அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று (15) சனிக்கிழமை குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சென்று கட்சியின் தலைவரை சந்தித்து, அதன் பின்னர் சந்திப்பு தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கருத்து தெரிவிக்கையில்,
நானும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அவர்களும் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு இன்று சென்று தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களைச் சந்தித்தோம். கட்சி விடயங்கள் சம்பந்தமாக நிறைய விடயங்களை எம்முடன் பேசினார். அரசியல் அதிகார பீட உறுப்பினர்கள் முதற்கொண்டு பலரையும் நினைவு கூர்ந்தார். சகலருக்கும் தனது ஸலாத்தை எத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதுவரைக்கும் எந்த விதமான விசாரணைகளும் நடை பெறவோ வாக்குமூலங்கள் பெறப்படவோ இல்லை என்றும் தன்மீது எந்தக் குற்றச் சாட்டுகளும் தெரிவிக்காத நிலையிலேயே தம்மை அவர்கள் தடுத்து வைத்துள்ளனர் என்பதையும் சொன்னார். தன் மீது குற்றம் சாட்டுவதற்கு தான் எந்தக் குற்றமும் இழைத்திருக்கவில்லை என்று தைரியத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஏனென்றால் கடந்த காலங்களில் அவர்கள் தம்மிடம் பலமுறை வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள், இனி என்னிடம் கேட்பதற்கு அவர்களுக்கு எதுவும் கிடையாது, என்னிடமிருந்து எவற்றையெல்லாம் அவர்கள் அறிய வேண்டுமோ அவை அனைத்தையும் அவர்கள் ஏற்கெனவே கேட்டு முடித்து விட்டார்கள் என்றார்.
அவருடைய அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். அநேகமாக வரும் வாரம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படலாம் என்று நம்புகிறேன். இதன் விபரங்களை சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெளிவு படுத்தினார்.
கட்சி முக்கியஸ்தர்கள், அங்கத்தவர்கள் அனைவருக்கும் தைரியத்தை வழங்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். யாரும் எதற்கும் கலங்காமல் உறுதியுடன் இருக்கும் படி சொன்னார். தனக்காகப் பிரார்த்தித்தவர்கள், பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தனது நன்றியறிதலைத் தெரிவிக்குமாறும் பிரார்த்தனையில் தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதுடன் தனக்காகத் தொடர்ந்து பிரார்த்திக்குமாறும் வேண்டு கோள் விடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.
தலைவர் பற்றி சொல்லும் எம்.எஸ்.எஸ். அமீர் அலி!!!
Reviewed by Editor
on
May 15, 2021
Rating:
