரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடக்கூடாது என்று நம்மை எரியவைத்து இன்பம் காணும் கயவர்கள் யார் என்பதை இனங்கானுங்கள்.
பலமான பின்னணி கொண்ட டயஸ்பொரா, பழுத்த அரசியல்வாதிகள், இனவாத நெருப்பு, பெரும்பான்மை நெருக்குவாரம், அதிகார மாபியா, பிரதேசவாதம் என்று நம் மீது சுமத்தப்படும் மன நிலை திணிப்புகளை நாம் தெளிவு கண்டிருக்கிறோம்.
கல்முனை மண்ணில் ஒரு இம்மியளவும் இழந்தாலும் அது முழு சமூகத்தின் இழப்பு, கல்முனை மக்கள் இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களின் அழைப்புக்காக முழு சமூகமும் காத்திருக்கின்றது. கல்முனை சமூகம் சமய நிறுவனங்கள், புத்தி ஜீவிகள், சமூக நிறுவனங்கள் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன் கொணர வேண்டும். அரசியல் நரிகளுக்கு எதிராக சுயாதீன தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். தலைமையின் கரங்களை பலப்படுத்த வேண்டும். உங்களுடன் கை கோர்க்க முழுச் சமூகமும் தயாராய் இருக்கின்றது என்று அரசியல் செயற்பாட்டாளர் அன்வர் நெளஷாத் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
May 07, 2021
Rating: