(றிஸ்வான் சாலிஹு)
சாய்ந்தமருது பிரதேசத்தில் கோவிட் 19 மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வெளியிடப்பட்ட நகர சபை வர்த்தமானியை உடனடியாக அமுல்படுத்தி விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்படல் வேண்டும் என்று பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களைப் போலல்லாது தற்போதய கோவிட்-19 நிலமைகள் மிகவும் பொறுப்புமிக்க எதிர்பார்ப்புகளை எம்மத்தியில் தோற்றுவித்தது மட்டுமல்லாது, ஒவ்வொரு பிரதேசமும் மிகவும் பொறுப்புடன் தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டும் என்பது இன்று தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் விடயமாகும்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் தனியான பிரதேச செயலகம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் காணப்பட்டாலும், பல கோவிட் மரணங்கள் ஏறப்பட்டுள்ள நிலையில் எதிர்கால நன்மை கருதி பல முன்னோக்கிய திட்டமிடல்கள் நீண்டகால திட்டமிடல்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர்கள் இருந்தும் கூட அவர்கள் அழைக்கப்படாமல் கோவிட் 19 கட்டுப்பாடு மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான கூட்டங்கள் அனைத்தும் தனியாக சாய்ந்தமருது பிரதிநிதிகள் எவரும் இல்லாமலே நடைபெறுகின்றது.
இவ்வாறான நிலமை எமது பிரதேசம் மேலும் மேலும் திட்டமிட்டு ஒரு கட்சியினால் பழிவாங்கப்பட்டு வருகின்றமையினையும், மாற்றான்தாய் மனோனிலையில் இருந்து கவனிக்கப்படுவதையும், மேலும் பின்னடைய வைக்கும் நடவடிக்கையுமாகும்.
இதற்கு முக்கிய காரணம் சாய்நதமருது, ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்து இணைந்து செயற்பட்டது மட்டுமல்லாது, அரச சார்பில் போட்டியிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கும் ஆதரவாக செயற்ப்படதேயாகும்.
எனவே இவ்வாறான நிலமை இன்று நேற்று அல்ல சாய்ந்தமருது நகரசபை கோரிக்கை ஆரம்பித்த நாள் முதல் நடைபெறுகின்ற விடயமாகும்.
இதன் மூலம் எமது மக்களுக்கு உள்ளூராட்சி சபைகள் மூலம் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமலும், தேவையான நேரத்தில் சமூக நலத் திட்டங்கள் பலவற்றை செயற்படுத்த முடியாமலும் உள்ளது.
கல்முனை மாகர சபை பிரதேசம் ஒரு தேர்தல் தொகுதியாக காணப்படுகின்றது. இதனால் பல பிரதேசங்களின் தீர்மானங்களை ஒருவர் மெற்கொள்ளமுடியாது. ஆனால் கல்முனையில் தனித் தீர்மானத்தை பின்பற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனவே இந்நிலையில் இருந்து விடுபட எமது நகர சபையை உடனடியாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அமுல்படுத்துவதுடன், எதிர்வரும் 2022ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி மலரவிருக்கும் உள்ளூராட்சி சபைக்கு முன்னோடியாக சாய்ந்தமருது பிரதேசம் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அத்துடன் எதிர்கால நகர சபைக்கான கட்டிடம் ஒதுக்கீடு செய்து அது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சகல தரப்பினரும் வேற்றுமையை மறந்து ஒன்றிணைந்து எமது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அதாஉல்லா அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்க விரும்புகின்றேன் என்று பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சலீம் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
June 23, 2021
Rating:
