(றிஸ்வான் சாலிஹு)
கொவிட்-19 மூன்றாவது அலை காரணமாக அவதிப்படும் மக்களுக்கு உதவும் முகமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் வழிகாட்டலிலும் பங்களிப்பிலும் ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த நிவாரண நிதியத்தின் மூலம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (20) அட்டாளைச்சேனையில் நுஜா அமைப்பின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தலைமை உரையாற்றிய ஊடகவியலாளர் அறூஸ் கருத்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் பதவியேற்று இன்னும் ஒரு வருடம் பூர்த்தி செய்யாத நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு முடியுமான வரை அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றார். இன்று ஊடகவியலாளர்களுக்கு இந்த நிவாரண பொதிகளையும் கூட வழங்கியது, அவரும் கூட ஒரு ஊடகவியலாளராக இருந்தமையினால் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கறித்தவர் என்ற அடிப்படையில் தான் ஆகும்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யாத இந்த விடயத்தை அவர் முன் வந்து ஊடகவியலாளர்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கியமையானது அவரின் நற்காரியங்களில் ஒன்றேன குறிப்பிட முடியும். தற்போது இருக்கும் அரசாங்கத்துடன் முஷாரப் எம்.பி மக்களுக்கு பயன்தரும் விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மக்களுக்கு பிரச்சினைகள் வரும் விடயங்களில் இருந்து ஒதுங்கி நடக்கக்கூடியவராகவும் இருந்து இந்த மக்களின் துயர் துடைக்கும் ஒருவராகவும் காணப்படுகின்றார்.
எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளருக்கு முடியுமான வரை உதவிகளை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் செயலாளர் ஊடாக இந்த செய்தியை அவருக்கு எத்தி வைக்கிறேன் என்பதோடு, இங்கு கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களினும் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது தலைமை உரையில் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் வை.எல்.நியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஊடகவியலாளருக்கு நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தார்.
அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:







